உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று.
சிலருக்கு வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், தசைகள் பெருத்து காணப்படும். சிலருக்கு வயிற்றுப்பகுதியில் தசைகள் தொங்கும். அப்படியிருப்பவர்களுக்கு, வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சில சிறப்பான ஜூஸ்கள் உள்ளன.
நெல்லிக்காய் ஜூஸ்
தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழும்புகளை குறைக்க முடியும். இதனால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். இது ஆயுர்வேத மருத்துவத்திலே கூறப்பட்டுள்ளது.
மசாலா பால்
பாலுடன் மஞ்சள் மசாலா சேர்த்து பருகும் போது உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. தவிர, மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் கபம் போன்றவற்றுக்கும் இது நல்ல தீர்வளிக்கிறது.
இஞ்சி டீ
உடல் எடைக் குறைப்பில் மற்றுமொரு சிறந்த பானம் இஞ்சி டீ. இது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்கிறது.
கிரீன் டீ
தினமும் கிரீன் டீ பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.
இதன் பலன்கள் முழுவதும் கிடைக்க சர்க்கரையை தவிர்க்க வேண்டியது அவசியம். தேவை என்றால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
ப்ளேக் காபி
ப்ளேக் காபி அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயை போலவே, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் பானமாக திகழ்கிறது.
காய்கறி ஜூஸ்
காய்கறி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. இதனால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை வழிநடத்தும் தகுதி சின்ன அத்தை சசிகலாவுக்கு இருக்கிறது என்று கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இன்று அதற்கு எதிர்மாறாக பேசியுள்ளார்.
21.12.2016 அன்று பேசிய அவர், எனது அத்தை ஜெயலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்தவர் சின்ன அத்தை சசிகலா. அதிமுக கட்சியை வழிநடத்தும் பொறுப்பினை சின்ன அத்தை சசிகலா ஏற்றுக்கொண்டால் அதனை நான் வரவேற்கிறேன். அவர்கள் நிச்சயம் இதனை திறம்பட செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என முழுக்க முழுக்க சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில், 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று (21.04.2017) பேசிய தீபக், சசிகலா குடும்பம் ஒதுங்கிவிட்டது என்பதெல்லாம் கிடையாது. ஒரு பதவியில் இருந்துகொண்டு ஒதுங்கிவிட்டோம் என்று கூறுவதை விட அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
எங்கள் சொந்த அத்தையாக இருந்தபோது நாங்களே அனைத்தையும் விட்டுக்கொடுத்தபோது, தினகரனுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் கட்சியில் இருந்து ஒதுங்கிகொள்ள வேண்டியது தானே என கூறியுள்ளார்.
யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.
இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு கடும் வெப்பமுடனான காலநிலையே காரணம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்திலிருந்து முன்னர் அதிகளவு தேங்காய்கள் குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது அது குறைவடைந்துள்ளதுடன், இருபாலை, நீர்வேலி, சிறுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தே சந்தைக்கு எடுத்துவரப்படுவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
புத்தளம் போன்ற வெளிமாவட்டங்களிருந்து தற்போது யாழ்.குடாநாட்டிற்குத் தேங்காய்கள் எடுத்துவரப்படுவதில்லை எனவும், தென்மராட்சிப் பிரதேசத்தில் விளைவிக்கப்படும் தேங்காய்களும் தற்போது கொழும்பிற்கு அதிகளவில் ஏற்றுமதியாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக யாழ்.குடாநாட்டிலுள்ள சந்தைகள் உட்பட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் திடீர் என்று பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட வாகனங்களின் பாவனை தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பிலியந்தலை பிரதேசத்தில் பயணித்த இவ்வாறான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரியினால் அவ்வாறான அதிகதிறன் கொண்ட வாகன இலக்கமற்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அண்மையில் வெளியான தகவல்களுக்கு அமைய இந்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான மோட்டார் சைக்கிளை பொலிஸார் பரிசோதனை செய்து பறிமுதல் செய்ய அதிக அக்கறை செலுத்துவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
பிலியந்தலை பிரதேசத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா சரக்கு விண்கலத்தை முதன்முதலாக விண்ணிற்கு ஏவியுள்ளது சீனா. சீனாவின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஆளில்லா சரக்கு விண்கலம் லாங் மார்ச் – 7 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது விண்ணில் பறந்து கொண்டிருக்கும் டியாங்கோங்-2 விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சென்றடைந்து, எடுத்துச்சென்ற சரக்குப் பொருட்களை அங்கு இறக்கவுள்ளது இந்த விண்கலம்.
விண்வெளி ஆய்வு நிலையத்திற்குத் தேவையான எரிபொருள், ஆய்வு சாதனங்கள் போன்றவற்றை இந்த விண்கலம் ஏற்றிச் சென்றுள்ளது.
தற்போது விண்ணில் பறந்து கொண்டிருக்கும் டியாங்கோங்-2 ஆய்வு நிலையம் சோதனைக்காக செலுத்தப்பட்டதுடன், அதன் ஆயுட்காலம் வெறும் 5 வருடங்கள் தான் என சீனா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், புதிய விண்வெளி ஆய்வு நிலையத்தை, 10 வருட ஆயுட்காலத்துடன் நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது.
அந்த திட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், முதன்முதலாக ஆளில்லா சரக்கு விண்கலத்தை சீனா செலுத்தியுள்ளது.
பிரான்ஸில் ஓவியர் ஒருவர் கோழி முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொறித்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் சாதனையொன்றையும் படைத்துள்ளார்.
பிரான்ஸைச் சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44), கின்னஸ் சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கு முன்பு இவர் கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 தொன் எடையுள்ள சுண்ணாம்புப் பாறைக்குள்ளும் ஒருவாரம் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்கச் செய்யும் அல்லது இன்குபேட்டர் கருவி மூலம் குஞ்சுகள் பொறிக்கவைக்கப்படுகிறது. ஆனால், இவர் விசேடமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி அடைகாக்கத் தொடங்கினார். 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் (19) அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன.
இதன் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார்.
இவர் முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது 37 டிகிரி வெப்பம் கொடுத்துள்ளார்.
பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்வதற்காக, மர ஆலையிலுள்ள மரத்தூளில் 3 நாட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் பணியாளர்களால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலுள்ள கிஸிலுநடால் மாகாணத்திலுள்ள படோக் நகரத்தில், 25 வயதான பெண்ணொருவர் ஏற்கனவே நான்கு வயதில் ஒரு குழந்தை இருப்பதனால், தனக்கு புதிதாக பிறந்த இரண்டாவது குழந்தையை தனது பெற்றோர் ஏற்கமாட்டார்கள் எனக்கருதி குழந்தையை மரத்தூளில் புதைத்து கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பெண் பணிபுரிந்து வந்த குறித்த மர ஆலையில், மூன்று நாட்கள் கடந்த நிலையில் குழந்தை அழும் சத்தம் கேட்ட ஆலைப் பணியாளர்கள் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பெண் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளவே, அவர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் குறித்த குழந்தையை தாயிடம் ஒப்படைப்பது குறித்தும், பெண்ணிற்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கழிவறைத் தொட்டிக்குள் யுவதி ஒருவரின் கை இறுகிக் கொண்டதால், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கழிவறைத் தொட்டி உடைக்கப்பட்டு அந்த யுவதி மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிறெஸ் ஹெண்டர்சன் எனும் இந்த யுவதி, நியூ கெனே நகரிலுள்ள வீடொன்றுக்கு அண்மையில் குடிபெயர்ந்தார்.
அவ் வீட்டின் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை அவதானித்த அவர், குழாய் பழுதுபார்க்கும் ஊழியர்களை அழைக்காமல் தானே அடைப்பை அகற்றுவதற்கு முற்பட்டார். இதற்காக, கழிவறைத் தொட்டியில் கிறேஸ் ஹெண்டர்சன் தனது கையை நுழைத்தார்.
அப்போது, அவரின் கையிலிருந்த கைக்கடிகாரம் கழிவறைத் தொட்டியின் அடிப்புற வளைவில் சிக்கிக் கொண்டது.
அதனால் கையை வெளியே எடுக்கமுடியாமல் கிறேஸ் ஹெண்டர்சன் தவித்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பின் தீயணைப்பு வீரர்கள் அங்குவந்து கழிவறைத் தொட்டியை கழற்றி எடுத்தனர். அப்போதும் கிறேஸின் கை அதற்குள் சிக்கியிருந்தது.
கிறேஸின் வீட்டு வளாகத்தின் பின்புறத்தில் வைத்து, கழிவறைத் தொட்டியை தீயணைப்புப் படையினர் உடைத்ததன் மூலம் கிறேஸ் ஹெண்டர்சனை அவர்கள் விடுவித்தனர்.
ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை இன்று கண்காணித்தனர். அவர்களின் அறிக்கை சில தினங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட நிபுணத்துவமிக்க 12 உறுப்பினர்கள் இந்த குழுவில் அடங்குகின்றனர். குறித்த பகுதியை 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கண்காணித்ததின் பின்னர், அவர்களின் முதற்கட்ட தீர்மானங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர். மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.நுகேரா தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜப்பான் குழுவினரின் முதற்கட்ட கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்தில் மீத்தேன் வாயு 16 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தீயைப் பற்றவைக்கக்கூடிய பொருட்களின் பாவனையை தவிர்க்குமாறும் இக்குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஜப்பான் நிபுணர்களின் கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்திலுள்ள நீரை அகற்றுவதற்காக நான்கு கட்டங்களின் கீழ் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீத்தேன் வாயு காற்றுடன் கலந்துள்ளமையால் குப்பைமேட்டின் கீழ் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இக்குழுவினர் தெளிவூட்டவுள்ளனர்.
வீதியோரமிருந்த கடைகளில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய லொறியில் சிக்கி சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியிற்கருகில் ஏர்பேடு எனும் பகுதியில் பயணித்த லொறியானது, சித்தூர் வீதி ஓரமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியதால், 20 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் மக்கள் நடமாட்டம்மிகுந்த சமயத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதால், சுமார் 20 பேர் வரையில் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குறித்த பகுதியிற்கு பொறுப்பான பொலிஸார், எதிரே வந்த லொறியின் மீது மோதாமல் தடுப்பதற்காகவே சாரதி லொறியை வேறு திசையை நோக்கி திருப்பியுள்ளதாகவும், இருப்பினும் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்தவர்கள் மீது மோதியுள்ளதாகவும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.
எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடுபூராகவும் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மார்ச் மாதம் அளவில் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்தது. எனினும் இவ்வாரம் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. இதன்காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வரட்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல்,யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான வரட்சியான காலநிலை நிலவுகின்றன.
இந்த வரட்சியான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம்.
இது குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள், வயதானவர்களுக்கான மருத்துவர் வி.எஸ் நடராஜன், குழந்தைகளுக்கான மருத்துவர் ஜனனி சங்கர் மற்றும் இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் சுரேந்திரன்.
கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது இதேயே நாம் பேசிய மூன்று மருத்துவர்கள் குறிப்பிட்டு கூறிய முதல் செய்தி, அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.
அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும்.
மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம். பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.
முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.
ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.
இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.
அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும்.
குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.
கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.
கோடையில் தாகம் அதிகம் எடுக்கும் என்பதால், மண்ணெண்ணெய் போன்ற எரிப் பொருட்களை குடிநீர் பாட்டில்களில் சேகரிப்பதை தவிர்க்க வேண்டும்; சில சமயங்களில் குழந்தைகள் யோசிக்காமல் அதை பருகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதை அறவே தவிர்க்க வேண்டும்.
பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள்தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றுவந்தது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தனர். அதில், தற்போது பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், 2002ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பிரபல நடிகரான பிறகு கலைச்செல்வன் தன் பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும், தங்களை ஒதுக்கிவைத்துவிட்டதாகவும் தாங்கள் மிகவும் சிரமப்படுவதால், பராமரிப்புத் தொகையாக மாதம் அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
கலைச்செல்வனின் பத்தாம் வகுப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அந்தத் தம்பதி, அதிலிருக்கும் அங்க அடையாளங்களை தனுஷிடம் இருக்கிறதா என சோதிக்க வேண்டுமென்று கோரினர்.
இந்த வழக்கு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பதில் அளித்த தனுஷ், தான் கிருஷ்ணமூர்த்தி – விஜயலட்சுமி தம்பதியின் மகன் என்றும், தன்னுடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், பிறகு தானும் தன் தந்தையும் பெயர்களை முறையே கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் என மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்துவந்த உயர்நீதிமன்றம் தனுஷ் நேரில் ஆஜராகி, தனது அங்க அடையாளங்களை மதுரை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கூறியது. அதன்படி தனுஷ் நேரில் ஆஜரானார்.
ஆனால், மேலூர் தம்பதியினர் அளித்த ஆவணங்களின்படி தனுஷின் உடலில் அடையாளங்கள் இல்லையென மருத்துவ நிபுணர்கள் கூறினர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்துசெய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதும், தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் பேசிய மேலூர் தம்பதியின் வழக்கறிஞரான டைட்டஸ், “மரபணு சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்” என்றார்.
“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும்கூட. 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் தனுஷ், “பவர் பாண்டி” படத்தை இயக்கியுள்ளார்.
போராட்டங்களை இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
நேற்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக்காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது..
எந்த ஒரு விடயமாக இருந்தாலும் இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுக்கின்ற போது அது மிக விஸ்வரூபமாக வெளிக்கொணர்ந்து வெற்றியும் அடைவதற்கான சாத்தியப் பாடுகள் அதிகமாகவே இருக்கும்.
கடந்த காலங்களிலே வவுனியாவிலே நடந்த போராட்டங்கள் மலிவுற்று காணப்பட்ட போதிலும் இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து திறம்பட நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்று பார்க்கின்ற நிலைமையில் இருந்தது.
அவ்வாறான போராட்டங்கள் மறுபடியும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது அநாதரவாக இருக்கின்றார்கள். அந்த போராட்டம் இங்கு மறுபடியும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதா? என்ற எண்ணத்தோடு அந்த போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மறுபடியும் இந்த இளைஞர்கள் எங்களுடைய உறவுகளுக்காக இந்த போராட்டத்திலே தங்களுடைய கைகளிலே , தங்களுடைய மனங்களிலே சுமக்கின்ற பொழுது அது மிகவும் வலுவுற்றதாகவே இருக்கும் என நான் அவதானிக்கின்றேன்.
இளைஞர்கள் இன்று அரசியலிலே வருவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. இளைஞர்களை எல்லோரும் கருத்தளவிலே அல்லது பேச்சு வழக்கிலே அரசியல் மேடைகளிலே சொல்லுவார்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டினுடைய முதுகெலும்பாக அவர்கள் இருக்க வேண்டும். நீங்கள் விழுந்து போகின்ற இந்த சமூகத்தை கட்டி காக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் இந்த பேச்சுக்கள் வெறுமனையே மேடையளவிலேயே இருக்குமேயொழிய இந்த இளைஞர்களுக்கு களத்திலே உருவாக்கி கொடுக்க யாருமே அல்ல. மிகவும் தன்னந்தனியாக என்னுடைய இருபத்தியெட்டு வயதிலே தேர்தலிலே களமிறங்கிய நான் என்னால் முடிந்தளவிற்கு சில நன்மைகளை செய்து தற்போது நான் பெயர் சொல்லுமளவிற்கு விளங்கிகொண்டிருக்கின்றேன்.
அந்த வகையிலே இளைஞர்கள் இல்லாமல் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியும், நாட்டினுடைய வளர்ச்சியும் மென்மேலும் உயர்வடையாது. இளைஞர்கள் நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். உங்களுக்காக உறுதுணையாக மேடை பேச்சுக்காக அல்ல உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். உங்களை கைபிடித்து உங்களோடு பயணிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.