வவுனியா பண்டாரிகுளம் மாடசாமி கோவில்-முனியப்பர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இன்று காலை ஒன்பது மணியளவில் வீதியால் நடந்து வந்த வயோதிபர் அப்பகுதியிலிருந்த கடையொன்றினுள் குடிப்பதற்கு நீர் வேண்டி பருகிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து மரணமாகியுள்ளார்.
உக்குளாங்குளத்தை சேர்ந்த துரைராசா கணேசலிங்கம் 63 வயது என்பவரே இவ்வாறு வீழ்ந்து மரணமாகியுள்ளார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் – குருணாகல் வீதியில், மதிரிகம பிரதேசத்தில் கால்வாய்க்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தலையில்லா சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இது குறித்து பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன்படி தலையில்லா சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் குறித்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சடலத்தின் தலையா இது என்பதை இனங்காண்பதற்காக மரபணு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆரம்ப மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் பல பாகங்களிலும் பாரிய அளவிலான விபத்துக்கள் பதிவாகி வருகின்றதனை தினமும் சமூக வலைத்தளங்களூடாக பார்க்க முடிகின்றது.
தற்போது குறித்த விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதன் முதல்கட்டமாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய 10 விடையங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரமளவில் இதனை வெளியிட்டார்.
இந்த அறிவித்தலில் முகத்தினை முழுமையாக மூடி தலைக்கவசத்தினை அணிவது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மோட்டார் சைக்கிள் பங்குதாரர் சங்கத்தின் செயலாளர் அமரசிங்க முழுமையாக மூடும் தலைக்கவசத்தினை தடை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் அதிகாரிகளுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் தங்களிடம் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தும் பல இடங்களில் போக்குவரத்து பொலிஸார் இடைமறித்து இந்த தலைக்கவசத்தினை அணியக்கூடாது என தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அணிவதால் சமூக விரோத செயல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் போன்றன இடம்பெறுவதாக பொலிஸார் கடந்த காலங்களில் தெரிவித்துவந்தனர்.
இதனை கவனத்தில் கொண்டே முகத்தை மூடும் தலைக்கவசம் அணியக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வர்த்தமானியில் இது குறித்த தெரிவிக்கப்படாத நிலையில் மக்கள் பெரும் அசௌகரியத்தில் உள்ளனர்.
வர்த்தமானியில் குறிப்பிடாத காரணத்தால் முகத்தை மூடும் தலைக்கவசத்தை அணிந்து செல்லும் போது போக்குவரத்து பொலிஸார் இடை மறித்து இதை அணியக்கூடாத என தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் அரசாங்கத்தின் பேச்சினை கேட்பதா ? போக்குவரத்து பொலிஸாரின் கட்டளைகளை மதிப்பதா? அல்லது மோட்டார் சைக்கிள் பங்குதாரர் சங்கத்தின் உதவியை நடுவதா? என்ன செய்வதறியாமல் நிக்கின்றனர்.
இவ்வாறு இருக்க தற்போது மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது பாதுகாப்பான தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை உந்துருளியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எது எவ்வாறாயினும் இலங்கையில் இருசக்கர மோட்டார் வண்டி சாரதிகள் முகத்தினை மூடியவாறு தலைக்கவசம் அணியக்கூடாது என்பதே அரச தரப்பினரின் கருத்தாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சோலையம்மன் கோவிலடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர விடுதுலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர்.இந்திரராசா உட்பட பலர் ஜனாதிபதிக்கான கடித்தினை அனுப்பி வைத்ததுடன் இதுவரை 45 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு தீர்வு வேண்டிய ஜனாதிபதிக்கு கடித்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
தாயக பிரதேசத்தில் கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டிறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இச் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மக்கள் ஆதரவுடன் 9வது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியூடாக, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக பசார் வீதி சென்று, இலுப்பபையடி யூடாக நீதிமன்ற வழியாக போராட்டம் இடம்பெறும் இடத்தினை சென்று நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் எங்கள் தாய்மாரின் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?, காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நிதிவழங்கு, சகல அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய் போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பெருமளவான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசாவும் கலந்து கொண்டனர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் கடந்த 24 நாட்களின் பின்னர் மக்களின் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகளை மூன்று பகுதிகளாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஊடாக மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மக்களின் ஒற்றுமைக்கும் மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் இப்போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைத்து பொது மக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (04.03.2017) 9வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் 7மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட பூப்பந்து வளையாட்டுத்தளம் ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி எஸ்.சி.சந்திரகாஷனினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், இலங்கைக்கான ஓபர் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சூரியகுமாரி, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் சுரேந்திரன், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.03.2017) மதியம் பொலிஸாரின் வாகனமும் மோட்டார்சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானது.
மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த பொலிஸாரின் வாகனத்தினை பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகே அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கில் முந்திச்செல்ல முற்ப்பட்ட சமயத்தில் பொலிஸாரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,
இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்.
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கைமிகும்.
சுப சொப்பனங்கள்.
பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.
வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.
தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.
தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.
புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.
நீர் நிலை கனவுகள்
நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.
நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.
வெள்ளை நாகம் கனவில் வந்தால்,இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது.
வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.
இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.
தீய பலன் தரும் கனவுகள்.
பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.
குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.
குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.
அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.
அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.
எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.
அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.
வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ
ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.
நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது.
அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.
எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.
அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.
காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.
தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.
சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.
ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.
நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன.
இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான்.
கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!
பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.
கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்:
பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.ஏன்
தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.
மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.
வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.
சீனாவில் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் வீடுகளுக்கு அரசிடம் இருந்து அதிக இழப்பீடை பெறும் பொருட்டு அங்குள்ள தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளனர்.
சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால் அதிகப்படியான இழப்பீடை பெற அங்கு வாழும் 160க்கும் மேலான தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
சினாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவின், ஜியாங்பே கிராமத்தை உயர் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலமாக மாற்ற அங்குள்ள 160 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.
எனவே அங்குள்ள தம்பதியினர் விவாகரத்து செய்து தனியாக வாழ்வதாகத் தெரிவித்தால் இரண்டு புதிய வீடுகள் கிடைக்கும். மேலும் குறைந்தபட்சம் 19 டொலர்கள் கூடுதல் இழப்பீடு கிடைக்கும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
அதில் சில தம்பதியினர் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து, சேர்ந்து வாழவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கனடா நாட்டில் கணவனிடம் விவாகரத்து கிடைக்காத மனைவி ஒருவர் தன்னுடைய மகளை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள அல்பேர்ட்டா நகரை சேர்ந்த Laura Coward என்ற தாயார் தான் இந்த கொடூரச் செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
இவருக்கும் இவரது கணவருக்கும் விவாகரத்து பெருவதில் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், மகள் யாருடன் இருப்பது என்ற பிரச்சனையும் இருவருக்கும் இடையில் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மகளுக்கு தாயார் தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின்னர், மகளை தூக்கிச்சென்று காரில் படுக்க வைத்து காரை பூட்டியுள்ளார். காரின் மீது எரிபொருளை ஊற்றிய தாயார் தீயை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இக்கொலை தொடர்பாக கணவர் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த பெப்ரவரி 16ம் திகதி தாயார் குற்றவாளி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட உள்ளதால் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தாயாருக்கு பரோல் வழங்கப்படும் என்ற விசாரணை நிலுவையில் இருந்துள்ளது.
தாயாருக்கு பரோல் வழங்குவது தொடர்பாக தற்போது முடிவாகியுள்ள நிலையில், அவருக்கு இறுதி தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது 11வது வயதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
மனித அறிவை குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாய் விளங்கிறான் ஐதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற மாணவன். தனது 11வது வயதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 12ம் வகுப்பிற்கான உயர்நிலை பொதுத்தேர்வை அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற மாணவன் எழுதி அசத்தியுள்ளான்.
யூசப்குடா பகுதியில் உள்ள தூய மேரி இளநிலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் அகஸ்தியா குடியியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளை ஜீபிளி மலைப்பகுதியில் உள்ள சைதன்யா இளநிலை கலாசலா பள்ளியில் எழுதினான்.
இடைநிலை தேர்ச்சி பெறாத மாணவன் 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நைனா ஜெய்ஸ்வாலின் இளைய தம்பி தான் இந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால்.
அகஸ்தியா தனது 15 வயதில், அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியலில் (French Fry) பல்லி இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணியாக ப்ரியங்கா மோத்ரா என்பவர் தனது மகளுடன் மெக்டொனால்ட் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு வறுவலில் பல்லி இருந்ததை ப்ரியங்காவின் மகள் கண்டுபிடித்துள்ளார்.
உருளைக்கிழங்குடன் சேர்ந்து பல்லியும் வறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ப்ரியங்கா, இதுகுறித்து உணவகத்தின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், மேலாளரோ, Sorry என்ற வார்த்தையை மட்டும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ப்ரியங்கா, இந்த வறுவலை நாங்கள் சாப்பிட்டிருந்தால் எங்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
ஆனால், உணவகத்தின் அலட்சியமான பதில் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார். மேலும், ப்ரியங்காவின் கணவர் கூறியதாவது, இதுகுறித்து உணவகத்தின் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்படவில்லை என்றும் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், உணவகத்தின் நிர்வாகம் சார்பில், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.