வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்வு!!

 
வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்ப பயனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தென்னங்கன்றுகள் விங்கும் நிகழ்வு நேற்று(01.03) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு சங்க சமாச அலுவலகத்தில் நடைபெற்றது.

சம்மேளனத் தலைவர் நா. சனாதிராசா, சம்மேளன செயலாளர் திருமதி.எஸ்.பரந்தாமன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.ரவீந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள சிக்கன கூட்டுறவு சங்க அங்கத்தவர்களின் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 100 குடும்பங்களுக்கு 5 தென்னைமரக்கன்று படி 500 தென்னைமரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த மகன் பரிதாபமாக சுட்டுக்கொலை : தந்தை கதறல்!!

 
எனது மகன் நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த நிலையில் சடலமாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன் என களுத்துறைச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் தந்தையார் ப.சிவானந்தம் தெரிவித்தார்.

எனது மகன் தர்மிகன் அடுத்தவருடம் நியுசிலாந்து செல்லவிருந்தவர். அதற்கான ஆங்கில உயர்பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்பதற்காக எதிர்வரும் 10ஆம் திகதி வருவேன் என்றுகூறி வேலைக்குச் சென்றவரை களுத்துறை ஆஸ்பத்திரியில் சடலமாப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன் என தந்தை தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு சடலத்தை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குடும்பத்தினரிடம் கையளித்த நிலையில், தந்தை தனது கவலையை வெளியிட்டார்.

எனது மூத்தமகன் தர்மிகன். வெளிநாடு செல்லவேண்டும் என்பதற்காக ஆங்கில உயர்பரீட்சை எழுதுவதற்கு வசதியாக கொழும்பில் படிக்கலாம் என்பதற்காக சிறைச்சாலைத் திணைக்களத்தில் இணைந்து பணியாற்றினார். அவருக்கு சிறைச்சாலை நிருவாகமும் போதிய ஒத்துழைப்பையும் வசதியையும் வழங்கியிருந்தது.

அடுத்தவருடம் அவர் நியுசிலாந்து செல்லவிருந்தார். அதற்காக இந்தவருடம் ஏப்ரல் மாதத்தோடு தொழிலை விட திட்டமிட்டிருந்தார். அவர் சேவையில் இணைந்து ஒருவருடமும் 08 மாதங்களுமாகின்றன. மாத்தறை மகசின்

களுத்துறை சிறைச்சாலைகளில் அவர் கடமைபுரிந்துள்ளார். கடந்தவாரம் சிவராத்திரி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து சென்றார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் எனது போனுக்கு களுத்துறைசிறைச்சாலை பஸ் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. எனது மகனும் அங்கு வேலை செய்வதால் உடனடியாக களுத்துறை சிறைச்சாலையை தொடர்பு கொண்டேன். எனினும் அங்கு பதில் இல்லை.

இனத்போது எனது மகனோ வேலை செய்யும் யாழ்ப்பாண நண்பரொருவர் மகனின் சூட்டுச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் கல்முனை சிறைச்சாலை அதிகாரியும் ஊர்ஜிதப்படுத்தினார்.

இதனையடுத்து களுத்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக சென்றோம். நாம்செல்ல முன்னரே அங்கிருந்த சட்டவைத்திய அதிகாரி சென்று விட்டார். அதனால் அன்றிரவு அடையாளம் காட்டமுடியவில்லை

காலையில் சென்று மகனை அடையாளம் காட்டினோம் .பின்பு பிரேதபரிசோதனை நடாத்தப்பட்டது. பி.ப.2 மணியளவில் சடலத்தை விடுவித்தார்கள். சிறைச்சாலைத்திணைக்களத்தினர் சடலத்தை களுத்துறையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.

இதனையடுத்து சடலம் காரைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை கண்ணீரோடு மேலும் கூறினார்.

பயிற்சி முகாமில் நிர்வாணமாக்கப்பட்ட 6 மாணவர்கள் : சந்தேகநபர்கள் மூவர் கைது!!

ரன்டெபே கெடட் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆறு மாணவர்களை நிர்வாணப்படுத்தி தொலைப்பேசியில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸ் பிரிவின் பிட்டவல பிரதேச பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கெடட் பாடசாலையின் சிரேஷ்ட மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெடட் பயிற்சிக்காக முகாமில் கலந்துக் கொள்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் தாம் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்ததாக 6 மாணவர்களும் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதிபரும் அந்த வீடியோ காட்சியை பார்த்துவிட்டு பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

பின்னர் வத்தேகம பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களான மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரன்டெபே பயிற்சி முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையினால் அந்த பிரதேசத்தின் பொலிஸாரிடம் மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு லட்சம் ரூபாயிலான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் மீண்டும் ஜுலை மாதம் மூன்றாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குடும்பத்தில் அனைவரும் குள்ளர்கள் : அதிசயக் குடும்பம்!!

 
ஹைதராபாத்தில் வசிக்கும் குள்ள மனிதர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால் இவர்களை அடையாளப்படுத்தும் குள்ளர்கள் என்ற வார்த்தையே இவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Achondroplasia என்ற எலும்பு வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக, இவர்களுக்கு உடல் வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குடும்பத்தின் மூத்தவர் ராம் ராஜ்(52).

இவர், ஹொட்டல்களில் நடைபெறும் திருமணத்திற்கு வரவேற்பாளராக நிற்கும் பணியை செய்து வருகிறார்.

தனது குடும்பத்தின் வாழ்க்கை நிலை குறித்து இவர் கூறியதாவது, எனக்கு வேலை கிடைப்பதே மிக சிரமமான ஒன்று. உங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி தால் எல்லோரிடம் இருந்தும் வருகிறது.

அதுமட்டுமின்றி, சாலைகளில் எங்கள் குடும்பத்தினர் நடந்து செல்கையில், பிறர் எங்களை பார்த்து சிரிப்பார்கள், அதற்கு அடுத்ததாக எதற்காக இப்படி குள்ளமாக இருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என்று நக்கலான கேள்வியை கேட்பார்கள்.

இந்த கேள்விகள் எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். திருமணங்கள் நடக்கும்போது திருமண வரவேற்பாளர் பணிசெய்வேன்.

அந்த இடைப்பட்ட நாட்களில் எனது உறவினரின் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்தம் 11 பேர் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம்.

எனது சகோதரிகள் டெய்லர் வேலை செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கம் வருவாயை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

உலகின் மிக கொடூர முகம் கொண்ட மனிதர் : உருக வைக்கும் வீடியோ!!

உலகின் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது பல அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிட்டதட்ட ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ஹுனான் மாகாணம், Yulan கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ஹூவாங் சுன்சய் என்றழைக்கப்படும் சீனா யானை மனிதன், இவர் நான்கு வயதில் உலகின் மிக மோசமான அறியப்பட்ட நியூரோஃபிப்ரோடோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சுன்சயின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் நோய் தீவிரமாக அவரது முகத்தில் 15 கிலோ அளவிற்கு கட்டி வளர்ந்துள்ளது.

இந்நிலையில், சுன்சய்யை சோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் அவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, 2007ம் ஆண்டு சுன்சய்க்கு முதன் முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .பின்னர், நன்கொடையாளர்களின் உதவியால் அவருக்கு மேலும் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சுன்சய் நோயிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டி வளர தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது, ஹுவாங் அறிகுறிகள், வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இருப்பினும் பலவீனமாக்கும். கட்டி மீண்டும் மெதுவாக வளர்ந்து வருகிறது.

ஆனால், இப்போதைக்கு அவர் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை : ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக்கோரி மேலூர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராக கூறி உத்தரவிட்டிருந்தது.

இதன்படி ஆஜரான தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் தனுஷ் வழக்கு பரபரப்பை கிளப்பியுள்ளது.

ரஜினி, கமல், அஜித் செய்ததை முதன்முறையாக செய்யும் விஜய்!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றார்கள்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் மூன்று முகம் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அதேபோல், அபூர்வ சகோதர்கள் படத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அஜித்தும் வரலாறு படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இதுவரை விஜய் 3 வேடங்களில் எந்தப் படத்திலும் நடித்தது கிடையாது. இந்த படத்தில்தான் முதன்முதலாக விஜய் 3 வேடங்களில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த உபகரணங்களை வாகனங்களுடன் பொருத்தி, பாரிய பிரதேசமொன்றை உள்ளடக்கும் வகையில் ஒரே முறையில் புகை விசிறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாரிய புகை விசிறும் உபகரணங்களை வாகனங்களுடன் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 43.37 வீதமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதுதவிர டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வரும் கிண்ணியா வைத்தியசாலைக்கு விசேட வைத்திய குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 24 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : 20 பேர் கைது!!

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார்.

திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகின்றார்.

சாதனைகள் படைப்பதில் அதீத ஆர்வம் கொண்ட தனது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இன்னொரு சாதனை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். அதன்படி இவர் தற்போது ஒரு நிமிடத்தில் 145 தேங்காயை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

திருச்சூரில் உள்ள சோபா சிட்டி மாலில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 145 தேங்காய்களை தன் வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை படைத்துள்ளார்.

இவர் முன்னதாக 124 தேங்காய்களை ஒரு நிமிடத்தில் உடைத்து சாதனை செய்திருந்தார். அதோடு, பேருந்தை கயிறால் கட்டி பல்லால் 50 மீற்றர் தூரம் இழுத்து செல்வது, வேகமாக ஓடும் மின் விசிறியை வெறும் கையால் நிறுத்தியது உள்ளிட்ட சாதனைகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி உணவு 20 லீட்டர் பால், 10 கிலோ அப்பிள் : எருதின் விலை 9 கோடி : ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கிறது!!

தினமும் 20 லிட்டர் பால், அப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள் உணவு. 5 கி.மீ. நடைபயிற்சி. இப்படி இருக்கிறது யுவராஜின் வாழ்க்கை. ஆமாம் ஹரியாணாவைச் சேர்ந்த கரம்வீர் சிங் வளர்க்கும் எருதுதான் யுவராஜ். இதன் மதிப்பு இப் போது 9.25 கோடிக்கு மேல் உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் வளாகத்தில் கிராமோதயா மேளாவுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய் துள்ளது. இந்தப் பகுதி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லையில் உள்ளது. இங்கு நடக்கும் உழவர் சந்தைக்கு வந்த ஒரு எருது அனைவரையும் கவர்ந்தது. அதன் பெயர் யுவராஜ்.

யுவராஜுக்கு வயது 9, எடை 15 குவிண்டால் (150 கிலோ), 11.5 அடி நீளம், 5.8 அடி உயரம். மிகவும் வீரியமிக்கதாக யுவராஜ் உள்ளதால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில மக்களைப் பெரிதும் கவர்ந் துள்ளது. இதை 9.25 கோடிக்கு வாங்கவும் சிலர் முன்வந்துள்ளனர். ஆனால், யுவராஜை விற்க மறுத்துள்ளார் அதன் உரிமையாளர் கரம்வீர் சிங்.

ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்த கரம்வீர் சிங், யுவராஜ் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது..

யுவராஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றது. குழந்தையைப் போல அதை வளர்த்து வருகிறேன். யுவராஜ் விலை மதிப்பற்றது. யுவராஜின் தீனிக்காக தினமும் 3000 முதல் 4000 வரை செலவிடுகிறேன். யுவராஜிடமிருந்து ஒரு முறை 10 முதல் 14 மி.லி. வரை விந்து எடுக்கப்படுகிறது. அதை அறிவியல்பூர்வமாக நீர்க்க செய்து 700 முதல் 900 டோஸ்கள் வரை மாற்றப்படுகிறது.

அதை சினைக்காக பயன்படுத்த வழங்குகின்றேன். ஒரு டோஸை 500க்கு என்னால் விற்க முடியும். ஆனால், சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலைக்கே யுவராஜின் விந்துவை விற்கிறேன்.

யுவராஜ் மூலம் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சம் வரை சம்பாதிக்கிறேன். அந்தப் பணம் என் குடும்பத்தினர் வைத்துள்ள மற்ற கால் நடைகளை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகிறது. அதே சமயம், யுவராஜை நல்ல விதமாக பராமரிக்க ஏராளமாக செலவிடுகிறேன் என்று கரம்வீர் சிங் கூறினார்.

அப்பிளில் இருந்து காதுகள் வளர்க்கும் விஞ்ஞானி : மருத்துவப் புரட்சிக்கு வித்திடுவாரா?

காதுகள் உள்ளிட்ட மனித உறுப்புகளை அப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மனித செல்களுக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களைப் பொருத்துவதும் மனித உடல் உறுப்புகளை உருவாக்குவதும் கடினமானது மட்டுமல்ல செலவு பிடிக்கக்கூடியதும் தான்.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் செலவுகுறைந்த மாற்று உடலுறுப்புகளை அப்பிள் மூலம் உருவாக்கியுள்ளார்.

அப்பிளிலிருந்து காதுகளை வளர்த்தேன் என்கிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங். ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியராகவும் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங் பணியாற்றி வருகிறார்.

முதலில் அப்பிள்கள் தேவையான உடல் உறுப்பின் வடிவில் செதுக்கப்பட்டு அதன் மரபணுக்கள், செல்கள் அனைத்தும் நீக்கப்படும். இறுதியில் நாரிழைக்கட்டமைப்பு மட்டும் மிஞ்சும்; இந்த நாரிழைக்கட்டமைப்பில் மனித மரபணுக்கள் பற்றி வளரும்.

சோதனைக்கூடத்தில் உரிய உபகரணங்களைக் கொண்டு மனிதசெல்கள் வளர்க்கப்படும். அது காதாக உருவெடுக்கும்.
இந்த காதுகளை விலங்குகளின் உடல் ஏற்றுக்கொண்டதைப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக பெல்லிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசோதனையின் பாதுகாப்பு, நடைமுறை சாத்தியம் குறித்து மருத்துவப் பரிசோதனைகள் நடக்கவுள்ளன. அதில் வெற்றி கிட்டினால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இது மிகப்பெரிய புரட்சியாக அமையும்.

சேதமான உடலுறுப்புகள் மட்டுமல்லாமல் பிறவியில் இல்லாத உடலுறுப்புகளை உருவாக்குவதும் கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

கள்ளக் காதலியை கொன்றவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை!!

தனது கள்ளக் காதலியை கொலை செய்ததாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2008ம் ஆண்டு லெலிமட பகுதியில் வைத்து சந்தேகநபரால் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.இதற்கமைய அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சந்திரனுக்கு 2 பேரை சுற்றுலாப்பயணம் அனுப்பி வைக்கும் SpaceX நிறுவனம்!!

அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்காவின் SpaceX என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாப்பயணம் அனுப்பி வைக்கிறது. இந்த தகவலை SpaceX நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்திற்கு பெரும் தொகை பணத்தை SpaceX நிறுவனத்திடம் முற்கொடுப்பனவு செய்துள்ளனர்.

இதுபற்றி எலோன் முஸ்க் கூறும்போது, “அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால்தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது என்றும் இதற்கு முன்பு யாரும் சென்றிராத வகையில் இந்த 2 பேரும், அதிவேகமாக சூரிய மண்டலத்திற்குள் செல்வார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய 2 பேரின் பெயர் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இருப்பினும், “அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஹொலிவூட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

மில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சிக் காணொளி வெளியானது!!

குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற 27 வயதுடைய பெண் ஒருவரே தொடர்ந்து அழுதுகொண்டிந்த தனது குழந்தையை தரையில் போட்டு காலால் எட்டி உதைத்துள்ளார். அதன் பின்னர் தனது கைகளால் குழந்தையை தூக்கியெறிந்துள்ளார்.

இச்சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த காணொளி மில்லியன் கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளதோடு தாயிற்கு எதிரான கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் படுகாயம் : இருவர் தப்பி ஓட்டம்!!

 
வவுனியாவில் நேற்று (01.03.2017) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழிநுட்பக்கல்லூரிக்கு முன்பாக மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் வவுனியா பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கில் பாலாமைக்கல் வீதியில் திருப்ப முயன்றபோது மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிலுடன் எதிர் எதிரே மோதி விபத்திற்குள்ளாகியது.

இதையடுத்து வவுனியா வீதியிலிருந்து மன்னார் வீதி நான்காம் கட்டைக்கு நெல் கொள்வனவு செய்வதற்காக பின்னால் சென்ற கன்டர் ரக வாகனம் விபத்திற்குள்ளாகி நடு வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியுள்ளது.

எனினும் நேருக்கு நேர் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இரு மோட்டார் சைக்கில்களில் பயணித்த சுஜீபன் வயது 24, அஜந்தன் வயது 21 இருவரும் மோட்டார் சைக்கிலை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பாலாமைக்கல் வீதிக்கு மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றபோது படுகாயமடைந்த எஸ்.குமார்(வயது 28) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தையடுத்து நெளுக்குளம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கில்களும் கன்டர் வாகனத்தில் ஏற்றப்பட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.