வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா பூந்தோட்டம்  மகா வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று (02.02.2017) மாலை வவுனியா லயன்ஸ் கழக மைதானத்தில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், G.T லிங்கநாதன் ஆகியோருடன்,

கெளரவ விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் நடராஜ், உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் சுபசிங்க , வவுனியா மக்கள் வங்கி உதவியாளர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், நான்கு நாட்கள் மைதானங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இவ் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த பாடசாலைச்சமூகத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கினறேன்.

இடைவேளையின் போது இடம்பெற்ற அன்ன நடனம் மிகச்சிறப்பாக இருந்தது. அதை பழக்கிய மற்றும் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். இப்பாடசாலையானது வளங்கள் குறைவான நிலையிலும் மாணவர்கள் பலரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியமை பெருமை தருகின்றது.

தூர இடங்களில் இருந்து வந்து வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள் பலர். அவர்களுக்கு எனது நன்றிகள் .போரின் போதும் உயிரைக்கூட பொருட்படுத்தாது மரங்களுக்கு கீழ் சேவையாற்றியவர்கள் எமது ஆசிரியர்கள். எனவே மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மாணவர்கள் களியாட்டங்களிலும் , தொலைக்காட்சி திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தாது கல்வியில் முன்னேற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போன்று கஸ்டப்படக்கூடாது என்று மாணவர்களாகிய நீங்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தங்களை வருத்தி உங்களுக்காக கஸ்டப்படுகின்றார்கள்.

மாணவர்கள் நீங்கள் அதை உணர்ந்து உங்கள் கல்வியில் முன்றேங்களை பெறவேண்டும். பெற்றோர்களாகிய நீங்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் மூழ்காமல் உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.

ஒரு காலத்திலே முதலாவதாக விளங்கிய எமது மாகாணம் இன்று பின்தங்கியுள்ளது. மாணவர்கள் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. உண்மையில் வன்னி மாவட்ட இளைஞர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்கள் அப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை . பாடசாலைக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் அபராதம்!!

சட்டத்திற்குப் புறம்பாக வேறொரு நிறுவனத்தின் மெய் நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கிய ஆக்குலஸ் என்ற நிறுவனமானது, ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்த மெய் நிகர் ஹெட்செட்களை வெளியிடுவதற்கு வைத்திருந்த கணணி குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஆக்குலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய வரவு செலவு முடிவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.

மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தை!!

கல்பிட்டிய பகுதியில் உள்ள தந்தை ஒருவர் மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நபர் அவரின் மகளின் கல்விக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலையில் கோரப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், அனுமதி மறுக்கப்பட்டதாலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தந்தையுடன் அவரது மகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, காரணம் எதுவுமின்றியே குழந்தையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : நடிகை ரோஜா!!

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் போராடி வெற்றி பெற்றது போல் ஆந்திர மக்களும் போராட வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும், வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர்.

அப்போது பேசிய நடிகை ரோஜா, ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகித்தும் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்துக்கான அறிவிப்பு இல்லை. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேவையானவற்றை கேட்டு பெறாமல் மவுனமாக இருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள்போராடி வெற்றி பெற்றனர். அதுபோல் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக ஆந்திர மக்கள் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.

யுவதிகளை மிரட்டி நினைத்ததை சாதித்த பொலிஸ் அதிகாரி : மடக்கிப்பிடித்த ஊழியர்கள்!!

நீர்கொழும்பு நகரில் உள்ள உடல் பிடிப்பு நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக பிரவேசித்து அங்கிருந்த யுவதிகளின் சேவையை பெற்றுக்கொண்டு கப்பமாக பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் சேவையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த உப பொலிஸ் பரிசோதகர் நீர்கொழும்பு நகரில் இயங்கும் உடல் பிடிப்பு நிலையத்திற்கு சென்று அங்குள்ள முகாமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி இலவசமாக சேவையை பெற்றுக்கொண்டு பணத்தை கப்பமாக பெற்று வந்துள்ளார்.

இலவசமாக சேவையை பெற்றுக்கொள்ளும் இந்த அதிகாரி பின்னர் முகாமையாளரை மிரட்டி பணத்தை பெற்றுக்கொள்வதுடன் மதுபான போத்தலை கேட்டும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அங்கு வந்த பொலிஸ் அதிகாரியை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை பிடித்து நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவில் கடமையாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.

மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

தரம் மூன்றில் கல்விப் பயிலும் 8 வயது மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சிறுவனின் உடம்பில், அடிப்பட்ட 25 அடையாளங்கள் இருந்ததாக சிறுவனின் பெற்றோர் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் வினவிய போது,

“வகுப்பறையை விட்டு மலசலகூடம் சென்று மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய போதே ஆசிரியர் என்னை தாக்கினார்” என அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸா்ர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரழிவை ஏற்படுத்திய ஹிட்லரின் கொடூர ‘ஆயுதம்’ ஏலத்திற்கு!!

அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது.

நாஸிப் படையினரால் ஹிட்லருக்கு பரிசளிக்கப்பட்டிருந்தது இந்தத் தொலைபேசி. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான கட்டளைகளை இந்தத் தொலைபேசி வாயிலாகவே ஹிட்லர் பிறப்பித்ததாகக் கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கும் ஆணைகளையே ஹிட்லர் இந்தத் தொலைபேசி மூலம் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

1945ஆம் ஆண்டு முதல் பேர்லினில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தொலைபேசி, முதன்முறையாக அமெரிக்காவில் ஏலத்தில் விடப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் ஏல விற்பனை நிறுவனமே இதை ஏலத்தில் விற்கவுள்ளது.

சீமன்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த கறுப்பு நிறத் தொலைபேசிக்கு சிவப்பு வர்ணம் பூசப்பட்டதுடன், அதில் ஹிட்லரின் பெயரும் அவரது நாஸிப் படையைக் குறிக்கும் ஸ்வஸ்திக் சின்னமும் பொறிக்கப்பட்டது.

‘ஹிட்லரின் அழிவுச் சாதனம்’ என்று இந்தத் தொலைபேசியைக் குறிப்பிட்டிருக்கும் ஏல நிறுவனம், ‘வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய கொடூர ஆயுதம்’ என்றும் வர்ணித்திருக்கிறது.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்லும் இலங்கையர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இம்முறை அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு இணங்க, பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு 450 அமெரிக்க டொலர்களும், பயிற்றப்படாத ஊழியர்களுக்கு 350 அமெரிக்க டொலர்களும் குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

2017ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட காதலி : அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கல்லூரி வளாகத்திலேயே துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி லக்ஷ்மி (20). இவரும், அதே கல்லூரியின் பழைய மாணவரான ஆதர்ஷும் (26) காதலர்கள். ஆனால், சில காரணங்களால் ஆதர்ஷுடனான காதலை முறித்துக் கொண்டார் லக்ஷ்மி. இதனால் கடும் கோபம் கொண்ட ஆதர்ஷ், லக்ஷ்மியைப் பழிவாங்க தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த கல்லூரியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பெரும்பாலான மாணவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டார்கள். மிகச் சில மாணவர்களே கல்லூரியினுள் இருந்தனர். லக்ஷ்மி தனது சக நண்பியருடன் வகுப்பறையின் வெளியே அமர்ந்திருந்தார்.

அப்போது, திடீரெனக் கல்லூரியினுள் நுழைந்த ஆதர்ஷ், லக்ஷ்மியை நெருங்கிச் சென்று தன் கையில் வைத்திருந்த கொள்கலனைத் திறந்து பெற்றோலை லக்ஷ்மி மீது ஊற்றினார். அதிர்ச்சியில் இருந்து மீண்ட லக்ஷ்மி, அசம்பாவிதத்தை சில நொடிகள் தாமதமாகப் புரிந்துகொண்டதும் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தார்.

எனினும், லக்ஷ்மியைத் துரத்திச் சென்ற ஆதர்ஷ், கல்லூரி வளாகத்தின் மத்தியில் வைத்து லக்ஷ்மியை எட்டிப் பிடித்தார். உடனே, கையில் இருந்த லைட்டரால் லக்ஷ்மி மீது தீயைப் பற்ற வைத்தார். பின்னர் தன் மீதும் பெற்றோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்.

கல்லுரி மத்தியில் இரண்டு பேர் பற்றியெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சிலர், இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் அவர்கள் மீது தீ பற்றியதால் அவர்களும் விலகியோட நேர்ந்தது.

கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அம்பியூலன்ஸ் தீப்பிடித்த காயங்களுடன் லக்ஷ்மியையும் ஆதர்ஷையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

வவுனியாவில் மனைவியை தாக்கிய கணவன் : மனைவி வைத்தியசாலையில்!!

வவுனியாவில் கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பழைய சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது ஆண் பிள்ளையின் தாயான வடிவேல் தமயந்தி 21வயது மீது கணவன் கத்தியால் இன்று (02.02.2017) அதிகாலை 5 மணிக்கு ஒளிந்திருந்து தாக்கியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி தனது கணவனுடன் முரண்பட்டு நீதிமன்ற வழக்கில் மனைவிக்கு கணவனால் மாதாந்தம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது. மனைவி தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

எனினும் சில மாதமாக மனைவிக்கு செலுத்தவேண்டிய தொகையினை வழங்க தவறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

நேற்று தனது மகனை பார்வையிடச் சென்றதுடன் மனைவியின் தந்தையிடம் உங்கள் மகளை வெட்டுவேன் என்று தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை கணவன் ஒளிந்திருந்து மனைவி மீது கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது கணவன் தற்போது கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் படுகாயம்!!

வவுனியாவில் நேற்று முன்தினம் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நேற்று முன்தினம் இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை இரவு தனது கல்னாட்டிகுளம் பகுதியிலுள்ள வயலை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

அங்கு காட்டு யானைகள் நின்றதை அவதானித்து அவற்றை கலைத்துக் கொண்டு சென்றபோது வயலில் வைக்கப்பட்ட கட்டுத் துவக்கில் அகப்பட்டு இரண்டு கால்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வவுனியா இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

 
வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் இன்றிலிருந்து தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து தனியார் பேரூந்தினருக்கும் இ.போ.ச பேரூந்தினருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டு இரு தரப்பினருக்கு இடையில் சமரசம் செய்து வைக்கப்பட்டாலும் பிரச்சினை தீர்வுக்கு வந்ததாகவே இல்லை.

இ.போ.ச ஊழியர்கள் இன்று வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் இன்றைய தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கொழும்பு சென்றிருப்பதால் நாளைய தினம் அவருடன் கலந்துரையாடி உடனடியாக இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வு-2017

வவுனியா  சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லதிறனாய்வு -2017விளையாட்டுப்போட்டியானது நேற்று  01.02.2017புதன்கிழமையன்று பாடசாலையின் அதிபர் திருக.  செல்லதேவன் அவர்களின் தலை மையில் நடைபெற்றது .

பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் G.T.லிங்கநாதன்  ஆகியோரும்  நம்பிக்கை ஒளிநிறுவன திரு.P.சுபாஸ்கரன் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பெற்றோர்கள்  பழைய மாணவரகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேற்படி  பாடசாலையின்  கலைப்பிரிவில்  கல்வி கற்ற மாணவியொருவர்  கடந்த வருடம் 2016 இடம்பெற்ற க.பொ. த  உயர்தர பரீட்சையின் போது பன்னிரண்டு  வருடங்களின் பின்னர் அப் பாடசாலைக்கு  பெருமை சேர்க்கும் விதத்தில்  வவுனியா மாவட்டத்தில் A,2B (district rank -21)  பல்கலைகழகத்துக்கு  தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

 

உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி!!

 
உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது.

குறித்த சிறுமியை பரிசோதனை செய்துள்ள டாக்கா வைத்தியசாலை வைத்தியர்கள் இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலகில் 6 பேருக்கே குறித்த நோய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 6 வயதில் தாயை இழந்த தனது மகளிற்கு வைத்தியர்கள் நல்ல சிகிச்சை ஒன்றை வழங்கி, அவளின் முக அழகை மீண்டும் பெற்று தருவார்கள், என தான் நம்புவதாக சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப்போட்டியில் கலக்கும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!!

பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண றோல் போல் விளையாட்டில் இலங்கை தேசிய அணியும் விளையாடவுள்ளது.

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் , சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றுகின்றனர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றோல் போல் ஆண், பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தன.

பெரியளவிலான வசதிகள் எவையும் இன்றியே இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் குறித்த அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சியில் பிரத்தியேக உள்ளரங்கம் கூட இல்லாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சீனிக்கு தட்டுப்பாடு : கொள்வனவாளர்களினால் சீனி கொள்முதல் நிறுத்தம்!!

 
கொழும்பில் கொள்முதல் செய்யப்பட்டு வவுனியாவில் கட்டுப்பாட்டு விலையான 93ரூபாய் விலைக்கு விற்பனை செய்யமுடியாமல் இருப்பதாக தெரிவித்து நேற்று முதல் சீனிக் கொள்வனவில் ஈடுபடப் போவதில்லை என்று நேற்று (01.02.2017) மாலை வவுனியா வர்த்தகர் சங்கத்தில் சீனிக் கொள்வனவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வவுனியாவில் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவவுள்ளது. இலங்கை வர்த்தக மானியில் கட்டுப்பாட்டு விலையாக 93 ரூபாவாக விற்பனை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பில் கொள்முதல் செய்யப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவந்து விற்பனை செய்யும்போது சில்லறை விற்பனையாளர்களுக்கு 90 ரூபாவிற்கு விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

அவர்கள் உள்ளுர் வியாபார நிலையங்களில் 93 ரூபாவாக விற்பனை செய்யவேண்டும். சீனி கொள்வனவு செய்து போக்குவரத்து செய்து வவுனியாவிற்கு எடுத்து வந்து விற்பனை செய்யமுடியாத கட்டத்தில் உள்ளதால் நேற்று முதல் வவுனியாவிற்கான சீனி கொள்வனவினை நிறுத்தியுள்ளதாகவும். இது விடயம் தொடர்பாக ஏற்கனவே அரச மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அதில் தமக்கு சாதகமான பதில் கிடையாத பட்சத்தில் நேற்று வவுனியா வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் வவுனியா சீனி கொள்வனவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், செயலாளர், பொருளாலர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.