இலங்கையை சேர்ந்த 114 வயதான மூதாட்டியொருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அரநாயக, கெவிலிபிட்டிய பிரதேசத்தில் பிறந்த அனுலாவத்தி மாவத்த என்ற பாட்டிக்கு தற்போது 114 வயதாகும். அவர் கேகாலையில் இடம்பெற்ற மூத்தவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு கின்னஸ் சாதனையொன்றை படைத்துள்ளார்.
அந்த விளையாட்டு போட்டியில் இரண்டு பிரிவுகளில் பாட்டி கலந்துக் கொண்டார். ஈட்டி எறிதல் மற்றும் குண்டு வீசுவதல் ஆகிய பிரிவுகளிலேயே குறித்த 114 வயது பாட்டி கொண்டார்.
அவர் கலந்துக் கொண்ட இரண்டு பிரிவுகளிலுமே தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவர் குண்டு வீசும் போட்டியில் கலந்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இறக்குமதியாளர்களுக்கான டொலரின் கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த சரிவிற்கான காரணமாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் மதிப்பு 147.95 மற்றும் 148.05 இடையிலான அளவீட்டில் பதிவாகியுள்ளது.
ரூபாவின் மதிப்பை உறுதிபடுத்துவதற்காக மத்திய வங்கி தலையீட்டொன்று மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆசிய நிதி சந்தையில் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. 9 மாதங்களுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகமான உயர்வு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இறக்குமதியாளர்களின் டொலர் தேவை மற்றும் ஏற்றுமதியாளர்களின் விற்பனை இல்லாமையின் காரணமாக இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 146.90 / 95 ரூபாவாக காணப்பட்டுள்ள போதிலும் வர்த்தகம் அரிதாகவே காணப்பட்டுள்ளன.
இறக்குமாதியாளர்களின் டொலர் கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் முதலீடுகள் இல்லாமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணய வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொ ன்று நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக வவுனியாவில் காணப்படும் குளத்தில் நீர் நிலைகள் வற்றியுள்ளது. இதன் காரணமாக நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொன்று வந்துள்ளது.
இம் முதலையினை கண்டு நாய்கள் குரைத்தமையினால் அயல்வீட்டாரின் உதவியுடனும் உக்குளாங்குளம் இளைஞர்களின் உதவியுடனும் முதலை பிடிக்கப்பட்டு தற்போது கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக 119 பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து தற்போது உக்குளாங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி இன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடுகடந்த அரசின் இளையோர் அமைச்சு இன்று முன்னெடுத்துள்ளது.
காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஒருமனதோடு அறப்போரில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்குளி – சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று இரவு இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 11 பேரும் ஆயுதம் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ள அதேவேளை, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்ற காரணத்திற்காக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த பலப்பிரயோகம் நடாத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையை மீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.
இது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பானவன் என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும்.
எனினும் இவ்வாறான செயல்கள் இனிமேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளவது எமது கடமையாகின்றது.
இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இந்த துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன்.
எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.
உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30 ல் இருந்து மாலை 6 மணிவரையில்மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழ் பிரதேசத்தில் மாலுசந்தி, வதிரிச்சந்தி, இரும்பு மதவடி,சக்களாவத்தை, இலகடி, அச்செழு போன்ற பகுதிகளிலும்,
கிளிநொச்சி பிரதேசத்தில் பூதன் வயல், முறிப்பு, குமுழ முனை, தண்ணிமுறிப்புஆகிய பிரதேசங்களிலும்,
வவுனியா பிரதேசத்தில் மடுகந்த பிரதேசம் மற்றும் ஓமந்தை வீட்டுத்தோட்டம்,ஓமந்தை உருக்கு தொழிற்சாலைகளில் மின்சாரம் தடைப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் இவை ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை இந்தவருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் Michael Pezzullo செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமாக பல தடவைகள் நாட்டுக்குள் வந்து போகும் வகையிலான 10 வருட சுற்றுலா விசாவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசா மூலம் வருபவர்கள் ஒவ்வொரு தடவையும் அதிகபட்சம் 3 மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க முடியும்.
குறித்த சுற்றுலா விசா பரீட்சார்த்த அடிப்படையில் தற்போது சீன நாட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.
அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற மக்களின் அன்றாடசேவைகள் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பேரூந்துகள் இன்றி பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். வெளியூர் சேவைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. பெருமளலான பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்த நிலையங்களும் முடப்பட்ட போதும் பத்திரிகை விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
ஈராக் கூட்டுப்படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்குகின்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க மொசூலை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மனித கேடயங்களாக பயன்படுத்திய 284 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கொன்று குவித்தனர். அவர்களின் உடல்கள் மொசூல் வடக்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரி வளாகத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர். இதற்கிடையே கிர்குக் பகுதியிலும், மொசூலிலும் ஈராக் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவினின் சொந்த ஊரான அளவெட்டி கந்தரோடைப்பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சமய கிரிகைகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் மாணவனின் பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் பிரமுகர்களும் இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவனின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து கே.கே.எஸ் வீதியில் சுண்ணாகம் மருதனார்மடம் ஊடாக உடுவில் மருதம் பொது மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைவாக நல்லடக்கம் செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம்(25.10.2016) பூரண கடையடைப்பு இடம்பெறும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளையதினம்(25.10.2016) பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுவிப்பதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை வடமாகாணம் முழுவதும் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி தின போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும் நேற்று(23.10) கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே .இராதகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் நிகழ்வின் போது வழங்கி வைக்கபட்டது.
கடந்த ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில், பிரிவு ஒன்றுக்கான இசையும் அசைவும் போட்டி நிகழ்வில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் செல்வி. கவிநயா அரவிந்தன் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாண வர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜிவன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
இறந்த இரு மாணவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும், சிறுவயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்ப ட்ட செலவையும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவ்விரு பெற்றோர்களு க்கும் இழப்பீட்டுத் தொகையை மாதாந்தம் வழங்க வேண்டும்.
மாணவி வித்தியா கொலை வழக்கிற்கு நீதி கிடைக்காதது போல் எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் போவதை தவிர்க்க வேண்டும்.
அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்காதுவிடின் வேறு வடிவங்களில் போராட்டம் திசை திருப்ப ப்படும். எமது மாணவர்கள் இப்போதும் கொந்தளிப்புடனேயே உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவருடைய உரையை சிங்கள மொழியில் சட்ட பீட மாணவன் சாமர, ஆங்கிலத்தில் மருத்துவ பீட மாணவ ஓன்றியத் தலைவர் ஏ.அலெக்ஸ் ஆகியோர் வாசித்தனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று ( 24.10.2016) காலை 10.00மணி முதல் 12.00 மணிவரை யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப்பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், கொலையை விபத்தாகக்காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழமையாக அவதானிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.