நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வையாளர் ஒருவர் திடீர்மரணமடைந்த சம்பவம் ஒன்று பண்டாரவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 54 வயதான ஒருவரே மாரடைப்புகாரணமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டாரவெல புனித ஜோசப் வித்தியாலயத்தில் கடமையிலிருந்த ஒருவரே இவ்வாறுமரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லைஎன்றும் பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான முறைப்பாடுகளை வழங்க 24 மணித்தியாலங்களும் செயற்படும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.இதன்படி, முறைப்பாட்டாளர்கள் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இலக்கத்திற்கோ அல்லது பாடசாலை பரீட்சை நிலையங்களின் 0112 784 208, 0112 784 537 , 0113 188 350 மற்றும் 0113 140 314 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவலளிக்க முடியும்.
பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் மாத்திரமன்றி பரீட்சை நிலையங்களில் நடைபெறும் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்பிலும், இந்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி கூறமுடியும் என, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று சிலாபம் பிரதேசத்தில் கைக்குழந்தை ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், காணாமல் போன குழந்தை குறித்த குழந்தையாக இருக்கலாம் எனவும் கோட்டை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் சிலாபம் மற்றும் கோட்டை பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒருமாத காலமாகியும் தனது குழந்தையைக் காணாமல் குறித்த தாய் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போயுள்ள குழந்தை நேற்று கோட்டை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான கிருலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்று எமிரேட்ஸ் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து சென்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானம் விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீப் பிடித்தது.
உடனடியா தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை காப்பாற்றினர். மிகபெரிய விபத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட வீரர்களையும் துரிதமாக செயல்பட்டு எமிரேட்ஸ் நிறுவனத்தாரையும் பாராட்டினர்.
இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவை சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரழந்தார். அவரின் தியாகம் போற்றத்ததக்கது என பல்வேறு தரப்பினரும் மறைந்த அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (04.08.2016) காலை மருத்துவப்பீட மாணவ செயற்பாட்டுக்குழு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எற்பாடு செய்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
தனியார் பல்கலைக்கழகம், தனியார் பாடசாலை, தனியார் வைத்தியசாலை மருத்துவ வியாபாரிகளுக்கு ஏற்ற விதத்தில் கல்வி, சுகாதாரத்தை நடாத்திக் கொள்கின்றனர். பாடசாலையில் அறவிடப்படும் பணம் குறைந்ததா? வைத்தியசாலைகளில் மருந்திற்கான வரிசை குறைந்ததா? வரி இன்னும் கூடியது இவை அனைத்தும் எமக்குத் தேவையான விதத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து ஒரு இலட்சம் பேரிடத்தில் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டதாக கூறப்படும் இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இவர்கள் புறப்படத் தயாராக இருந்ததாக, விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு நாணயங்களின் பெறுமதி மூன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
இதேவேளை சந்தேகநபர்கள் கொழும்பைச் சேர்ந்த 35 மற்றும் 49 வயதான இருவராகும்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்று (03.08.2016) புதன்கிழமை கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் அமைப்பு விவகாரங்களில் இன்றைய நிலை தொடர்பாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் தெளிவாக கூறப்பட்டதுடன், இவ் அரசியல் அமைப்பு விவகாரங்கள் சரியான முடிவுக்கு வரும்வரை இவ் விடயங்களை குழப்பும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்க கூடாது எனவும் தெரிவித்ததுடன், தலைவரின் கருத்துக்களை மத்தியகுழு ஏற்றுக்கொண்டதுடன், தீவிரமான கருத்துக்களையும் மத்தியகுழு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற சமகால பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது..
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும், கிராமங்கள் தோறும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தல் தொடர்பாகவும் தீவிரமாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய மத்தியகுழு கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் திரு சு.சதானந்தம், உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு ச.வியாளேந்திரன் (எஸ்.எஸ்.அமல்), உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உப தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், உப தலைவர் பத்தன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும் முல்லைத்தீவு மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான க.சிவநேசன்(பவன்), செயற்குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அம்பாறை கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இருவர் முச்சக்கரவண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த பொலிஸாரும் மாணவியை மீட்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியுடன், மற்றுமொரு இளைஞரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தலை மேற்கொண்ட இளைஞனும் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவன் என்றும், குறித்த மாணவிக்கும், மாணவனுக்கும் ஏற்கனவே காணப்பட்ட காதல் தொடர்பு தற்போது முறிந்துள்ளதாகவும் இதன்காரணமாகவே குறித்த மாணவன், மாணவியை கடத்துவதற்கு முற்பட்டிருந்ததாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து பாடசாலை சீருடை, போத்தல் வகைகள் ,கைத்தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து வருட காலத்தில் மூன்று மனைவிகளை திருமணம் செய்த நபரை மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 33 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன் இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் இவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டு 14 பிடி விராந்துகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
வீடுகளை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட 14 குற்றச்சாட்டுக்களையும் இந்த சந்தேக நபர் எதிர்நோக்கியுள்ளார்.
மனைவியை தாக்கி பாரதூரமான காயங்களை ஏற்படுத்தியமை, மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு நீதிமன்றம் வழங்குமாறு உத்தரவிட்ட இழப்பீட்டு தொகைகளை வழங்காமல் தவிர்த்து வந்தமை போன்ற வழக்குகளுக்கும் இந்த நபருக்கு எதிராக நடந்து வருகிறது.
இவ்வாறான குற்றங்களுக்கு குற்றத்தை ஏற்றுக்கொண்ட இரண்டு வழக்குகளில் இவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் குருணாகல் மெல்சிறிபுர பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த நபர் மூன்று பேரை சட்டரீதியாக திருணம் செய்துள்ளதாகவும் ஆறு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த நபருக்கு எதிராக பல திருமணங்களை செய்த குற்றச்சாட்டிலும் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.
இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.
இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.
பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
சூரியவௌ-விகாரகர பிரதேசத்தில் திருமண நிகழ்வின் விருந்தொன்றிட்காக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சி 25 கிலோவை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வீடொன்றை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மான் இறைச்சியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கியால் சுட்டே மானினைக் கொன்று இறைச்சியை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் அலறித் துடித்தனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் விமானி துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.
உடனடியாக விமானத்தை தரையிறக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் விமானம் தரையில் தரையிறங்கும் பொழுது, திடீரென விமானத்தின் பின்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் கூக்குரல் இட்டு கதறத் தொடங்கினர்.
இந்த விமானம் கேரளாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமையினால் அதற்குள் புலம்பெயர் தமிழர்களும் இருந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் அவர்கள் விமானம் விபத்துக்குள்ளானதை உணர்ந்த பயணிகள் பெரும் பதட்டத்துடன், அல்லோலகல்லோலப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறித்த விமானத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இருபத்து நான்கு பேர் பயணித்திருக்கின்றார்கள். அதுதவிர, 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் பயணித்திருக்கின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பெரும்பாலான பயணிகள் இந்தியாவினை சேர்ந்தவர்கள். எவ்வாறெனினும், எந்தப் பயணிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டி தலைவரான டோனிக்கு இளம் வயதில் காதலி ஒருவர் இருந்த விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் சாதனை தலைவரான டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து M.S. Dhoni: The Untold Story என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இதில் டோனியின் இளவயது காதலி பற்றியும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
டோனி தனது 20வது வயதில் பிரியங்கா ஜா என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் டோனி, (2003- 04) கென்யா, ஜிம்பாப்வே சென்ற ’ஏ’ அணியில் தெரிவாகி இருந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான், கென்யா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரிலும் விளையாடினார்.
காதலி கொடுத்த உற்சாகத்தில் 6 போட்டியில் 2 சதம் உட்பட 362 ஓட்டங்கள் குவித்து அப்போதைய அணித்தலைவர் கங்குலியின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
இந்நிலையில் காதலி பிரியங்கா ஜா ஒரு சாலை விபத்தில் மரணமடைய நாடு திரும்பிய டோனி, மிகவும் துவண்டு போனார். ஒரு ஆண்டு கிரிக்கெட் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை.
பின்னர் இந்த சோகத்தில் இருந்து மீண்ட டோனி (2004-05) விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக (148 ஓட்டங்கள்) அதிக ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் என சாதனை படைத்தார்.
இதன் பின்னரே சாக்க்ஷியை சந்தித்த டோனி அவரை மணந்து கொண்டார். டோனியின் இந்த கதை படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாம்.
மேற்கிந்திய தீவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களின் சொதப்பலான ஆட்டத்தால், இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவு அணி 196 ஓட்டங்களும், இந்திய அணி 500 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 48 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. மேற்கிந்தைய தீவு அணியின் துடுப்பாட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.பொறுப்பாக ஆடிய பிளக்வுட் 63 ஓட்டங்கள் எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து ஆடிய டவ்ரிச் தன் பங்கிற்கு 74 ஓட்டங்கள் எடுத்து மிஸ்ரா சுழலில் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய அணியின் தலைவர் ஹொல்டர் -சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் மேற்கிந்திய தீவு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 388 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டத்தை முடித்து கொள்வதாக இரு அணி தலைவர்களும் ஒப்புகொண்டனர்.
மேற்கிந்திய தீவு அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய சேஸ் 137 ஓட்டஙகள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு இணையாக ஈடு கொடுத்து ஆடிய மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஹோல்டர் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 5 ஆம் நாள் ஆட்டத்தில் 88.1 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 9 ம் திகதி லூசிய மைதானத்தில் நடைபெறுகிறது.
பிரித்தானியாவில் நடைபெற்ற கேள்வி பதில் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி பிரித்தானியாவின் அறிவார்ந்த குழந்தை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தனியார் தொலைக்காட்சி சார்பில் குழந்தைகளுக்கான கேள்வி பதில் என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரியா(10) என்ற சிறுமி இப்போட்டியில் பங்கேற்றிருந்தார்.
இப்போட்டியில் பல சுற்றுகளில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன.இதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரியா சரியான முறையில் பதிலளித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதி போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ரியாவுக்கும், பிரித்தானியாவின் சக்பி(9) என்ற சிறுவனுக்கும் இடையே போட்டிகள் பலமாக இருந்தன.
இதனால் போட்டியாளர்களான ரியா மற்றும் சக்பி இடையே ஆங்கில வார்த்தைகளான eleemosynary மற்றும் charitable உச்சரிப்பை தெரிவிக்கும் படி கூறப்பட்டிருந்தது.
அந்த ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான உச்சரிப்பை ரியா தெளிவாக உச்சரித்தார். இதனால் பிரித்தானியாவின் அறிவார்ந்த குழந்தை என ரியா தேர்வு செய்யப்பட்டர், அவருக்கு அதற்கான விருதும் வழங்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற ரியாவுக்கு பல்வேறு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் இது போன்ற அறிவார்ந்த குழந்தை வளர்த்தற்காக அவரது பெற்றோருக்கு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய லண்டனில் வைத்து மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
Russell Square இல் வைத்து உள்ளுர் நேரப்படி 11.33 மணியளவில், மர்மநபர் கத்தியை வைத்து மக்களை அச்சுறுத்தியுள்ளார். அவனிடம் இருந்து மக்கள் தப்பிக்க முயற்சிக்கையில், பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான், மேலும் 5 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளான்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்னரே, அப்பெண்மணி ரத்தவெள்ளத்தில் துடித்து இறந்துபோனார்.
மேலும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த மர்மநபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியுள்ளனர்.
மேலும், இது தீவிரவாத தாக்குதலின் பின்னணியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.