நேற்று(10.04.2016) வவுனியாவில் சதொச மொத்த வியாபார நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களினால் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சில வியாபார நிலையங்களில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் தயவு செய்து விலைகளை உரிய விலைகளுக்கு மேல் அதிகரிக்காதிர்கள். அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அவ் வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நேற்று காலை 10.00 மணியளவில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதீயுதின் அவர்களினால் ஹிஜ்ராபுரம், 4ம் கட்டையில் Asian Gypsum Moulding (Small Industry Pvt Ltd) நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதீயுதின் மற்றும் விருந்தினர்களாக காதர் மஸ்தான் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், க.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா), பாவா பயூன் (பிரதேச செயலாளர், செட்டிக்குளம்), எஸ்.பாஸ்கரன்( எச்.என்.பி வங்கி முகாமையாளர்) , சுகந்தி கிஷோர் (வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செயலாளர்), மற்றும் பல அரசமற்றும் அரசார்பற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்த முதன்மை திட்டம் ஒன்று எதிர்வரும் ஜூனில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.இந்ததிட்டம் வெளியானதன் பின்னர் அதற்கு அமைய நாடு முழுவதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் மே மாதம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் குறித்த முதன்மை அபிவிருத்தி திட்டம் குறித்த அறிவித்தல் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.இதேவேளை இலங்கையின் பணம் பனாமாவுக்கு சென்றதா? என்பது குறித்து தற்போது தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, கடல் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆதனை தடுக்கமுடியாது. எனினும் படகு கவிழாமல் பயணிக்கக்கூடிய வழியை தாம் உறுதிப்படுத்தவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(10.04) மாலை 4.00 மணியளவில் முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி ஜீன்.மக்ஸ்மலா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக முல்லை மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வெங்கல செட்டிக்குள பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வவுனியா வடக்கு கல்வி வலய, முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்வரன், மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.அருள்வேல்நாயகி, தாண்டிக்குளம் குடும்ப நல உத்தியோகஸ்தர் திருமதி எ.ஜெயபவானி, திருநாவற்குளம் சிவன் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் விக்கினபாவனந்தன், கோவில்புளியங்குளம் பாடசாலையின் ஆசிரியர் திருமதி கணேசலிங்கம் ஆகியோருடன், உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி மீரா குணசீலன், செல்வி சபீதா தர்மலிங்கம், பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்,இசைவும் அசைவும், வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவிற்கு புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினரான திரு தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வது தடை செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரிக்கும் காட்சி ஒன்றும் இலங்கையின் இணையத்தளம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான தடை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டு வரப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது.இதனையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை – அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 110 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து நேற்று (10) மாலை 06.30 மணி அளவில், நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.இதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லொறியில் இருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை நானுஓயா பொலிஸாரின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு விடுமுறையின் பின்னர் வாரத்தின் இறுதி நாளான 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தினை உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.பெரும் எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அலுவலகம் திரும்ப மாட்டார்கள் என்ற காரணத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து சாதனை படைத்துள்ளது.
விஜய் நடித்துள்ள தெறி படம் வருகிற ஏப்ரல் 14ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு முதல் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சென்னையில் தெறி படம் திரையிடப்படும் திரையரங்குகளில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதில் குறிப்பிடும்படியாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகளில் மட்டும் முதல்நாளில் 104 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 104 காட்சிகளுக்குமான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது.
இதுதவிர, வெளிநாடுகளிலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால் அங்கேயும் தெறி முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. விஜய் பட வரிசையிலேயே இப்படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 50 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று வெளியான ஜங்கிள் புக் திரைப்படம் கோடிகளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
1894ல் வெளியான ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்திய காடுகளில் நடப்பதுபோன்ற கதையம்சம் கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் நேற்று ரிலீஸாகி ஒரு நாளில் மட்டும் 9.76 கோடி சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்தியக் காடுகளில் கதை நடப்பதால், முதன்முறையாக ஹொலிவுட் திரைப்படம், இந்தியாவில் முதலில் ரிலீஸாகி, ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 14ம் திகதி தான் அமெரிக்காவில் ரிலீஸாகிறது.
இப்படத்தில் நடித்திருக்கும் ஒரே கதாபாத்திரம் நீல் சேத். அச்சிறுவனும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், உலகளவில் ரிலீஸாகும்போதும் நிச்சயம் பெரிய வெற்றியையும், வசூல்சாதனையும் படைக்கும்.
பிறக்கவிருக்கும் ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உண்ண வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம் மாதம் 13ம், 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரையான காலப் பகுதியில் உறவினர்களுக்கு உணவை எடுத்து வந்து கைதிகளுக்கு வழங்க முடியும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இவ்வாறு கொண்டுவரப்படும் உணவுகளை அதிக சோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பதிவேற்றுபவர்களுக்கு தி.மு.க.வினர் 200 ரூபா வழங்குவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களின் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
கடந்த காலங்களை போல் ஊர் ஊராக, வீதி வீதியாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களின் மூலமும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்சியின் நன்மைகளையும், எதிர்க்கட்சியின் தீமைகளையும் விளக்கி அரசியல் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் தங்களுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (10.04.2016) ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் நடைபெற்றது.
மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி.இராஜேஸ்வரி மகேஸ்வரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலையக கலை, பண்பாட்டு, மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறண்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேஸ்வரனும், நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்தினர்.
நூலின் ஆய்வுரையை சூரியகாந்தி பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும் கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தியமை குறிப்பிடதக்கது.
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று (10.04.2016) காலை நடைபெற்றது.
இன் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அதிதியாக கலந்து கொண்டு நிதியுதவியினை றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் க.பார்த்தீபனிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன், மற்றும் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான ராஜசேகர், பிரசாத், குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புது வருட நிகழ்வுகளில் 13.04.2016 அன்று துவிச்சக்கர ஓட்ட நிகழ்வும், மரதனும் நடைபெறும். அத்துடன் 14.04.2016 அன்று மைதான நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது. இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறான நிலையில் மற்றுமொரு இலகுவானதும், பயனுள்ளதுமான வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் ஒவ்வொருவருடைய Timeline மூலமாகவும், News Feed ஊடாகவும், பகிரப்பட்ட பகுதிகள் ஊடாகவும் வீடியோ வீடியோக்களை பார்வையிடக்கூடியதாக இருந்தது.
எனினும் குறித்த ஒரு வீடியோவை சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் பார்வையிடுவது கடினமான காரணமாகும்.
இதனை தவிர்ப்பதற்காகவே வீடியோ தேடல் (Video Search) எனும் இப் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பிரபலமாகிக்கொண்டிருக்கும் வீடியோக்கள், நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் என்பவற்றினையும் தனித்தனியாக தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.
பிரான்ஸ் நாடு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதால், அந்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகள் சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன் கிழமை அன்று பிரான்ஸ் அரசு ஒரு அதிரடி சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
அதாவது, பணம் கொடுத்து பாலியல் தொழிலாளியிடம் செல்பவர்களுக்கு முதல் முறையாக 1,500 யூரோ அபராதமும், இதையே தொடர்ந்து செய்தால் 3,750 யூரோ அபாரதமும் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த அதிரடி சட்டத்தின் விளைவாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சுமார் 37,000 பாலியல் தொழிலாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, தங்களது வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள அண்டை நாடான சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு அரசாங்கமே சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது. மேலும், பாலியல் தொழில் எவ்வித ஆபத்துமின்றி நடக்க சாலை ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட அறைகளும் அமைத்துள்ளது.
எனவே, பாலியல் தொழிலாளிகளுக்கு சிக்கல் இல்லாத சுவிஸ்லாந்து நாட்டில் நுழைவதற்கு பிரான்ஸ் பாலியல் தொழிலாளிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் Aspasie என்ற அமைப்பு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில், ‘பிரான்ஸ் நாட்டின் புதிய சட்டத்தால் சுவிஸ் நாட்டிற்குள் அதிக பாலியல் தொழிலாளிகள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் நுழைந்தால், இங்குள்ள பாலியல் தொழிலாளிகளின் வருமானம் குறைந்துவிடும்’ என அச்சம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீட்டர்சன் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாட முடிவெடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாட யோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி, ஒரு வீரர் ஒரு நாட்டிற்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 4 ஆண்டுகளுக்கு பின்னரே வேறு ஒரு அணிக்காக விளையாட முடியும்.
பீட்டர்சன் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
இதன்படி பீட்டர்சன் 2017ம் ஆண்டு தென் ஆபிரிக்க அணிக்காக விளையாடும் தகுதி பெறுவார். இருப்பினும் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அழைப்பிற்காகவும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.