இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21ம் திகதி முதல் அக்டோபர் 6ம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
முன்னதாக வருகிற 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரட மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் களம் இறங்க இருந்தது. தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் சமீப காலமாக சுமுகமான நிலை இல்லை.
இதையடுத்து கவனமாக பரிசீலித்து மிகுந்த முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா தென்ஆப்பிரிக்காவில் நடந்த போது பாகிஸ்தானை சேர்ந்த சியல்கோட் அணி கலந்து கொண்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த முறை அங்கு உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டத்தை வென்ற மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பைசலாபாத் அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இப்போது மத்திய அரசு பாகிஸ்தான் அணியின் இந்திய வருகைக்கு தடை விதித்திருப்பதால், அதற்கு பதிலாக வேறு நாட்டு அணி சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.
தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 8 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியன் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க வந்திருந்த ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் குழு தங்கள் அணி சம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா 16 லட்சம், அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இதனால் கூடுதல் உற்சாகத்துடன் ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 8வது நிமிடத்தில் முதல் அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் முஸ்தபா ஆசாத்ஜோய் கோல் போட்டார்.
அனுபவம் வாய்ந்த வழக்கமான இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் கோவர்மானின் இந்த பரிசோதனை முயற்சி இந்தியாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை.
இதன் பின்னர் 60வது நிமிடத்தில் மாற்று வீரராக ஆட வந்த சுனில் சேத்ரி, வந்த வேகத்தில் கோல் அடிக்க முயற்சித்தார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் தடுத்து விட்டார்.
63வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் 2வது கோல் போட்டது. சஞ்தர் அகமதி இந்த கோலை அடித்தார். அதே சமயம் இந்திய வீரர்களால் ஆப்கானிஸ்தானின் தடுப்பு அரணை உடைத்துக் கொண்டு கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.
முடிவில் 139ம் நிலை அணியான ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 20 ஆண்டுகால தெற்காசிய கால்பந்து போட்டி வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும்.
2011ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 0-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இந்த முறை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்த ஆப்கானிஸ்தான் பயிற்சிளாளர் மற்றும் வீரர்கள் அதனை செய்து காட்டி விட்டனர்.
உலக தரவரிசையில் 145வது இடம் வகிக்கும் இந்திய அணி தெற்காசிய கால்பந்தில் 6 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த போதிலும் ஒரு முறையும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியதில்லை.
இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அடைப்பால், வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாயினர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்க கடலில் நீடிப்பதை அடுத்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் அதனால் சில நாட்கள் மழை பெய்தது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயில் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் காற்று சுழற்சி உருவானது.
அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. அந்த காற்றழுத்தம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டது. இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
நேற்று பகல் முழுவதும் லேசான மழை தூறிக் கொண்டே இருந்தது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மட்டும் இயங்கின.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அடைக்கப்பட்ட நிலையில் தெருக்களில் ஓடும் வெள்ளம் வீடுகளில் புகுந்தது. வட சென்னை மட்டுமின்றி, தென் சென்னையில் பல இடங்களில் இந்த நிலை காணப்பட்டது. ஏழை மக்கள்,வீடுகளை விட்டு வெளியேறவும் முடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் தவித்தனர்.
மாநகராட்சி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்யாத நிலையில், தெருக்களில் வடிகால் கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழை நீர் வெள்ளமாய் வீடுகளை சூழ்ந்தது. ஒரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் வரும் நாட்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் கவலை தெரிவித்தனர். சென்னை நகரில் 120 மிமீ மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சோளிங்கர், கேளம்பாக்கம் 110 மிமீ, பள்ளிப்பட்டு 100 மிமீ, அரக்கோணம், தாம்பரம், செம்பரம்பாக்கம், வட சென்னை 90 மிமீ, சென்னை விமான நிலையம், திருவாலங்காடு 80 மிமீ, பூந்தமல்லி, பூண்டி, ஏற்காடு 70மிமீ, ஆரணி, காஞ்சிபுரம் 60மிமீ, வாலாஜா, சோழவரம், திருவள்ளூர், வேலூர்50 மிமீ, முத்துப்பேட்டை, ஓமலூர்,குடியாத்தம், வந்தவாசி40மிமீ, நாகப்பட்டினம்20 மிமீ, கோவை, திருவாரூர், தர்மபுரி, கரூர், சேலம், சிவகங்கை10 மிமீ மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக வட மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்கள், சுரங்கப்பாதைகள், புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது சென்னை அடுத்த திருமங்கலத்தில் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார். திருத்தணியில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் இறந்தார்.
மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதால் இன்றும், நாளையும் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
மேலும், கடலில் வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்று மணிக்கு 45 முதல்55 கிமீ வேகத்தில் வீசும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் இந்த காற்றின் பாதிப்பு அதிகமாக காணப்படும். இன்றும் நாளையும் மழை பெய்யும் என்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த காலாண்டு தேர்வுகள், கடைசி தேர்வுக்கு பின்னர் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.
ஜெர்மன் நகரான பிராங்க்போட் இல் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள் தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது.
சில முஸ்லீம் மாணவிகள் புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள்.
ஆனால் நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவர்களுடன் மாணவிகள் நெருக்கமான நிலையில் நீச்சல் பயிற்சி பெறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சில பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
மதக் காரணங்களுக்காக பள்ளிக்கூட நிகழ்வுகளில் இருந்து ஒரு மாணவர் விலக்களிக்கப்பட முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியின் சில கத்தோலிக்கப் பகுதிகளில் உடற்பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே ஆண் – பெண் பிரிவினை நிலவுகிறது என்றும், சில மதச்சார்பற்ற உடற்பயிற்சி நிலையங்களில் கூட பெண்கள் மட்டுமே பயிற்சி பெறும் பகுதிகள் இருக்கின்றன என்றும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு கொழும்புக்குத் திரும்பி வர முடியும் என்று விக்னேஸ்வரன் கனவு கூடக் காணக் கூடாது என்று சிங்கள அடிப்படைவாத அமைப்பான ராவண பலய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராவண பலயவின் பொதுச்செயலர் வண. இத்தேகண்டே, சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனது தலைமையிலான ராவண பலய அமைப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து வடக்கு மாகாணசபைத் தேர்தலை சட்டபூர்வமாக நடத்தும்படி கேட்டுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. இதுநாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது. விக்னேஸ்வரனும் அவரது குழுவினரும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் தனியான நிர்வாகத்தை உருவாக்க முனைகின்றனர்.
சமஸ்டிக் கட்டமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காணி, காவல்துறை, கல்வி, நிதி, சுகாதாரம் போன்ற அதிகாரங்களை கோருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்த நேரடியான கடன்களை பெற முனைகின்றனர். இது அரசியலமைப்புக்கு முரணானது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு கொழும்புக்குத் திரும்பி வரமுடியும் என்று விக்னேஸ்வரன் கனவு கூடக் காணக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய மாணவ, மாணவிகளை ஹிரிகட்டுவ ஆற்றின் ஓரத்துக்கு அழைத்துச் சென்று சகல ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக தரையில் புரட்டி உடல் உள ரீதியாகப் பகிடிவதை செய்ததாக அடையாளம் காணப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேருக்கும், நான்கு மாணவிகளுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கராஜ ஆரிய திலக்க விடுதியில் புதிய மாணவ மாணவியரின் ஆடைகளைக் களைந்து மலசல கூடத்தில் தரையில் புரட்டி மோசமாக இந்த சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசி மலசலகூடத்தில் ஊர்ந்து செல்லுமாறு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இக்கொடிய பகிடிவதை தொடர்பாக புதிய மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் உபவேந்தரோ, நிர்வாகமோ தீர்வை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சரிடம் நேரில் இதுபற்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உடன் விசாரணை நடத்தி குற்றமிழைத்தோரைப் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையை மேற்கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மாணவர்கள் மூவர் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி வீடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு வாரங்களாக மோசமான வகையில் பகிடிவதை காணப்படுகிறது. இதனால் புதிய மாணவர்கள் விரக்தி கொண்டுள்ளனர். முன்னர் இப்பல்கலைக்கழகத்தில் மோசமான பகிடிவதை காணப்பட்டது கடந்த பல வருடங்களாக தண்டனை விதிக்கப்பட்டதால் பகிடிவதைச் சம்பவங்கள் குறைந்தன.
பல்கலைக்கழகத்தை இந்த நிலைமைக்கு கொண்டுவர 300 மாணவர்களுக்கு தண்டனை வழங்க நேரிட்டதாக உயர் கல்வி அமைச்சின் மாணவர் நடவடிக்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் கீர்த்தி மாவெல்லகே தெரிவித்தார்.
தனது கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மார்பு பகுதியில் கத்தியால் குத்திக் கொண்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தங்கொட்டுவ ,வலச்சவத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று சென்றதால் அவர் மற்றுமொரு பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு பேணிவந்துள்ளார். இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விருவருக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று குறித்த நபர் பெண்ணை அழைத்த போது என்னை மறந்துவிடு என்று பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த நபர் கத்தியால் தனது மார்பு பகுதியில் குத்திக் கொண்டார். படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அனுஸ்டிக்கப்படும் தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிய குற்றம் இழைத்தவர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
எனினும் கொலை, போதைப் பொருள், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாரென சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை ‘மார்ஸ்’ திட்ட இயக்குனர் அருணன் ஆகியோர் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது
முதல்முறையாக இந்தியா வேற்று கிரகத்துக்கு அதாவது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பவுள்ளது. இது இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும். இந்த விண்கலம் சுமார் 1340 கிலோ எடை கொண்டது.
அதில் எடுத்து செல்லப்படும் 5 விஞ்ஞான ஆய்வு கருவிகளின் எடை 15 கிலோ ஆகும். உயிரி வாழ்க்கைக்கு அடிப்படையானது மீத்தேன் வாயு. எனவே செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா இல்லையா இருந்தால் எங்கெங்கு உள்ளது அவை எங்கிருந்து வருகிறது என்பன போன்றவற்றை கண்டறிவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்படுகிறது.
பூமியில் இருந்து புறப்படும் இந்த விண்கலம் சுமார் 9 மாதம் பயணம் மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையை சென்றடையும்.
இது அவுஸ்திரேலியாவில் தெரியும். இந்த விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, கனிமங்கள், வளிமண்டலம், மீத்தேன் வாயு உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்த பிறகு அங்கிருந்து சுமார் 272 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் நீள்வட்ட பாதையில் விண்கலம் சுற்றி வரும். மின்சாரம், தகவல் தொடர்பு, விண்வெளி பயணம், விண்ணில் செலுத்தும் முறை என்று ஒவ்வொன்றிலும் புதுமையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பல நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி உள்ளது. நாமும் அதுபோல் அனுப்புவது விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்திய தற்சார்பை வெளிப்படுத்துவதற்கு தான்.
இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் திட்டத்தை வகுத்து வடிவமைத்து விண்ணில் செலுத்தும் நிலைக்கு கொண்டு வந்து உள்ளோம்.
குறுகிய காலத்தில் தொலை தூர பயணத்துக்கான முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது. திட்டப்பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி தயார் நிலையில் உள்ளது. அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு வருகிற 27ம் திகதி விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அடுத்த மாதம் 21ம் திகதியில் இருந்து நவம்பர் 19ம் திகதிக்குள் ஏதாவது ஒருநாளில் வானிலையை பொறுத்து விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்.
எதிர்காலத்தில் வேற்று கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டத்துக்கு இது முன்னோடி திட்டமாக இருக்கும். இது மிகப்பெரிய சவாலான திட்டம். இந்த விண்கலம் விண்ணுக்கு சென்று திரும்ப வராது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கான மொத்த செலவு 450 கோடி இந்திய ரூபாய்.
அதில் விண்கலத்தை எடுத்து செல்லும் பி.எஸ்.எல்.விசி25 ராக்கெட்டுக்கான செலவு ரூ.110 கோடி. விண்கலத்துக்கான செலவு ரூ.150 கோடி இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நேபாள கிரிக்கெட் சங்க ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் ஷேவாக் படத்தை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சி.ஏ.என். சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது.
இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை. இதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது.
நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் ஷேவாக்கின் படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஷேவாக் முகம் லேசாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஷேவாக் தான் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் உள்ளூர் நேபாள வீரர்கள் கொதிப்படைந்தனர்.
முன்னாள் வீரர் ராஜூ பஸ்னயாத் கூறுகையில் நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் தங்கள் நாட்டு வீரர்களை புறக்கணித்தது பெரும் அவமானம் என்றார்.
இதனை மறுத்த சி.ஏ.என். தலைமை கமிட்டி உறுப்பினர் கிரன் ராணா கூறிய போது..
அட்டையில் உள்ளது ஷேவாக் படம் தான். நன்கு கூர்ந்து கவனித்தால் இவரது முகம் லேசாக மறைக்கப்பட்டு இருக்கும். வேண்டுமேன்றே இதை செய்யவில்லை. முழுவதும் எங்கள் தரப்பில் நடந்த தவறு தான்.
ஷேவாக்கிற்கு நேபாளத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதை அச்சிட்ட உரிமையாளர் கூட ஷேவாக் ரசிகராக இருந்திருக்கலாம், உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு நேற்று வவுனியாவில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் மதகுவைத்தகுளத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்..
அபிவிருத்தி பற்றி பெரிய அளவில் பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது என குறிப்பிட்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சர்வதேசம் உட்பட பலரும் நம்புகின்றார்கள்.
எனவே இந்தத் தேர்தலில் வடக்கு மக்கள் தமது கட்சியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ஒருவரோடு தன்னை தொடர்புபடுத்தியதால் பொலிசில் புகார் கொடுக்கப்போவதாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.
என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சினேகா. இதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் கடந்த வருடம் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அமைச்சர் ஒருவரோடு நடிகை சினேகாவை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சில தினங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது. சினேகாவின் கணவர் பிரசன்னா இதைக்கண்டித்தார்.
மனைவி மீது அவதூறு பரப்பினால் பொலிசில் புகார் செயப்படும் என்று எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சினேகா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று தனக்கு எதிராக அவதூறு பரப்பும் பேஸ்புக் கணக்குகள் குறித்து அவர் புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஷகீர் கான் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
முதல் போட்டி மைசூரில்(செப்டம்பர் 25-28) நடக்கிறது. அடுத்த இரு போட்டிகள் ஷிமோகா(ஒக்டோபர் 2-5), ஹூப்ளியில் (ஒக்டோபர் 9-12) என நடக்கவுள்ளன.
இதற்கான ஏ அணியை இந்திய கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழு நேற்று அறிவித்தது. இதில் அணித்தலைவராக புஜாரா நியமிக்கப்பட்டார் ஜம்மு காஷ்மீரை சர்ந்த பர்வேஷ் ரசூல் மூன்று போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த ஷேவாக், கம்பீர் மற்றும் ஷகீர் கான் போன்றோர் கடைசி இரு போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் திறமை வெளிப்படுத்தும் பட்சத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டிராவிட் கூறுகையில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள மற்றவர்களை விட ஷேவாக், கம்பீர் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.
எனவே இத்தொடரில் சாதிப்பதன் மூலம் தேசிய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அணி விவரம்:
புஜாரா(அணித்தலைவர்), கம்பீர், ஷேவாக், ஜக்சன், அபிஷேக், டோக்ரா, உதய் கவுல் (விக்கெட் காப்பாளர்), பர்வேஸ் ரசூல், பார்கவ் பாட், குல்கர்னி, ஷகீர் கான், ஈஷ்வர் பாண்டே, முகமது ஷமி மற்றும் முகமது கைப்.
Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது. இது தவிர பிரதான நினைவகமாக 2 GB LPDDR3 RAM, சேமிப்பு நினைவகமாக 64 GB வரை தரப்பட்டுள்ளது.
மேலும் 8 மெகா பிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 மெகா பிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. இதன் விலையானது 330 டொலர்களாகும்.
நடிகை நமீதா சமூக சேவை பணிகளில் தீவிரம் காட்டுகிறார். கண்தானம், ரத்ததான முகாம், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் கண் தானத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திலும் பங்கேற்று நடந்து சென்றார்.
சமூக சேவை அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பணம் வாங்காமல் பங்கேற்று அவர்களை ஊக்குவிக்கும் நமீதாவின் நடவடிக்கைகளை விழாக்குழுவினர் பாராட்டுகின்றனர். வெளி நாடுகளில் வீதிக்கு வீதி பெண்கள் கழிப்பிடங்கள் உள்ளன. அவற்றை பார்த்த நமீதா நம்மூரிலும் அதுபோல் அமைக்க ஆசைப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு கழிப்பிடத்தை அமைத்து திறந்தும் வைத்தார்.
தன்னார்வதொண்டு அமைப்பினர் இதற்கு உதவினால் சென்னை நகரின் தெருக்கள் முழுவதிலும் இது போன்ற பெண்கள் கழிப்பிடங்களை உருவாக்க திட்ட மிட்டார். ஆனால் யாரும் முன்வரவில்லை. சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபடுவது அரசியலில் ஈடுபடுவதற்காகவா என்று நமீதாவிடம் கேட்ட போது ஆமாம் என்றார்.
எனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் உள்ளது. நல்ல அரசியல் கட்சியோன்றில் சேர விரும்கிறேன். அதற்கான வாய்ப்பு கிட்டினால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லா விட்டால் சமூக சேவை பணிகளை தொடர்ந்து செய்வேன் என்றார்.
தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 77 வயது அக்காவை 67 வயது தம்பி கருணைக் கொலை என்ற பெயரில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
77 வயது மூதாட்டியான பர்வதம் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் தனது மகளை தன் தம்பியான மூர்த்திக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூர்த்தியின் மனைவி புஷ்பா, பர்வதத்தின் மகன்கள் தமிழ்செல்வன், அமுதன், ராஜு உள்பட அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். மூர்த்தி, பர்வதம் இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த பர்வதத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட மூர்த்தி வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வாழை தோட்டத்தில் சுமார் 2 அடி ஆழத்திற்கு குழியை தோண்டி அதில் பர்வதத்தை புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஊர் திரும்பிய உறவினர்கள் பர்வதம் எங்கே என்று கேட்டதற்கு தனக்கு தெரியாது என்றும் அதிகாலை எழுந்து பர்வதம் வெளியே சென்று விட்டார் என்று பொய் கூறியுள்ளார் கொலையாளி தம்பி.
சந்தேகமடைந்த உறவினர்கள் மூர்த்தியிடம் தீவிரமாக விசாரித்த போது தனது சகோதரி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வருவதை பார்த்து தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் எனவே கழுத்தை நெரித்து கருணைக்கொலை செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.