புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது : ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு!!

aarya

ஆர்யாவின் இரண்டாம் உலகம், ராஜா ராணி படங்கள் முடிந்துள்ளது. அடுத்து புறம்போக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கரக்டரில் வருகிறார்.

இந்த படத்துக்கு புறம்போக்கு பெயர் வைப்பதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் ரிலீசான தனுசின் ராஞ்சனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். மிளகா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது..

புறம்போக்கு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். இதில் நானே கதாநாயகனாக நடிக்கவும் முடிவு செய்துள்ளேன். இதர நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த தலைப்பை புதுப்பிக்க இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் புறம்போக்கு தலைப்பில் ஆர்யாவை வைத்து டைரக்டர் ஜனநாதன் படம் இயக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.

புறம்போக்கு தலைப்பு எனக்கே சொந்தம். அதை விட்டுத் தரமாட்டேன். ஜனநாதன் வேறு தலைப்பை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த தலைப்புக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பல்லியை உணவாக உண்ணும் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் – (வீடியோ)..!

உணவுக்குள் பல்லி விழுந்தால் அந்த உணவே நஞ்சாகி விடுமென்றுதான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பல்லியையே உணவாக உண்டால் எப்படி இருக்கும்?

தாய்லாந்தில் அமைந்துள்ள ஒரு பிரபல சுற்றுலாப் பயணிகள் உணவகம் பல்லி வறுவலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாம். கீழுள்ள வீடியோவைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்..!

ஆஷஸ் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி !!

ashes

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.
ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாத அவுஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 492 ஓட்டங்ககளை எடுத்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்களை எடுத்திருந்தது. இயான் பெல் (29), கிறிஸ் வோக்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர். கனமழை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் ரத்தானது.

நேற்று, ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் (25) நிலைக்கவில்லை. இயான் பெல் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். ஸ்டூவர்ட் பிராட் (9), ஆண்டர்சன் (4) ஏமாற்றினர். மாட் பிரையர் (47), சுவான் (34) ஆறுதல் தந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 377 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா சார்பில் பால்க்னர் 4, மிட்சல் ஸ்டார்க் 3, ரேயான் ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர் (12) ஏமாற்றினார். வாட்சன் (26), பால்க்னர் (22) நிலைக்கவில்லை. ஸ்டீவன் ஸ்மித் (7), ரேயான் ஹாரிஸ் (1) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

தேநீர் இடைவேளைக்குப்பின், அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களை எடுத்து, 226 ஓட்டங்களால் முன்னிலை வகித்த போது, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கிளார்க் (28), ஸ்டார்க் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிராட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு குக் (34), ரூட் (11) ஓட்டங்களில் வெளியேறினர். பின் இணைந்த பீட்டர்சன், டிராட் ஜோடி அசத்தியது. பால்க்னர் ஓவரில் டிராட் இரண்டு பவுண்டரி விளாசினார். தன்பங்கிற்கு, ஸ்டார்க் ஓவரில் பீட்டர்சன் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். பொறுப்புணர்ந்து விளையாடிய இருவரும் ஓட்டங்களை உயர்த்தினர். பீட்டர்சன் டெஸ்ட் அரங்கில் 33வது அரை சதம் கடந்தார். டிராட்டும் அரை சதத்தை எட்டினார். இந்த நேரத்தில், வார்னரின் அபாரமான பிடியெடுப்பில் பீட்டர்சன் 62 ஓட்டங்களில் வெளியேறினார்.

டிராட்டும் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இயன் பெல் (17) ரன் அவுட்டானார். இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்களை எடுத்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவானது.

இதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்..!!

Depression and Sorrow

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

வேலை செய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன் என்பது போன்றவை.

இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது” என்று சொல்லப் பழகுங்கள்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

நண்பர்களுடன் உற்சாகமான பழகுங்கள்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்

அமெரிக்க ஓபன் டெனிஸ் இன்று ஆரம்பம் : புதிய சாதனை படைக்க காத்திருக்கும் செரீனா!!

serena-williams

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி நிறைவடையும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் ஓர் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரேவும், உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் மோத வாய்ப்புள்ளது. இதனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களாக திகழும் இவர்கள் இருவரில் ஒருவர் அரையிறுதியோடு வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரருடன், சகநாட்டவரான ரஃபேல் நடால் அல்லது 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோரில் ஒருவர் மோதலாம்.

சமீபத்திய போட்டிகளில் ஃபெடரர், ஆரம்ப சுற்றுகளிலேயே தோற்றுள்ளதால், இந்தப் போட்டியில் அவருடைய ஆட்டம் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்படியானாலும், ஃபெடரர், நடால் ஆகியோரில் ஒருவர் காலிறுதியோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் சோம்தேவ் பங்கேற்கிறார்.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் ஓர் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸுடன் சீனாவின் லீ நா அல்லது போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோரில் ஒருவர் மோதலாம். மற்றொரு அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவுடன், இத்தாலியின் சாரா எர்ரானி மோத வாய்ப்புள்ளது.

இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.217 கோடியாகும். அதிக பரிசுத் தொகைக் கொண்ட கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுதான்.

ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு 16 கோடியே, 47 லட்சமும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு 2 கோடியே 66 லட்சமும், கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு 95 லட்சமும் பரிசுத் தொகைûயாக கிடைக்கும்.

இதுதவிர முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு போனஸ் தொகையும் கிடைக்கும். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 37 சதவீதம் அதிகமாகும்.

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் செரீனா!

நடப்புச் சாம்பியனும், 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் இந்த முறை சம்பியனாகும் பட்சத்தில், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைப்பார்.

அமெரிக்க ஓபனில் சம்பியன் பட்டம் வென்ற முத்த வீராங்கனை என்ற பெருமை அவுஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் வசம் உள்ளது. அவர் 1973ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றபோது 31 வயது 55 நாள்கள் ஆகியிருந்தது. இந்த முறை செரீனா பட்டம் வென்றால், அப்போது அவர் 32 வயதை எட்டுவதற்கு 18 நாள்கள் மட்டுமே இருக்கும்.

இதுதவிர செரீனா இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற 4வது வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்னர் ஸ்டெஃபி கிராப் (1995, 1996), வீனஸ் வில்லியம்ஸ் (2000,2001), கிம் கிளிஸ்டர்ஸ் (2009, 2010) ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாக இரு முறை பட்டம் வென்றுள்ளனர்.

ரஷியாவின் மரியா ஷரபோவா காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், இந்த முறை செரீனாவுக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரே வீராங்கனை பெலாரஸின் விக்டோரியா அசரென்காதான். அவுஸ்ரேலிய ஓபனில் இரு முறை சம்பியன் பட்டம் வென்றவரான அசரென்கா, சமீபத்தில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் செரீனாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

பச்சை தொப்பி தேவையில்லை: ஸ்டீவ் வோக் மீது ஷேன் வோன் தாக்கு!!

stevewaugh_warne

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோக் மீது ஷேன் வோன் புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். ஏற்கனவே ஸ்டீவ் வோக் ஒரு சுயநலமி என்றும் தன்னம்பிக்கை அற்றவர் என்றும் எதிர்மறைச் சிந்தனை உள்ளவர் என்றும் ஷேன் வோன் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பியது நாம் அறிந்ததே.

அவுஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆகும் வீரருக்கு “பேகி கிரீன்” தொப்பி வழங்குவது வழக்கம், மரபு. இதனை ஒவ்வொரு வீரரும் பெருமையாகக் கருதுவர். இதனை அந்த வீரர் ஒருமணி நேரம் தலையில் அணிய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையை ஸ்டீவ் வோக் கட்டாயமாக்கினார் இது மிகவும் பிடிவாதமானது அபத்தமானது என்று ஷேன் வோன் தாக்கியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் வட்டவடிவமான வெள்ளை நிறத் தொப்பிதான் எனக்கு பிடிக்கும் அது மிகவும் சௌரியமாக இருக்கும். அவுஸ்திரேலிய அணிக்காக உற்சாகமாக விளையாடுவதற்கு பச்சைத் தொப்பியெல்லாம் தேவையில்லை என்று நான் அவரிடம் கூறினேன்.

ஆனால் அவர் மிகவும் கண்டிப்பாக பச்சைத் தொப்பியைத்தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். வேறு வழியின்று நான் ஒத்துக் கொண்டேன். ஸ்டீவ் வோக்கின் இந்தப் பிடிவாதம் அபத்தமானது. அற்பத்தனமானது.

ஒரு முறை 2001ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸை பார்க்க அவுஸ்திரேலிய வீரர்கள் சென்றனர். அப்போதும் பச்சை நிறத் தொப்பியை அணியுமாறு வற்புறுத்தினார். அப்போது சில வீரர்கள் பச்சைத் தொப்பியை அணிந்தே வந்தனர் என்றும் பச்சைத் தொப்பியை கட்டாயம் அணிந்தேயாகவேண்டும் என்ற தேவையெல்லாம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உடல் நலத்துக்காக குழந்தையின் நச்சுக்கொடியை சாப்பிட்ட டி.வி. நடிகை!!

baby

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர் ஷரோன் என்பவரிடம் குழந்தை பிறந்தவுடன் அதனுடன் சேர்ந்து வெளியாகும் நச்சு கொடியை எப்போதாவது சமைத்தது உண்டா? ஏனெனில் அதை சாப்பிடலாம் என்றார்.

அதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற ஸ்பெஷல் உணவை நான் இதுவரை சமைத்தது இல்லை. ஆனால் எனது மனைவி சமைத்து இருக்கிறார் என்றார். இதற்கிடையே காதலன் பாடகர் கான்யே வெஸ்ட் என்பவருடன் குடும்பம் நடத்தி வரும் கிம் கார்டஷியானுக்கு கடந்த ஜூன் 15ம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கிம் கார்டிஷியான் குறித்து ஒன்லைனில் திடுக்கிடும் செய்தி வெளியானது.

அதில் அவர் உடல் நலத்துக்காக தனக்கு குழந்தை பிறந்தவுடன் அதனுடன் வெளியான நச்சு கொடியை சமைத்து சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே டி.வி. ரியாலிட்டி ஷோவில் தனது சமையல்காரரிடம் குழந்தை நச்சு கொடி சமையல் குறித்து அவர் கேட்ட விளக்கம் இச்செய்தி உண்மைதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணமான பெண் இரு வாரங்களில் உயிருடன் வந்த அதிசயம்!!

sharolyn

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜக்சன் என்ற 50 வயது பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.

அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார்.

புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர்.

விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.
உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன் திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் பொலிஸாரின் காதுகளுக்கு எட்டியது.

உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொலிஸார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் கைதாகி பிணையில் விடுதலை!!

TNA-logo

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் இ.இந்திரராஜாவின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 1ல் போட்டியிடும் ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் இ.இந்திரராஜா அவர்களின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா ஈச்சங்குளப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது ஈச்சங்குள பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை தொடர்ந்தும் தடுத்துவைத்துள்ளனர்.

பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!

mega

அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு விற்பனை செய்யும் கடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி விற்கப்பட்ட அதிஷ்ட சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது.

அதிஷ்ட சீட்டு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆகிய பின்பும் பரிசை பெற யாரும் முன்வரவில்லை. இதனால் பரிசு விழுந்த அதிஷ்ட எண் 1672049 குறித்த விவரம் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்களில் வெளியிடப்பட்டன. அப்படியிருந்தும் இது வரை யாரும் பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டை கொண்டு வரவில்லை. அமெரிக்க சட்டப்படி அதிஷ்ட சீட்டில் பரிசு விழுந்தால் ஓராண்டுக்குள் உரிமை கோர வேண்டும். இல்லையென்றால் அந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிடும்.

அதன்படி நேற்றுடன் 6 கோடி பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிட்டது. அதிஷ்ட சீட்டு வாங்குபவர்கள் மறந்து விடுவதால் அல்லது தொலைத்து விடுவதால் பரிசுத் தொகைக்கு யாரும் உரிமை கோராத சம்பவம் அமெரிக்காவில் பலமுறை நடந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு புரூக்ளின் பகுதியில் விற்பனையான சீட்டுக்கு 68 மில்லியன் டாலர் அதாவது 430 கோடி பரிசு விழுந்தது. இந்த ஜக்பாட் தொகையை வாங்கவும் யாரும் முன்வரவில்லை. நியூயோர்க் வரலாற்றில் யாரும் உரிமை கோராத மிக அதிக அளவிலான பரிசுத் தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

hang

மெதிரிகிரிய – மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சிறுமியின் தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேராக வரும் சூரியன் : கடும் உஷ்ணம் நிலவலாம்!!

sun

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை 27ம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் அதிக உஷ்ணமாக இருக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 தொடக்கம் 31 வரை வடகிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முகமாலை, குமுழமுனை, கொக்காவில், முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், புல்மோட்டை, மறிச்சுக்கட்டி, தந்திரிமலை, ஹொரவப் பொத்தனை, திருகோணமலை பகுதிகளில் அதிக உஷ்ணமாயிருக்கும்.

அதேபோல் செப்டெம்பர் ஒன்று தொடக்கம் எட்டு வரை தென், மேல், கிழக்கு மாகாணங்களில் கலாஓயா, தலாவ, அளுத்ஓயா, காரைதீவு, கதிரவெளி, மங்களவெளி, தம்புள்ளை, திம்முலாகல, மாதம்பை, குருநாகல், மாத்தளை, சீதுவ, உலப்பனை, வலப்பனை, திருக்கோவில், தங்காலை, காலி, யால, கதிர்காமம் ஆகிய பகுதிகளிலும் அதிக உஷ்ணமாக காணப்படும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவ சேவையில் 45 தமிழ் யுவதிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்!!

army

45 தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைந்து கொள்ளவுள்ளதாக் குறிப்பிடப்படுகிறது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைக்கும் விசேட நிகழ்வு வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவம் தனிச் சிங்கள இராணுவம் அல்ல என்பதனை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் தமிழ் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் அளித்த்தாக வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலமாக கருதப்பட வேண்டும்.
யுவதிகளை இராணுவத்தில் இணைப்பதற்கு அனுமதியளித்த பெற்றோருக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு!!

SMARTPHONES Smartphones

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை வழங்க புலிச் சந்தேக நபர்கள் இந்த செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசிகளைப பயன்படுத்தி நவனீதம்பிள்ளையுடன் தொடர்புகொள்ள கைதிகள் திட்டமிட்டிருந்தனர்.
வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை நவனீதம்பிள்ளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!

pro

கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 37 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேர விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதமன்ற உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!

sampanthan

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவ்வாறு வெற்றிபெற்றால்தான் தமிழ் மக்கள் ஒரு கணிசமான சுயாட்சியைப் பெற்று தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தங்களுடைய நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ விரும்புகிறார்கள் என்ற செய்தியை நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும், ஏனைய மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நாங்கள் தெளிவாக கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.