வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் 25 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
20ம் திருவிழாவான கைலாசவாகனம் எதிர்வரும் 31ம் திகதி மாலை 5 மணிக்கும்,
21ம் திருவிழா செப்டெம்பர் 01ம் திகதி மாலை 5 மணிக்கு வேல்விமானத் திருவிழாவும்,
செப்டெம்பர் 3ம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறத் திருவிழாவும்,
செப்டெம்பர் 4ம் திகதி காலை 7 மணிக்கு தேர்த் திருவிழாவும்,
5ம் திகதி காலை 7 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும்,
6ம் திகதி பூங்காவனமும் இடம்பெறவுள்ளன.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமைபோல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதராக உருவாக்கியுள்ளது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோவாவில் உள்ள பிர்லா கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கியிருக்கிறது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
நான் கிரிக்கெட் விளையாடியபோது பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தேன். இது வாழ்க்கையை பற்றி நிறைய கற்றுக்கொடுத்தது.
தற்போது நான் எனது தந்தையின் ஸ்டூடியோவில் அமர்ந்து கொண்டு ஒரு குழந்தையை போல் கிரிக்கெட் அறிவிப்புகளை கவனித்து வருகிறேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற பல லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன. உலகத்தில் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.
ஒழுங்காக நடிக்காமல் 15 டேக் வாங்கி இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார் பிந்து மாதவி. மனம் கொத்திப் பறவை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல், பிந்துமாதவி ஜோடியாக நடிக்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்தாலும் குறைந்த காட்சிகளில் மட்டுமே வருவேன்.
ஆனால் தேசிங்கு ராஜா படத்தில் தான் முதன் முறையாக முழு படத்திலும் வருகிறேன்.
இது நகைச்சுவை கலந்த படம் என்பதால் விமலுடன் இணைந்து நடிக்க சிரமப்பட்டேன்.
இதில் பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல் பற்றி விமல் விளக்கும் காட்சியில் “கொட்டை பாக்குக்காக” மோதி கொண்ட கதையை சொல்வார். அவர் கொட்டை பாக்கு என்று வசனம் சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும் 15 டேக் ஆகியும் சீன் சரியாக வரவில்லை.
இதனால் கோபப்படாத இயக்குனர் எழில் செம டென்ஷனாகி விட்டார்.
என் அருகில் வந்து, இப்படியே சிரித்து கொண்டிருந்தால் சீனை முடிக்க முடியாது வெளிச்சமும் போய்விடும் என்று சற்று கோபமாக கூறினார்.
அதன்பின் ஒழுங்காக நடித்து முடித்தேன், அவர் மட்டும் கோபப்படாமல் இருந்திருந்தால் 100 டேக் கூட வாங்கி இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த தேசிங்கு ராஜா 23ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டரில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்…
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி என்ற பழமொழிக்கேற்ப ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைத்து அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய கருணாநிதி, “ஒரு மாதத்திற்கு மேலாக முதல்வர் தலைநகர் சென்னையிலே இல்லையே” என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான் தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்ற ரீதியில் பதில் அளித்து, எந்தப் பத்திரிகையாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியதுண்டா என்றும் அங்கலாய்த்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தின் நன்மைக்காக பல முக்கியப் பிரச்னைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர்.
பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் கூர்ந்து நோக்குவார்களே தவிர முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா, அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சர் யார் யாருடன் விவாதம் நடத்தினார் என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதல்வர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கோடநாடு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள்.
அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா? நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் குறித்தும், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் உரிமைகள் குறித்தும் அவ்வப்போது கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வரும் நான், தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளேன்.
விலைவாசி உயர்விற்கு வித்திடும் பெட்ரோல், டீசல் விலைகளை மாதத்திற்கு இரு முறை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருவதற்கு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியதுடன், பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டிய முறை குறித்தும் எனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
இதே போன்று, மத்திய அரசின் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கும் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.
அந்த அறிக்கையில், 2014 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை நிர்ணயம் செய்யும் தார்மீக உரிமை அடுத்த ஆண்டு மே மாதம் வரை மட்டுமே ஆட்சியில் இருக்க தகுதியுடைய மத்திய அரசுக்கு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.
இது தவிர காப்பீட்டுத் துறை, தொலைத்தொடர்பு துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டேன்.
அந்த அறிக்கையில், இது போன்ற அந்நிய நேரடி முதலீட்டினை தொலைத்தொடர்புத் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன்.
மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பாரதப் பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகளுடன் நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு, 12.8.2013 முதல் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை 27.7.2013 அன்று வெளியிட்டேன்.
அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு 90,000 கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து வந்தது.
கருணாநிதி முதல்வராக இருந்து தமிழக முன்னேற்றத்திற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை.
தன்னலமின்றி தமிழக மக்களுக்காக உழைப்பது தியாகம். தன்னலத்திற்காக தமிழக மக்களுக்கு உழைப்பது போல் நடிப்பது வியாபாரம். கருணாநிதி எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மன் விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானமானது தீப்பிடித்து எரிந்ததில் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளன.
ஜேர்மன் நாட்டில் உள்ள லேய்ப்ஜிக் என்ற விமான நிலையத்தில் கோழிக்குஞ்சுகளை எடுத்துச் சென்ற சரக்கு விமானம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து குறித்து செய்தி தொடர்பாளர் யுவ் ஸ்ச்கார்ட்(Uwe Schuhard) கூறுகையில், இந்த விபத்தில் அதிகமான தீப்பிழம்புகள் வெளியானதால் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகின.
தீப்பிடித்து Antonov A12 விமானம் வெடித்ததையடுத்து 15 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 60 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர் என்று கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த விசாரணையானது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர் முதலிடம் பெற்று, உலகச் சம்பியன் என்கிற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார்.
நூறு மீட்டர் ஓட்டத்தை அவர் 9.77 நொடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடம் அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டினுக்கு சென்றது. அவர் ஓடிய நேரம் 9.85 நொடிகள்.
வெண்கலப் பதக்கத்தை உசைன் போல்ட்டின் சக நாட்டவரான நெஸ்டா கார்ட்டர் வென்றார்.
இந்தப் போட்டியில் முதல் 50 மீட்டர்கள் வரை ஜஸ்டின் கால்டின் போல்ட்டைவிட சற்று முன்னணியின் இருந்தார். எனினும் அடுத்த 50 மீட்டர்களில் போல்ட் தனது வேகத்தைக் கூட்டி வெற்றி பெற்றார்.
நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதியில் ஓடிய எட்டு பேரில் நாலவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவின் டேகு நகரில் இடம்பெற்ற உலகத் தடகளப் போட்டிகளின் இறுதி ஓட்டத்தின் போது, துபாக்கிச் சுடப்படுவதற்கு முன்னரே ஓடத் தொடங்கியதால் போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தப் போட்டியில் அவருடன் பயிற்சி பெறுபவரும் சக நாட்டவருமான யொஹான் பிளேக் வென்றார்.
மாஸ்கோவில் உசைன் போல்ட் 200 மற்றும் 100 மீட்டர் தொடரோட்டத்திலும் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரையே கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட வேலு இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது மனைவி சின்னமுனியம்மாள்(35), மகள் முத்துச்செல்வி(12) மகன் முனியாண்டி(10) ஆகியோரை அரிவாளால் சரமரியாக வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி சின்ன முனியம்மாள், மகள் முத்துச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மகன் முனியாண்டி கையில் வெட்டுக் காயங்களுடன் உறவினர் வீட்டிற்கு தப்பித்து சென்றுள்ளான். அங்கும் சென்ற வேலு தன் மகனையும், உறவினரான மூதாட்டி தனலட்சுமியையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனை அறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து திருச்சி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்பு காயம் அடைந்த முனியாண்டி மற்றும் மூதாட்டி தனலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த சின்ன முனியம்மாள், முத்துச்செல்வி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து வேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு காமெங்க் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் 4வது பட்டாலியன் படைப்பிரிவு முகாமிட்டுள்ளது.
நேற்று இந்த படைப்பிரிவைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 5 பேர் ஜெய்ஜோசா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 5 பேரும் தனித்தனியாக வேட்டையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தூரத்தில் கரடி நடமாடும் சத்தம் கேட்டது.
இதனையடுத்து சத்தம் கேட்ட பகுதியை நோக்கி சுட்ட போது, அங்கிருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.
ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது.
இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராஜா, தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தவில்லை என்று கூறினார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு களமாக அமையும் என்ற காரணத்தினாலேயே இந்தத் தேர்தலில் பங்கு பெறுவதாகவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், அஹிம்சை வழி போராட்டம், ஆயுதப் போராட்டம் என்ற வகையில் மூன்றாம் கட்ட போராட்டமாக மாகாண சபைத் தேர்தல் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டத்தின்போது, அது ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்று கூறி, சர்வதேசம் அதனை ஏற்கவில்லை என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேர்தலின் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டிருக்கின்றோம் என்பதை சர்வசேத்திற்கு எடுத்துக் காட்டி அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சியை சென்றடைந்தன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.
கிளிநொச்சிக்கான புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் காலம் கோடைக் காலமென்பதால் குறித்த போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றது என கால்பந்து சங்கத் தலைவர் க்ரெக் டைக் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த காலப்பகுதிக்கு ஏற்றவாறு போட்டிகளை நடாத்த தயார் என கட்டார் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் அரங்குகள் முழுவதும் குளிரூட்டப்பட்டு காணப்பட்டாலும் , ரசிகர்களுக்கான வசதிகள் போதுமானதாக அமையாது என க்ரெக் டைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து போட்டிகள் இடபெறுவதற்கான திகதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரேன் எலண்ட் என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றும் வல்லமை பொருந்தியவர்.
இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே அவற்றினை தத்துரூபமான ஓவியங்களாக மாற்றிவிடுவாராம்.
ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற விபரத்தை கூறும் ‘லாஸ் பால்மாஸ்’ என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலரே இதுவாகும்.
கவர்ச்சி நடிகை மறைந்த சில்க்ஸ்சுமிதாவின் வாழ்க்கை “சில்க் சக்கத் ஹாட்” என்ற பெயரில் கன்னடத்தில் படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே இந்தியில் டேட்டி பிக்சர் என்ற பெயரில் வந்தது. இதில் சில்க்ஸ்சுமிதா வேடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் நடித்துள்ளார்.
கடந்த வாரம் இப்படம் கர்நாடகா முழுவதும் ரிலீசானது. இதற்கு ஸ்ரீராம சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் நடித்துள்ளதால் இப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டங்கள் நடத்தினர்.
மங்களூர், மைசூர், பெல்காம் பகுதிகளில் தியேட்டர்களில் புகுந்தும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டர் அதிபர்களும் மிரட்டப்பட்டார்கள்.
இதையடுத்து கோர்ட்டிலும் ஆபாச காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்க் சக்கத் படத்துக்கு செப்டம்பர் 10ம் திகதி வரை தடை விதித்து தீர்ப்பு கூறினார். இதனால் படத்தின் இயக்குனர் திரிசூல் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடிகை நடித்தார் என்பதற்காக எனது படத்தை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.