இயக்குனர் சங்கத் தலைவராக விக்ரமன் தெரிவு: விசு தோல்வி.

vikraman

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும் நடிகரும் இயக்குனருமான விசு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது.

இதில் விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர்.

மேலும், துணை தலைவர் பதவிக்கு பி.வாசுவும் , கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசு ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும் இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.

2700 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வாக்களித்தனர்.

மேலும் நடிகர்கள், சத்யராஜ், பார்த்திபன், எஸ்.வி.சேகர், ராமராஜன் ஆகியோரும் படம் இயக்கி உள்ளதால் அவர்களும் வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.

இதில் இயக்குனர் விக்ரமன் 716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசு 556 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மற்ற பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

இதேவேளை நடிகர் ரஜினின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்க வந்தார். ஆனால் உள்ளே நுழைந்த அவரை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதற்கு வருடா வருடம் ரூ.600 சந்தா செலுத்த வேண்டும்.

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இந்த தொகையை செலுத்தவில்லையாம். எனவே அவர் வாக்களிக்க அனுமதி கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கினார். தற்போது கடல் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் செரிலாக்ஸ், பாரக்ஸ் குடித்து வளரவில்லை.. ஏழ்மையில் வாடியவன் நான் -தனுஷ்..

images

நான் செரிலாக்ஸ் சாப்பிட்டோ பாரக்ஸ் குடித்தோ வளர்ந்தவன் இல்லை. இளம் வயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் வாடியவன் என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதையொட்டி அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் இளமை நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஏழ்மை..

அவர் கூறுகையில்  அடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரிலாக்ஸோ பாரக்ஸோ குடித்து வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான்.

அண்ணன் பட்ட கஷ்டம்..

நானாவது பரவாயில்லை என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார்.

ஹீரோவானது எப்படி?

என்னுடைய 16வது வயதில் அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார். முதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.

ரஜினியுடனான உறவு

எனக்கும் ரஜினிசாருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய உறவு சாதாரணமானதாகவும், நல்ல மதிப்புடையதாகவும் இருக்கிறது. அவருக்கு ஒரு படம் பிடித்து விட்டால் மருமகனாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அவரே முன் வந்து பாராட்டுவார்.

எப்போதும் ரஜினி ரசிகன்

காதல் கொண்டேன் படம் திரையரங்கில் நல்லா ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ரஜினி சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. என்னை அவரின் பண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே நான் அங்கு சென்றேன். அங்கு ரஜினி சார் என்னை வெகுவாக பாராட்டினார். நான் எப்போதுமே ரஜினிசாருடைய ரசிகன்தான். அது எப்போதும் எந்த வாழ்க்கையிலும் மாறாது.

 

 

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமானது எப்படி என தெரியவந்தது..

edward

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.

அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹொங் ஹொங்(Hong Kong) இல் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.

 

இலங்கை தேசிய கீத சர்ச்சை தொடர்பில் ஐசிசி கவலை

Print

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது நாட்டின் தேசிய கீதத்திற்கு பதிலாக ஹிந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில் இது தவறுதலாக நடந்த விபத்து ஒன்று என சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐசிசி பணிப்பாளர் கிரிஸ் ரெடிலி எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அஜித் படத்தில் நான் கவர்ச்சியாகத்தான் நடிக்கிறேன்! – தமன்னா

thamana

தமன்னா அஜித் படத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. அதில் எனக்கு கவர்ச்சியான வேடம்தான் என்கிறார் தமன்னா. தெலுங்கிலும் இந்தியிலும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டுவதில் ஏகத்துக்கும் தயங்குவது வழக்கம்.

அந்த நடிகைகள் வரிசையில் தமன்னாவும் சேர்ந்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று தமன்னா அடம்பிடித்ததாகக் குற்றம்சாட்டினர்.

இதற்கு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் தமன்னா. அவர் கூறுகையில், “நான் கவர்ச்சியாக நடிக்க மறுக்கவில்லை. காட்சிக்கு அவசியம் என்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். மொழி வித்தியாசம் பார்ப்பதில்லை. அஜித் படத்தில் குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்ததாக தவறான வதந்திகள் பரவியுள்ளன.

என் உடலுக்கு கவர்ச்சியான உடைகள் அணிவது தான் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல படங்களில் மழைக் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். இனியும் கவர்ச்சியாகவே நடிப்பேன்,” என்றார்.

 

வவுனியாவில் உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழப்பு..!

accedent

வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இவர் இடம்பெயர்ந்து வவுனியாவில் வசித்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?

hair

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான  தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில்  தலைமுடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால்,  தலைமுடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும்.

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு  நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே  தலைமுடியை பராமரித்து கருமையான  தலைமுடியை நிலைக்க வைக்கலாம்.

கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும் இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம் . அதைப் படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால் இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

கறிவேப்பிலை

கருப்பான  தலைமுடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து சூடான எண்ணெயில் சேர்த்து ஒரு வாரத்திற்கு குளிர வைத்து பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால் கருமையான  தலைமுடியைப் பெறலாம்.

செம்பருத்தி எண்ணெய்

தலைமுடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால் கூந்தல் கருமையோடும் அடர்த்தியோடும்
வளரும்.

சீகைக்காய்

தலைமுடிக்கு ரசாயனம் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால் முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு கூந்தலுக்கு தடவி ஊறவைத்து குளித்தால்  தலைமுடியானது கருமையாக இருக்கும்.

கரட் ஜூஸ்

கரட் சாப்பிட்டால் அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.
எண்ணெய் மசாஜ்

தலைமுடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பிரவுன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை சூடேற்றி தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும் கருமை நிறத்துடனும் இருக்கும்.

நல்லெண்ணெய்

அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால் அது  தலைமுடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

கூந்தல் பாதுகாப்பு

வெளியே வெயிலில் செல்லும் போது  தலைமுடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால்  தலைமுடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

 

 


கதிர்காம உற்சவ நாள் மாற்றத்தால் இந்துக்கள் ஏமாற்றம்..

kathirkamam

கதிர்காம உற்சவ திகதி பிற்போடப்பட்டமையால் அதனை ஒட்டி உற்சவம் நடத்தும் முருகன் ஆலயங்கள் குழப்பத்தில் உள்ளன.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆடிப் பௌர்ணமிக்கு 15 நாள் முன்னதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தத்துடன் முடிவடைவது வழமையாகும்.

இந்த உற்சவ காலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் கதிர்காமம் சென்று வழிபடுவார்கள். இந்த ஆண்டு ஜூலை 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 22ம் திகதி ஆடிப் பௌர்ணமி தினமன்று தீர்த்த உற்சவத்துடன் முடிவடைவதாக இந்து பஞ்சாங்க நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆகஸ்ட் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் ஆகஸ்ட் 21ம் திகதி ஆவணி பௌர்ணமிக்கு முதல்நாள் அன்றே தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும் என்று தற்போது ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கதிர்காம ஆலயத்தின் உற்சவ திகதியை ஒட்டியே திருவிழாக்களை நடத்தும் முருகன் ஆலயங்களின் திருவிழாக் காலங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பஸ்நாயக்க நிலமே எனப்படும் கதிர்காம நிர்வாகத் தலைவர்களாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை என்றும் நாட்டின் இந்து கலாசார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கதிர்காம உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கிலிருந்து- கிழக்கு மாகாணம் ஊடாக மாதக் கணக்கில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள இந்து அடியார்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஊடாக தற்போது திருகோணமலை மாவட்டம் பட்டித்திடல் முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

ஆடி மாதம் பௌர்ணமிதான் முருகனுக்குரிய ஆடிவேல் தினம். அப்படியிருந்தும் கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கவலை அளிக்கிறது என்று பாதயாத்திரை பக்தர்கள் கூறுகின்றனர்.ஆனால், உற்சவத்தை முன்னிட்டு கன்னிக்கால் நாட்டப்பட்டு 45 நாட்களின் முடிவிலேயே தீர்த்தோற்சவம் நடத்த வேண்டுமென்பதால், கன்னிக்கால் நாட்ட வேண்டிய கடந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதற்கு உகந்த நேரம் அமையவில்லை என்று கதிர்காம ஆலயத்தின் தலைமை கப்புறாளை- பூசகர் சோமபால பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

அதனாலேயே, எதிர்வரும் ஆணி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

 

பூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..

earth-600
நேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலும் பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 அடி அகலமுடைய அந்த விண்கல்லால் எந்த அபாயமும் பூமிக்கோ அல்லது செயற்கைகோள்களுக்கோ ஏற்படவில்லை என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கியூ.இ-2 என்று பெயரிடப்பட்ட 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு விண்பாறை ஒன்று இதேபோன்று பூமிக்கு அருகில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தநிலை நீடித்தால் விண்கற்கள் அல்லது விண்பாறைகளால் பூமிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம், எனவே இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது என நாசா எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 

இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக நீலகிரியில் ஆர்ப்பாட்டம்: 150 பேர் கைது..

sl

இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்ளூரிலுள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்களின் போராட்டத்தின் போது நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு போகும் பாதைகள் பலமணி நேரம் தடைபட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் குன்னூர் மற்று வெலிங்கடன் பகுதிகளில் கூடுதலாக இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் அவர் விங் கமாண்டர் எம்,.எஸ்.பண்டார தசநாயக் மற்றும் மேஜர் ஹரிஷ்சந்திர ஹெட்டியாராச்சிகே ஆகிய இரு உயர் இலங்கை இராணுவ அதிகாரிகள் உதகை வெலிங்டன் பயிற்சிக் கல்லூரிக்கு வந்திருப்பதாகத் தனக்குத் தகவல் வந்திருப்பதாகவும் ஏற்கெனவே பலமுறை தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்திலேயே இதுகுறித்த கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இத்தகைய பயிற்சி தொடர்வது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவதையே எடுத்துக்காட்டுகிறது என்றும் குறைகூறுகிறார்.

மேலும் கடந்த மே 27 அன்று தஞ்சையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அண்டனி இலங்கை வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவித்த அதே நாளில்தான் தசநாயகவும், ஹெட்டியாராச்சிகேயும் வெலிங்டனில் பயிற்சிக்கான ஆயத்தங்களைத் துவங்கினார் என்கிறார் முதல்வர். பயிற்சி கொடுப்பதில்லை என்பது அரசின் கொள்கை முடிவென்றால் எப்படி பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியாமல் இப்படி இருவர் அழைக்கப்படலாம் என அவர் வினவுகிறார் .

இந்நிலையில் அவ்விருவரும் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நிகழும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாததுவரை, தமிழக மீனவர்கள் மீதான் தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை  இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே எவ்வித இராணுவ ரீதியான உறவுகள் இருக்கக்கூடாது என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் மேலும் கோரியிருக்கிறார்.

 

 

சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்கு செயற்கைக்கோளை அனுப்ப தயாராகும் நாசா..

sun1
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ள நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை இந்த மாதம் 26-ம் திகதி அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.

இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும்.

சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும் பூமியின் காற்றுமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் சூரியனை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.


வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளம் பெண் கைது

கொழும்பு, வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 4 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றபப்ட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 23 வயதான யுவதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று கொழும்பு புதியகடை மூன்றாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இக் கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

இறுதிவரை போராடி தோற்ற இலங்கை அணி..

168646515MS00015_Sri_Lanka_

இலங்கை அணிக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர் குஷால் பெரேரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். டில்ஷான் 20 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற குமார் சங்ககார மட்டும் தனி ஆளாக இலங்கை அணியை மீட்க போராடினார். இறுதியில் அவரால் 68 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. மூன்று வீரர்களை தவிர அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்ககொள்ள இறுதியில் இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பில் மெக்லிநகன் 4 விக்கெட்களையும்  மில்ஸ், நதன் மெக்கலம் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மிகவும் இலகுவான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு எரங்க ஆரம்பத்தில் அதிர்ச்சியளித்தார். இவர் வீசிய 4வது ஓவரில் ரோஞ்சி  7  ஓட்டங்களுடனும் கப்டில் 25 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.அடுத்து வந்த மலிங்க தனது வேகத்தால் நியூசிலாந்து வீரர்களை கதிகலங்க வைத்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நதன் மெக்கலம் 32 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்றார்.

இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் இறுதிவரை மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். நடுவர்களின் சில தவறான தீர்ப்புக்கள் இன்றைய போட்டியை மாற்றியது என கூறலாம். இறுதியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றது இலங்கை சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுகளையும்  எரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இன்றைய தோல்வியின் மூலம் இலங்கை அணியின் அரை இறுதிக்கான வாய்ப்புகள் கேள்விகுறியாகியுள்ள நிலையில் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

~கேசா~

 

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு தூரமானி பொருத்தும் நடவடிக்கை யாழ். வீதி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த வருடஇறுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நல்ல முறையிலான சீருடை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு தூரமானிகளை கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

vna

விஸ்வரூபம்- 2 ஒளிப்பதிவாளரை மாற்றிய கமல்

கமல்ஹாசன் இயக்கத்தில் வளர்ந்து வரும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தினை திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, விஸ்வரூபம் 2 படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

விஸ்வரூபம்’ படத்தில் சானு ஜான் வர்கீஸ் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

இவரது ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள் கிடைத்திருந்தும், இரண்டாம் பாகத்தில் ஷாம்தத் என்பவரை ஒளிப்பதிவாளராக தெரிவு செய்திருக்கிறார் கமல்.

இவர் பணியாற்றிய ‘சாக்சம்’ என்ற படத்தின் ஃபுட்டேஜ் பார்த்த பின்பே கமல் இவரை தெரிவு செய்ததாகக் கூறுகின்றனர்.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதால், இறுதி கட்டப் படப்பிடிப்பை டெல்லியில் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படக்கூடிய அளவில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பிரெடோரியாவிலுள்ள பெயர் அறிவிக்கப்படாத மருத்துவமனை ஒன்றில் மண்டேலா சேர்க்கப்பட்டுள்ளார்.

மண்டேலாவை குணப்படுத்தவும், அவருக்கு கஷ்டத்தைக் குறைக்கவும் மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருவதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய மண்டேலா சிறையில் இருந்த இருபத்து ஏழு ஆண்டு காலத்தில் அவருக்கு காசநோய் ஏற்பட்டிருந்தது.

வெள்ளையின சிறுபான்மையினரின் இனவெறி ஆட்சியிலிருந்து தென்னாப்பிரிக்கா ஜனநாயகப் பாதைக்கு திரும்பியபோது அதன் தலைவராக இருந்த மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தையாக மதிக்கப்படுகிறார்.