யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வல்லை வெளியொன்றிலுள்ள கோயில் ஒன்றிலிருந்தே தனிமையில் அழுது கொண்டிருந்த நிலையில் இம்மாணவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். நல்லூர் பகுதியில் வைத்து இவர் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தொடர்பில் எதனையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது
சீரற்ற காலநிலையில் சிக்கி பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும் காலி மாவட்டத்தில் 12 பேரும் மரணமடைந்துள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 22 மீனவர்கள் காணமல் போயுள்ளதாகவும் 30 படகுகள் கரைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.அதேவேளை சேதமடைந்த 14 படகுகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான மீனவப்படகுகளில் இருந்து காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களில் காலநிலை சீரடைந்தமை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த நீர்த்தேக்கங்களின் மட்டங்கள் குறைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாக மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் சரத்லால் குமார தெரிவித்தார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டில் நிலவும் கடும் காற்றுடனான மழை காலநிலை படிப்படியாக குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தென்மேற்கு கடற்பிராந்தியம் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும் என்று திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
நாட்டில் மீன்பிடித் தொழிலை இன்றும் (09) மேற்கொள்ள முடியாது என இலங்கை காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடே யாழ்ப்பாணம், திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களின் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும்.
புத்தளத்திலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் இடையிடையே மழை பெய்யக் கூடும் எனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமற் போயுள்ளனர்.
காயமடைந்த 22 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (08) இரவு 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 318 குடும்பங்களைச் சேர்ந்த 1180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன.
நாட்டில் நிலவும் மோசமான கால நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்கச் சென்று கடும் காற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரின் மூன்று கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பலப்பிட்டிய பிரதேசத்தில் 5 மீனவர்களும், கொழும்பில் 2 மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணப்படும் கொந்தளிப்புநிலை சற்றுக் குறைவடைந்ததும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினருக்குச் சொந்தமான பல சிறிய படகுகள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடல்கொத்தளிப்பு தொடர்ந்தும் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பலப்பிட்டி பிரதேசத்தில் 5 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியதுடன், 15 முதல் 20 வரையான படகுகள் காணாமல் போயுள்ளன. நீரில் மூழ்கிய மூன்று மீனவர்களின் சடலங்கள் பேருவளைப் பகுதியில் கரையொதுங்கியதுடன், 5 மீனவர்கள் பலப்பிட்டியவில் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவப் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி தெஹிவளைப் பிரதேச மீனவர்கள் நேற்றுக் காலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே மீன்பிடிப் படகை நிறுத்தி ரயிலை மறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தெய்வேந்திரமுனை பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற 8 படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலநிலை சீரடையும்வரை தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென எச்சரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்திருக்கிறார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய திணைக்களங்களில் சிற்றூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் நடைபெறவிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா நகரசபை மண்டபம் வரையில் பேரணியாகச் சென்றனர்.
அங்கு நுழைவாயிலில் வைத்து அவர்களை வழி மறித்த பொலிசார் அவர்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்.
அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, தகுதியுள்ளவர்கள் என்று நேர்முகப் பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அமைச்சரிடம் இந்தப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் உறுதியளித்து அதற்கு ஆதாரமாக வடமாகாண ஆளுனருக்குப் பெயர் விபரங்களுடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வழங்கியிருப்பதாக அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகிய நடேசன் பார்த்திபன் தெரிவித்தார்.
இந்த வருடத்திற்கான அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலகின் முன்னணி பத்திரிக்கையான போப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடத்தை பெற்றுள்ளார்.
இவர் கடந்த வருடம் மட்டும் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 440 கோடி) தொகையை பரிசு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார் என்று போப்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டோனி 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் உலகின் தலை சிறந்த கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் 71.8 மில்லியன் டொலர் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முதல் நிலை டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மட்டும் 71.5 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். 61.9 மில்லியன் டொலருடன் அமெரிக்க கூடைப் பந்தாட்ட வீரர் கோபெ பிரியன்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
காலி பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர்.
இதனையடுத்தே மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினருடன் இணைந்து விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடலுக்குச் செல்ல வேண்டாம்
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
மீனவர்கள் போராட்டத்தால் தெஹிவளையில் பதற்றம்
தெஹிவளை பகுதியில் ரயில் வீதியை மறித்து மீனவர்கள் சிலர் போராட்டம் மேற்கொள்வதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியே மீனவர்கள் போராட்டம் செய்கின்றனர். இங்கு சிலர் மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி, பேருவளை, பெந்தோட்டை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.காணாமல்போயுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் மூலம் மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.பேருவளை கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரும் தெஹிவளை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறு மீனவர்களுடன் தெஹிவளை கடற்பரப்பில் படகொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கையை விமானப்படை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஜய சாகர என்ற கப்பலை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
பேருவளை, மொரட்டுவை, தெஹிவளை ஆகிய கடற்பரப்புக்களில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் படகுகளில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக நந்திமித்திர மற்றும் சயுர கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பாக வவுனியா நகரசபை மண்டபத்தில் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆனுசரணையுடன் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் காணியற்றோர், காணி இழந்தவர்களுக்கான உரிமைகள், காணிப்பிரச்சனைகள், எல்லைப்பிரச்சனைகள், ஆவண இழப்பு, காணி உரிமைப் பிரச்சினை என்பன தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கும் செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா கிராம சேவகர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்த இக் கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஆணையாளரும் வட மாகாண சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆலோசகருமான க. குகநாதன் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8/6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான நியமனம், சுகாதார மற்றும் விவசாய திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கான நியமனங்களே இவ்வாறு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜெயரட்ன, வட மாகாண பிரதம செயலாளர் ர. விஜயலட்சுமி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, சிறிடெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர்களான ச. கனகரட்னம், சி. கிசோர், பி. சுமதிபால உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு
Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.
தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உணவு பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கோ அதிசயமான உணவு பழக்கம் இருக்கிறது.
அங்குள்ள வெல்லிங்பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் என்ற 23வயது பெண்ணுக்கு அவரது குழந்தை பருவத்தில் இருந்தே சாதாரண உணவின் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம்.
இவருடைய முழு பசியையும் போக்கும் உணவு எதுவென்றால் உருளைக்கிழங்குகள் தான். உருளைக்கிழங்குடன் பாலாடைக்கட்டியை சேர்த்து உணவு தயாரித்து சாப்பிடுகிறார். இத்துடன் முட்டைக்கோசையும் அவ்வப்போது சேர்க்கிறார்.
இதுவரையில் இவர் ஏராளமான கூடைகள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு மற்ற உணவை கண்டாலே குமட்டல் வந்து விடுகிறதாம்.
இது குறித்து அவர் கூறுகையில்இ ‘உருளைக்கிழங்கை மட்டும் உண்பதால் உடலுக்குரிய போஷாக்கு போதாது தான் என்பதை உணருகிறேன். அதேநேரத்தில் புதிய உணவை சாப்பிட பயமாக இருக்கிறது.
இதனால் நோய் வந்து விடுமோ என அஞ்சுகிறேன். பிறந்த நாள் ‘கேக்’கை கூட சாப்பிட மாட்டேன். என்றாலும் என்னுடைய தாய் விருப்பத்துக்காக ஆண்டு தோறும் கேக் மட்டும் வெட்டி கொண்டாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சாப்பாட்டு விசயத்தில் சிலர் படு கில்லாடியாக இருந்தாலும் சாப்பாடு என்றாலே முகத்தைச்சுழிக்கும் சில இளசுகளும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள் எனவே இந்த கிழங்குப்பிரியையான பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்லவே?
இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல பயணிகளோடு யாழை நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து அதிகால 4:20 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் இருந்த பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பேரூந்தில் பயணித்த பயணிகள் 20க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதி தூங்கியதால் இவ் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.