14 வயதான மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீத முடிவு : தந்தையின் செயலால் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் தவறான செயலால் மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவர் மனைவி ராஜலட்சுமி. தம்பதிக்கு சிவதர்ஷினி என்ற 14 வயது மகள் இருந்தார்.

அசோக் ராஜபாண்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் செல்போனில் தொடர்ந்து அவருடன் பேசினார். இந்த உரையாடலை கேட்ட ராஜலட்சுமி கணவரின் தவறான செயலை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்காரணமாக இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கணவன் – மனைவி இடையே கொஞ்ச நாள்களாக பேச்சுவார்த்தை இல்லை. ராஜபாண்டி தன் மகளிடம் மட்டுமே பேசி வந்துள்ளார். இருப்பினும் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜலட்சுமி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு,

அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக் ராஜபாண்டி இன்னொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த ராஜலட்சுமி, தனது மகள் சிவதர்ஷினியுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (04.09.2021) கோவிட் தொற்றினால் 189 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 10140ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையில் 3,308 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர்.

உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதி அறிவிப்பு!!

பரீட்சை..

கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படிதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : 2021 நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை : 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன் க.பொ.த சாதாரண பரீட்சை: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இவை தற்போது முன்மொழியப்பட்ட திகதிகளே எனினும் நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள்!!!

யாழில்..

யாழ். அச்சுவேலி – நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் மரணச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை மீறி பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அச்சுவேலி நாவற்காடு பகுதியைச் சேர்ந்த தியாகராசா மதனபாலன் (வயது 40) என்பவர் உழவு இயந்திரத்தின் மூலம் உறவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 2ம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது. அல்வாயில் சடலம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சடலமானது அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது அவர் செலுத்திய இ.போ.ச பேருந்தும் இந்த ஊர்வலத்தில் சென்றது. இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் சென்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பழங்கள் : முறைப்பாடு செய்தும் நடவடிக்கை இல்லை!!

பழங்கள்..

பொது முடக்கம் காரணமாக மக்கள் வருமானமிழந்து இருக்கும் நிலையில் வவுனியாவில் பழங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்ற போதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என்பவற்றில் நடமாடும் கார் மற்றும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் பழங்கள் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

5 சிறிய மஞ்சள் தோடம்பழம் 300 ரூபாய் வரையிலும், மஞ்சள் பெரிய தோடம்பழம் ஒன்று 150 ருபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதுடன், ஏனைய பழ வகைகளும் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தமது உடல் நலத்திற்காக பழங்களை வாங்கி உண்பதுடன், விற்றமின் சீ போன்ற மாத்திரைக்ளுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் தோடை போன்ற பழங்களையும் அதிகம் வாங்கி வருகின்றனர்.

இதனை சாதகமாகப்பயன்படுத்தி சில வியாபாரிகள், அனர்த்த நேரத்தில் அதிக விலைக்கு பழங்களை விற்பனை செய்து மக்களது பணத்தை சுரண்டி வருகின்றனர்.

இது தொடர்பில் வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி எஸ்.நிலாந்தன் அவர்களிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்ட போது,

தமக்கு சில இலக்குகள் தரப்பட்டுள்ளன. தற்போது அவற்றை செய்து வருகின்றோம். இதனை எம்மால் உடனடியாக பார்க்க முடியாது. பின்னர் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் இராணுவத்தினரினால் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!!

கொரோனா விழிப்புணர்வு..

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வன்னி இராணுவத்தினரினால் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இதனையடுத்து வன்னி இராணுவத்தினரினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியா நகர், வங்கிகள், பஜார் வீதி, ஏ9 வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பழகியிருந்தால் தாங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

மற்றவர்களுடன் பழகும் சமயத்தில் குறைந்த பட்சம் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுதல் அவசியமாகும். மேலும் சுகாதார பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் வேண்டும் . இருமல், தும்மல் வருகின்ற சமயத்தில் முகத்தினை மறைத்தல் அவசியமாகும்.

கொரோனா நோயாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வன்னி இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவிற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன : இரண்டாவது தடுப்பூசி விரைவில்!!

தடுப்பூசி..

இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வருகின்றன என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் தடுப்பூசி வழங்கல் குறித்து இன்று (05.09.2021) கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பில் இருந்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வருகின்றன. செவ்வாய் கிழமையில் இருந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரித கதியில் சுகாதாரத்துறையினர் ஊடாக இடம்பெறும்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பாதிப்புக்குள்ளாகுவோரில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமாகவுள்ளமையால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதுடன், இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் வழஙகப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அந்த அந்த கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

எனவே மக்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் பெற்று கோவிட் தொற்றில் இருந்து பாதுகாப்பைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சினோபார்ம் தடுப்பூசிய செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!!

சினோபார்ம்..

கொவிட் வைரஸிற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் அதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் குறைந்த அளவிலான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை, சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு சற்று அதிகமாக காணப்படுவதாகவும், Pfizer, Moderna மற்றும் AstraZeneca ஆகிய தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களுக்கு குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய் உள்ளிட்ட ஏனைய நோய் காரணிகளுக்காக சிகிச்சை பெறுபவர்கள் Sinopharm கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள போதும் உரிய நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த தரப்பினருக்கு Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மூன்றாவதாக வழங்கப்பட வேண்டியது அவசியமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 2 வரை நீடிக்கப்படுகிறதா ஊரடங்கு? வெளியான தகவல்!!

ஊரடங்கு..

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும்.

எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு,

தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18ஆம் திகதி வரையும் அல்லது ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 20.08.2021 அன்று அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இரு தடவைகள் நீடிக்கப்பட்டு வரும் 13.09.2021 அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் இரு விலைகளில் விற்பனை செய்யப்படும் கோதுமை மா : அசமந்தபோக்காக செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை!!

கோதுமை மா..

வவுனியா மாவட்டத்தில் 100 ரூபா மற்றும் 115 ரூபா என இரு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இரு விலைக்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மா பையில் ஒரே பொதியில் இலக்கம் மற்றும் ஒரு பொதியில் 100 ரூபா என அச்சிடப்பட்டுள்ளது. மா பையில் 100 ரூபா என்பதனை அழித்து 115 என எழுதப்பட்டுள்ளது.

வவுனியா பஜார் வீதியிலிருந்து மக்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் குறித்த நிறுவனத்தினாலேயே இவ்வாறான விலை மாற்றம் செய்து சிறிய வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.

மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவா இவற்றினை கண்டும் காணாதும் செயற்படுகின்றனர் என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் நேற்று கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (04.09.2021) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கொரோனா தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளாத 32 வயது இளைஞன் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

32 வயது இளைஞன் தவிர்ந்த ஏனைய மூவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். குறித்த நான்கு பேரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!

வவுனியாவில்..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தெற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் வர்த்தக நிலையங்கள் சில திறந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதுடன்,

நடமாடும் வர்த்தகர்களும் ஒரே இடத்தில் வாகனங்ளை நிறுத்தி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீதியில் செல்பவர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்கள் என சிலர் முகக்கவசமின்றியும் காணப்பட்டனர்.

வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன் வங்கிகளிலும் மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இந்ந நிலை தொடருமானால் வவுனியாவின் கோவிட் பரம்பலை கட்ப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (04.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவினால் நாளொன்றுக்கு அரசாங்கத்திற்கு இத்தனை கோடி ரூபாய் இழப்பா?

ஊரடங்கு..

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபாவை அரசு இழந்து வருகின்றதாக இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நாட்டை முழுமையாக திறக்க வேண்டுமென்பதே தனது தனிப்பட்ட கருத்தாக காணப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் நாடு திறக்கப்படாவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

நாட்டிலுள்ள 45 இலட்சமான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடு முடக்கப்படுமானால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!!

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்..

இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன.

எனினும், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளன. அடுத்த ஜனவரி வரை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றும் யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!!

உலுக்குளம்..

வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (04.09.2021) பொலிசாரால் முற்றுகையிப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, செட்டிகுளம் பகுதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ன வீரக்கோன் தலைமையில்,

உலுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படும் நான்கு பெரல்கள், 100 லீற்றர் கோடா, வயர்கள் என்பனவும் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.