பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம் : மோதலாக வெடித்த தகராறு!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 45 மற்றும் 35 வயதுடைய பயணிகள் இருவரே இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் தங்கொட்டுவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஜப்பானில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நரீடா விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யு.எல்.455 என்ற விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ள நிலையில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் பலர் உறக்கத்தில் இருந்த வேளையில், இலங்கை பயணி ஒருவர் அதிகமான மது அருந்திவிட்டு அருகில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் நடத்துக் கொண்டிருந்த இந்த பயணி தொடர்பில் மற்றுமொருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதன்போது இருவருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில், விமான நிலைய ஊழியர்களினால் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த இரண்டு பயணிகளையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் : பல பெண்கள் கைது!!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் பாலியல் தொழில் நிலைய முகாமையாளரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் 7 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையத்தில் உள்நுழைவதற்காக ரூபாய் 2 ஆயிரம் அறவிடப்பட்டுள்ளதுடன், பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பெண்கள், குருநாகல், காலி, இரத்மலானை, நீர்கொழும்பு மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த மசாஜ் நிலையமான பாலியல் தொழில் நிலையம், இரண்டு மாடி கொண்ட சொகுசு கட்டடத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகை அடிப்படையில் பெறப்பட்டு நடத்திச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோமாலிய அமைச்சரை தீவிரவாதியென நினைத்து சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்!!

சோமாலியா அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸை தீவிரவாதி என தவறுதலாக எண்ணி, பாதுகாப்பு வீரர்கள் கொலை செய்துள்ளனர்.

பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸ் (வயது 31) நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு காரில் சென்றுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் காரில் வருவது தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் என தவறுதலாக எண்ணி அமைச்சரின் காரின் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் காருக்குள் அமர்ந்திருந்த அமைச்சர் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதலுக்குப் பின்னர் தான் அவர் அமைச்சர் என்பது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இத்தகவல் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அப்துலாஹி ஷேக் அபாஸ் மிகவும் இளம் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகளால் அடிக்கடி அரசாங்கத்திற்கு எதிராக தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் தலைநகர் மொகடிஷூவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தில் பதிவேற்றப்படும் தற்கொலை, வன்முறை : 3000 புதிய பணியாளர்கள்!!

பேஸ்புக் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூகவலைதளமாக உள்ளது. காலமாற்றத்திற்கேற்ப தேவையான அப்டேட்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இதில் லைவ் வீடியோ வசதியும் ஒன்று. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் கொலை செய்வதை லைவ் வீடியோவாக கொலையாளிகள் ஒளிபரப்பினர். இது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், சில நாடுகளில் தற்கொலை செய்வோர் தங்களது தற்கொலைகளை லைவ்-ஆக ஒளிபரப்பினர். இது குறித்து வந்துள்ள புகார்களை பரிசீலித்த பேஸ்புக் நிர்வாகம் மேற்கண்ட லைவ் வீடியோக்கள், கொலை, விபத்து மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க முன்வந்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3000 புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக மேற்கண்ட வீடியோக்களை கட்டுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளால் பதிவேற்றப்படும் வீடியோக்களில் முகம்சுளிக்கக் கூடிய வகையிலான வீடியோக்களை வலைதளத்திலிருந்து நீக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் இது போன்ற வீடியோக்களை கட்டுப்படுத்தி, நீக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்க இருப்பதாகவும் மார்க் ஸக்கர்பெர்க், முதலீட்டாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பன்றிகளுக்கு நீரூட்டியதால் வந்த வினை!!

இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பன்றிகளுக்கு நீரூட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கனடியப் பெண்ணை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அனிதா கிராஞ்ஜ் ஒரு சமூகச் செயற்பாட்டாளர். கடந்த 2015ஆம் ஆண்டு, டொரன்டோ புற நகர்ப் பகுதியில் ட்ரக் ஒன்றில் சுமார் 190 பன்றிகள் இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டன. வாகன நெரிசலில் அந்த ட்ரக் நின்றபோது, அனிதாவும் மேலும் சில ஆர்வலர்களும் போத்தல்கள் மூலம் பன்றிகளுக்கு நீரூட்டினார்.

இதை எதிர்த்த பன்றிகளின் உரிமையாளர், தனது சொத்துக்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறி அனிதா மீது வழக்குத் தொடர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் அனிதா செய்தது ஒரு மனிதாபிமானச் செயலே என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதிசெய்வதற்கு போதிய விளக்கங்கள் வாதி தரப்பில் வழங்கப்படவில்லை என்றும் கூறி நீதிபதி அனிதாவை விடுவித்தார்.

தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அனிதா, பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் சொத்துக்களாகக் கருதப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், உயிருள்ள அவற்றுக்கான அடிப்படி உரிமைகள் பெற்றுத் தரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்!!

 
பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும் சினிமா பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலருமான நவீனை திருமணம் செய்யும் முடிவுக்கும் வந்தார். இதைத் தொடர்ந்து நடிகை பாவனா – நவீன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்த நிலையில் இவர்கள் திருமணத்தை வருகிற ஒக்டோபர் மாதம் 27ம் திகதி திருச்சூரில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து உள்ளனர். மேலும் திருமண வரவேற்பை கொச்சியில் நடத்தவும் தீர்மானித்து உள்ளனர். தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது..

வருகிற அக்டோபர் மாதம் 27ம் திகதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்கு விருப்பம் இல்லை.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்க உள்ளோம். திரையுலகை சேர்ந்தவர்களில் யார்-யாரை அழைப்பது என்பதை நவீனுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். திருமணத்துக்கு பிறகு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிப்பை தொடர்வதில் நவீனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர் கூறினார்.

வவுனியாவில் இடம்பெற்ற சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு!!

 
சிறீரெலோ கட்சியினால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.05.2017) மாலை 5.30 மணியளவில் யாழிலும் வவுனியாவிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் மாலை 5.30 மணியளவில் சபாரத்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இடமாக கருதபடும் கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் யாழில் நினைவு கூறப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூத்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறந்த தம் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்திலும் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) மூத்த உறுப்பினரும் படுகொலைசெய்யப்பட்ட தலைவர் சபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலருமான அஜித் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் போராளிகளான சூரி, அல்பிரட், சாப் ஆகியோருடன் சிறீரெலோ இளைஞர் ஒன்றிய தலைவர் கார்த்திக், செயலாளர் தினேஸ் மற்றும் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்களுடன் தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி பிரேமிளா, கற்குழி கிராம மாதர் சங்க தலைவியும் சமூக சேவகியுமான திருமதி லோஜி ஆகியோர் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் அருகே கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி!!

வேலூர் அருகே கார் விபத்தில் தொலைக்காட்சி நடிகை சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் தொலைக்காட்சி துணை நடிகையாக நடித்து வந்தார்.சென்னைஸ் அமிர்தா உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மொடலாகவும் இருந்தார்.தற்போது தமிழில் ருத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை.

இவர், சென்னையில் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு நேற்றிரவு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நடிகை ரேகா சிந்துவுடன், பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சினி (21) மற்றும் ஜெயக்குமரன் (20) ஆகிய 2 பேரும் பயணித்தனர்.காரை அபிஷேக் குமரன் (22) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுண்ணாம்பு குட்டை என்ற பகுதியை கடந்து சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ரேகா சிந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஓட்டுநர் அபிஷேக் குமரன் உட்பட மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான ரேகா சிந்துவின் உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். விபத்தில் தொலைக்காட்சி நடிகை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதிசெய்தது டெல்லி மீயுயர் நீதிமன்றம்.

வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றதாகவும், மரணத் தறுவாயில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் பிரதிவாதிகள் நால்வரும் குற்றவாளிகளே எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதாகவும் தெரிவித்தனர்.

டெல்லியில், தனது நண்பர் ஒருவருடன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், ஆறு பேரடங்கிய குழுவால் கொடூரமான முறையில் 23 வயதேயான நிர்பயா வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த ஆறு பேரில் ஒருவர் இளம் பராயத்தைச் சேர்ந்தவர்.

சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, பதின்மூன்று நாட்களின் பின் 29ஆம் திகதி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதையடுத்து பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கான எதிரான புதிய சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.

குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இளம் பராயக் குற்றவாளி போதுமான நன்னடத்தைக் காலத்தை சீர்திருத்தப் பள்ளியில் கழித்ததனால் விடுதலை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் எதுவும் வெளிவராதிருக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ‘நிர்பயா’ என்று பெயர் சூட்டி அந்தப் பேரிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 71வது நாளாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 71 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05.05.2017) 71ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவனை தீ மூட்டி கொலை செய்த மனைவி!!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பெண் ஒருவர், தனது கணவனை தீ மூட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் உயிரிழந்த நபர் 67 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

கணவரை தீ மூட்டி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹம்பாந்தொட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண், ஹம்பாந்தோட்டை நீதவான் நிதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்!!

தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்று மரணமடைந்த இலங்கையரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.

பத்தேகம பொது மயானத்தில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கை இளைஞரின் சடலம் கடந்த 24ஆம் திகதி தென் கொரியாவில் உள்ள கங்கைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு கொரிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று தொழில் வாய்ப்பை பெற்று இவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்தார்.

தினமும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் இளைஞன் கடந்த ஒரு வாரமாக உறவினர்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்திருந்ததுடன், கடந்த 14 ஆம் திகதியே இளைஞன் கடைசியாக குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர், வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் மேற்கெணாண்ட விசாரணைகளை தொடர்ந்து இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டது.

மேலும், கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நபர் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் போது மனைவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை சோதனை செய்த போது, அதில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை செய்தபோது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது சந்தேகநபரின் மகள் எனத்தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் பிரிதொரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாடசாலைகளில் மாணவர் வருகை மந்தம் : காரணம் என்ன?

 
வவுனியாவில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை இன்று(05.05.2017) மிகவும் குறைவாக காணப்பட்டது.

​மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிராக நாடளவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பாடசாலைகள் இன்று இயங்காத என்ற வதந்தியை அடுத்து வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் மந்தமாக காணப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், பாடசாலைக்கு வந்த மாணவர்களையும் முச்சக்கர வண்டி சாரதிகள் பாடசாலை இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதாகவும் முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று பாடசாலை நடைபெற்றபோதும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதுடன் மாணவர்களை திரும்பவும் அவர்களின் வீடுகளில் கொண்டுபோய் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா வலயக்கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கல்வி அமைச்சர் ஏற்கனவே பாடசாலைகள் இயங்கும் என அறிவித்திருக்கும் நிலையில் எங்கள் வலயத்தால் எந்தவிதமான சுற்று நிருபங்களும் பாடசாலை இயங்காது என அதிபர்களுக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (05.05.2017) மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

தாண்டிக்குளத்திலிருந்து சாஸ்த்திரிகூழாங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது சாஸ்த்திரிகூழாங்குளத்திலிந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மின்சார கம்பத்துடனும் மோதியது.

இவ் விபத்தில் பட்டா ரக வாகனத்தில் பின்பகுதியிலிருந்து பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த வயோதிபர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

 
வவுனியா பிரதான வீதி ஓரத்தில் இன்று (05​.05.2017​) மாலை 5​​ மணியளவில் வயோதிபர் ஒருவர் வீழ்ந்த நிலையில் காணப்பட்டார்.

இவர் வீதியோரத்தில் வீழ்ந்திருப்பதை வீதியில் பயணிக்கும் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றுள்ளனர். இவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

இவர் வவுனியாவில் பெய்து வரும் கடும் மழையிலும் நனைந்த நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.