தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டத்திற்கு ஆகும் செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த சந்தர் மேக்வால் தன் மகளுக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த கிராமத்தில் தலித் இன மக்கள் மேளம் மட்டும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேண்டு வாத்தியங்கள் உயர்சாதியினருக்கானது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆனால் இந்த கட்டுபாட்டினை மீறி சந்தர் மேக்வால் மணமகன் அழைப்பிற்கு பேண்டு வாத்தியங்களை பயன்படுத்தி, பொலிசாரின் பாதுகாப்போடு திருமணத்தினை நடத்தினார்.
இதனால் உயர் சாதியினர் தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெயினை கொட்டி கொடூர செயலை செய்துள்ளனர்.
இதை அறிந்த கலெக்டர் டி வி சிங் மற்றும் எஸ் பி மீனா ஆகியோர் அந்த கிணற்றினை ஆய்வு செய்து, உயர் சாதியின மக்களிடம் பேசி சமாதானம் படுத்தியுள்ளார். மேலும் இரண்டு போர்வெல் போடவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் ஈடுபட்டார். அதே சமயம் தனித்தமிழ்நாடு வேண்டும் என பல பேட்டிகளில் கோரியிருந்தார்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் இரண்டு பேர் இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கெளதமன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனை அடுத்து கொல்ல முயன்ற கெவின், சிவா இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, கொல்ல முயன்றதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை.
காலியில் ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்று அந்தப் பகுதி மக்களின் முயற்சியில் தவிர்க்கப்பட்டுள்ளது.
காலி, பியதிகம பிரதேசத்தில் பயணித்த முச்சகர வண்டி ஒன்று ரயில் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதன் காரணமாக ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்றை பிரதேச மக்கள் இணைந்து தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டி வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வேறு வாகனம் ஒன்றிற்கு இடமளிக்க முயற்சித்த போது, பாலத்திற்கு அருகில் இருந்த மின்சார தூணுடன் மோதிய முச்சக்கர வண்டி ரயில் வீதியில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடனடியாக செயற்பட்ட மக்கள் அந்த பகுதிக்கு வருகைத்தரவிருந்த ரயிலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்மூலம் அங்கு ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக காலி – கொழும்பு ரயில் பயணம் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அத்துர வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 10 வருடங்களின் பின்னர் 31 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம், மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வர்த்த ரீதியில் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றை 33 வயதான சேம் பிரின்ஸ் என்பவர் ஆரம்பித்து முன்னெடுத்து செல்கின்றார்.
இலங்கையை சொந்த நாடாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த சேம் பிரின்ஸ், அவுஸ்திரேலியாவில் இளவயது வர்த்தகராக முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் வெளியான இளம் பணக்காரர்கள் பட்டியலில் சேம் பிரின்ஸ் 10ஆம் இடத்தை பெற்றிருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.
2015ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவராக இருந்த போதே, பிரின்ஸ் 17 ஆயிரம் அமெரிக்க டொலரில் குறித்த ஹோட்டலை ஆரம்பித்துள்ளார்.
இளம் வயதில் இவ்வாறான சாதனை பெற்றுக்கொள்ள தனது பெற்றோர்கள் ஆதரவாக செயற்பட்டதாக சேம் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக எனது சிறு வயதில் குடும்பமாக அவுஸ்திரேலியாவில் குடியேறினோம். இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் அம்மா வாழ்ந்தார். அந்தக் கிராமதில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதல் நபரும் எனது அம்மாவே.
பல வருடங்களாக குடும்ப வருமானம் பூச்சியமாக இருந்த போதே, எனது அம்மா படித்து வந்துள்ளார். ஆனால் கஸ்டத்தின் மத்தியிலும் எனது அம்மா திறமையானவராக திகழ்ந்தார்.
ஐந்து பட்டங்கள் மற்றும் PhD பட்டங்களை பெற்ற எனது அம்மா அவுஸ்திரேலியாவில் பொருளாதார வல்லுநராக பணியாற்றுகிறார்.
அவுஸ்திரேலியாவில் சாதனையை நிலைநாட்டிய பின் வைத்தியரான சேம் பிரின்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தனது அம்மாவின் கிராமத்திற்கு சென்ற சேம் பிரின்ஸ் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் பாம்பு கடித்தல் போன்ற இன்னல்களுடன் போராடிக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கும் வைத்தியரான சேம் பிரின்ஸ் பல உதவிகளை செய்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளம் ஜோடியினர் நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். நீண்ட நேரமாக கோட்டை பகுதியில் கதைத்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று, நஞ்சு அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு.
நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்துத் தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது, இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது.
இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61 ஆவது படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே.யுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் ஆர்.கே.யுடன் மற்றொரு நாயகன் போன்ற வேடத்தில் வடிவேலு வருகிறாராம். இதில் காமெடி கலந்த வில்லன் வேடம். இருவருக்கும் எதிரும் புதிருமான பாத்திரம்.
இந்த படத்தில் வடிவேலு புதிய விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
காமெடியிலேயே கலக்குவார். வில்லத்தனம் நிறைந்த காமெடியிலும் சொல்லவா வேணும். தெறிக்க விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரிட்டன் மற்றும் சீனாவிற்கிடையே உலகின் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதையினுடாக ’ஈஸ்ட் விண்ட்’ என்ற கொள்கலன் ரயிலானது 12 ஆயிரம் கிலோமீற்றர்களை, 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் விண்ட் ரயிலானது ஐரோப்பா மற்றும் சீனாவிடையே வர்த்தக உறவை பலப்படுத்துவதற்காக கடந்த 10ஆம் திகதி லண்டனிலிருந்து தனது பயணத்தை தொடங்கியது.
குறித்த ரயிலானது பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து 20 நாட்கள் பயணத்தை முடித்து இன்று சீனாவின் வர்த்தக நகரமான ஈவு நகரை அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு விமான போக்குவரத்தின் மூலம் ஏற்படும் அதிக செலவு, கப்பல் போக்குவரத்தின் மூலம் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து கொள்வதற்காக ரயில் போக்குவரத்து திட்டத்தில் சீன அரசு அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை – புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தககல் செய்து இவ்வாறு ட்ரயல் அட்பார் விசாரணையை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.
வட கொரிய பிரச்சினையால் அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என, பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கெய்ரோவிலிருந்து தனது விமானத்தில் பயணம் செய்யும் போது போப் பிரான்சிஸ் வட கொரிய சிக்கலைத் தீர்க்க மூன்றாம் தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றார்.
வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மூன்றாம் தரப்பு நாடு ஒன்று குறிப்பாக நோர்வே போன்றதொரு நாடு மத்தயஸ்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழ்நிலை மிகவும் சூடாகி விட்டது, உலகம் ஒரு அழிவு தரும் அணு ஆயுத போர்ச் சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அப்படியொரு பரவலானப் போர் வரும் பட்சத்தில் மானுடத்தின் சிறப்பானதொரு பகுதி அழியக்கூடும் என்று அவர் கூறினார்.
சத்திர சிகிச்சை நிபுணராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புள்ளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட வந்த ஒருவரை இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வியாபாரம் நடத்தி வந்த பெண்ணொருவரிடம் அவர் நிதி சேகரிக்க முற்பட்ட போது பெண்ணுக்கு அறிமுகமான சிலர் சந்தேகநபரை இன்று (30) பிற்பகல் அளவில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மாத்தளையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இதனை இலங்கையில் அனுஷ்டிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பல பகுதிகளிலும் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணி பொரல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காலி முகத்திடலில் தமது மே தின நிகழ்வுகளை நடத்தவுள்ளது.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ்வாண்டின் மே தினம் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளது.
நாளை (02.05.2017) தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்னேவ, புலன்நட்டுவ குளத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு, தமது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் சிறுமியை தேடிய போது குளத்தில் இருந்த முதலை ஒன்றின் வயிற்றில் சிறுமி இருப்பதை அவதானித்துள்ளனர்.
வவுனியா தவசிகுளத்தில் இன்று (01.05.2017) காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதீப் (வயது 25) என்ற இளைஞன் வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் முன்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் என்ன என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (30) இரவு முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கண்டியில் 16 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.