மேல் மாகாணத்திலுள்ள 58 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்!!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 58 வீதமானமை டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 889 பாடசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை டெங்கு நுளம்பு பரவும் வகையில் பாடசாலை சூழலை வைத்திருந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுற்று நிரூபத்தினூடாக ஏற்கனவே அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக்க சேனானி தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 திரைப்படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்!!

உலகமெங்கும் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள பாகுபலி-2 படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை கீழே பார்ப்போம்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள பாகுபலி 2 உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத சில ஸ்வாரஸ்ய தகவல்களாவன,

* `பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரமாண்டத்துக்கு காரணம் அதில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்கிகள். 33 நிறுவனங்களில் இவை உருவாக்கப்பட்டன. 70 நிபுணர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒரு லட்சத்து 45 ஆயிரம் பிரேம்கள் இவர்களால் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

* பாகுபலி-2 படத்தை பி.பி.சி தொலைக்காட்சி முதன் முறையாக ஆவணப்படமாக தயாரித்து வெளியிடுகிறது. பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் துல்லியமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

* பாகுபலி படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடல் எடையை 30 கிலோ வரை அதிகரித்தனர். இதற்காக தங்களை 8 மாதங்கள் தயார் செய்தனர். இதற்காக உடற்பயிற்சி செய்தவற்காக பிரபாஸ் அவரது வீட்டில் 1.5 கோடி செலவில் ஜிம் அமைத்தார்.

* பாகுபலி படத்துக்காக ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் 199 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் இடம் பெறும் பிரமாண்ட செட்டுகளை அமைக்க 150 நாட்கள் ஆகின. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்க வசதி இருந்தது என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து : 8 பேர் பலி!!

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வத்தளையில் நடுவீதியில் தீக்கிரையான கார்!!

வத்தளை, நீர்கொழும்பு வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது கார் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயால் கங்கையில் தூக்கி வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!!

கடுவலை பாலத்தில் இருந்து களனி கங்கையில் தாயால் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை கடுவலை பாலத்திற்கு அருகில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், சம்பவத்தில் பலியானவர் ஆறு வயதான சிறுவன் எனத் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்யும் நோக்குடன் குறித்த தாய் கடுவலை பாலத்தில் இருந்து சிறுவனுடன் கங்கையில் குதித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், அங்கிருந்தவர்கள் தாயை காப்பாற்றியுள்ளனர்.

மேலும், தாய் பியகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை!!

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (30.04.2017) காலை 10.30 மணியளவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் சிறப்பு விருந்தினர்களாக உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரீ.பி.ஜி.என்.டி. அல்விஸ், வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார , கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திராஜா, வி.ஜெயதிலக மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள், மாதிரிகிராம வீட்டுத்திட்ட உதவிகள், காணி அனுமதிப்பத்திரம் , சக்கர நாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டது.

பிறப்பு, இறப்பு, அனுமதிப்பத்திரங்கள் , தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு தொடர்பான விடயங்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டோர், காணாமல் போனோர், கடும்பாதிக்கபட்டோர் கொடுப்பணவு தொடர்பான விடயங்கள் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திலிலும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையில் நீண்ட காலமாக பதிவுத்திருமணத்தினை மேற்கொள்ளாதிருந்த மூன்று பேருக்கு திருமணம் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஸாட்டும், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனும் கையெழுத்திட்டு திருமணத்தினை செய்து வைத்துள்ளனர்.

வவுனியாவில் அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு நூல் வெளியீடு!!

 
வன்னியில் ஆதிகாலத்தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு எனும் நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ் மணி அகளங்களன் தலைமையில் நடைபெற்றது.

நாகர் காலத்து தொல்பொருள் சின்னங்கள் போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்திய நுலாக வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு எனும் நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை தமிழ்மணி அகழங்கன் வெளியிட்டு வைக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ விநோதாரலிங்கம் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், பேராசிரியர் சி.பத்மநாதன், ஜே.கோபிநாத், பிரதேச கலாச்சார உதியோகத்தர் பிரதீபன், மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம், சட்டத்தரணிகளான சிற்றம்பலம், கெங்காதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ வினோதாரலிங்கம் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வவுனியாவில் நீண்டகாலம் திருமணம் செய்யாத மூவருக்கு அமைச்சர் றிசாட் தலைமையில் திருமணம்!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் மூன்று பேருக்கு திருமணம் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியாவில் இன்று (30.04.2017) இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் செவையின் ஆரம்ப நிகழ்வுகள் காலை 10 மணியளவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமாக ரிஸாட் பதியூதினினால் மூன்று பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக பதிவுத்திருமணத்தினை மேற்கொள்ளதிருந்த மூன்று பேருக்கே இன்று அமைச்சர் தலைமையில் திருமணம் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஸாட்டும், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனும் கையெழுத்திட்டு திருமணத்தினை செய்து வைத்துள்ளனர்.

இலங்கையை வதைக்கும் கடும் வெப்பம் : உருகும் நிலையில் நுவரெலியா!!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக, தெற்காசியா முழுவதும் கடுமையான வெப்பநிலை உணரப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சமகாலத்தில் இலங்கை தீவிரமான வெப்ப நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் காணப்படும் வெப்பநிலை, சராசரியிலிருந்து 31 டிகிரி செல்சியஸ் வரை ஏப்ரல் மாதத்தில் உணரப்பட்டுள்ளளது. எனினும் ஈரப்பதமான கடல் காற்று இன்னும் 36 செல்சியஸ் அளவில் உணரப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிக வெப்பநிலை நிலவுகின்ற போதிலும், ஒரு பகுதி வீடுகளில் காற்றுச்சீரமைத்தல் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக இளம் வயதினரும் முதியோர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாடு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியா, தேயிலை வளம் கொண்ட நகரமாகும். இதனை குட்டி இங்கிலாந்து என்று அழைப்பார்கள். ஏனெனில் இந்த நகரத்தின் தட்பவெப்ப நிலை ஐரோப்பா பகுதிகளில் உள்ளதனை போன்று காணப்படும்.

நுவரெலியாவில் பொதுவாக ஏப்ரல் மாத வெப்பநிலை சுமார் 10 முதல் 15 செல்சியஸ் வரை காணப்படும். எனினும் கடந்த புதன்கிழமை மெர்குரி 24 செல்சியஸை அடைந்துள்ளது. அண்மைய நாட்களில் நுவரெலியாவில் 22 செல்சியஸிற்கும் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழையின் ஆரம்பத்திலேயே இந்த வெப்பம் குறைவடையும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

ஹொரணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிறிதொரு வாகனத்துடன் குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என்றும், சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அவரை இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மனைவியுடன் சண்டை : வீட்டுக்கு தீமூட்டிய கணவன்!!

 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்துள்ளது.

மனைவியுடன் நேற்றிரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஆத்திரமடைந்த சந்தே நபர் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்துள்ள காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அனைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கு நாளை (01.05) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவிலுள்ள அனைத்து வியாபார நிலைய உரிமையாளர்களும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் : அவசரமாக தரையிறக்கம்!!

லண்டனில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பயணிகள் விமானம் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் திடீரென ஒக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டனில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அவசர கால ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்தது. இதனால் பயணிகள் கடும் அச்சம் அடைந்தனர்.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். வேறு விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் டெல்லி அனுப்பி வைக்கப்படுவர் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் முகமூடி என்பது விமானப் பயணத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பயணிகளுக்கு சீராக ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும் அமைப்பாகும்.

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாக சபை சர்ச்சைக்கு மத்தியில் தேர்வு!!

 
வவுனியா உதைபந்தாட்ட சங்க புதிய நிர்வாக சபைத் தேர்வு இன்று (29.04.2017) காலை 9.30 மணியளவில் இந்திரன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த எதிர்பர்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டம் வெற்றிகரமாக பழைய நிர்வாகசபை மறுபடியும் வவுனியாவிலுள்ள கழகங்களினால் வாக்கெடுப்பு நடைபெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா உதைபந்தாட்ட சங்கத் தலைவராக ஜோன்சன் (தேவா), செயலாளராக அ.நாகராஜா, பொருளாளராக ஏ.ஆர்.எம். லரீப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் வருடாந்த நிர்வாகசபைக் கூட்டத்தின் இறுதியில் ஊடகவியராளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கருத்தத் தெரிவித்தனர்..

நிர்வாக சபைக்கூட்டம் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. அனைத்துத்தரப்பினரும், அனைத்து விளையாட்டுக்கழகங்களின் ஒத்துழைப்பினால் மறுபடியும் பழைய நிர்வாக சபையினரே வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சங்கத்தினை வளர்த்து எடுப்பதற்கு அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். புலம்பெயார் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தாய்ச்சங்கத்திலிருந்த குறைந்தளவிலிருந்தே நிதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது சங்கத்திற்கான உதவிகளை வழங்க முன்வரவேண்டும். எமக்கு நிர்வாக கட்டடத்தினை எற்பட்தித்தர முன்வரவேண்டும்.

இன்று இடம்பெற்ற நிர்வாகச் சபை கூட்டத்திலும் அரசியல் தலையீடு காணப்பட்டது. அதையும் கடந்து இன்று வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த செயலாளர், இந்தச் சங்கத்திற்கு சிறந்த பயிற்சியாளபர்களை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். கடந்த காலங்களில் அதிக சுற்றுப்போட்டிகளை நடாத்தியிருக்கின்றோம். பாரிய சவாலுக்கு மத்தியில் பொறுப்பெடுத்திருக்கின்றோம்.

விளையாட்டுக்கழகங்களுடாக எமக்கு 2019 வரை எமக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சகல விளையாட்டுக் கலகங்களும் ஒன்றிணைந்து எமக்கு அங்கீகாரத்தினைத் தந்துள்ளார்கள். கழகங்கள் தந்த அங்கீகாரத்தினை செவ்வனே நிறைவேற்றுவோம். வவுனியா மாவட்டத்தில் இன மத பேதமற்று செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

 
வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று (29.04.2017) காலை 10 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி விஜயகாந்தன் (வயது 29) என்ற நபர் கிணறு வெட்டும் வேலைக்காக வவுனியா சாம்பல் தோட்டம் சென்று கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வழமை போன்று இன்றும் (29.04.2017) கிணறு வெட்டும் போது கிணறு வெட்டும் இயந்திரத்தில் ( கொம்பிறசர்) மின்சார கசிவு ஏற்ப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரவு விடுதியில் மோதல் : கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

தலங்கம பகுதியிலுள்ள இரவுநேர விடுதியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய மஹஜன மாவத்தையை சேர்ந்த எல்லகொட கமகே இசுரு சம்பத் எனப்படும் லொக்கு பர்டி என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படும் குறித்த இளைஞர் கடந்த 27ஆம் திகதி இரவு நண்பர்களுடன் தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியமையினால் அதிகாலை 3.10 மணியளவில் விடுதியை விட்டு வெளியே வந்த சந்தர்ப்பத்தில் சிலரினால் கூர்மையான ஆயுதத்தில் அவரது ஒரு கால் வெட்டப்பட்டுள்ளது.

ஒன்றைக் காலுடன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்த போது அவரை துரத்தி சென்று மற்றைய காலை வெட்டி எடுத்துள்ளனர்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில குழுக்களினால் இந்த இளைஞர் இரவு நேர விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பிரிசோதனை இடம்பெறவுள்ளது.