கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஆண்கள் இருவர் கொலை!!

தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துருகிரிய – ஒருவல வீதி, மஹஜன மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விஷேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை மீகஹவத்தை, அகுருமுல்ல, தெல்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி தனது கணவரை கொலை செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரிடையேயும் ஏற்பட்ட வாய்தர்க்கம் தீவிரமானதே இக்கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கணவருக்கு 28 வயது என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலைக்கு இரையான சிறுமி!!

 
கல்னேவ பொலிஸ் பிரிவில் முலன்நட்டுவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை முதலை இரையாக இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்னேவ மத்திய மகா வித்தியாலயத்தில் 7 தரத்தில் பயிலும் கோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எம்.கிமிஹானி அனுஷிகா என்ற சிறுமியை இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார்.

சிறுமி எதிர்வரும் மே 2ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடவிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைப் போல் பெற்றோர் மற்றும் அயலவர்களுடன் நேற்றிரவு 7 மணியளவில் முலன்நட்டுவ குளத்தில் சிறுமி நீராடிச் சென்றுள்ளார்.

குளித்து கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். சிறுமி காணாமல் போன இடத்தில் நீர் குமிழிகள் வெளிப்பட்டதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

முதலை இழுத்துச் சென்ற சிறுமியின் உடலை தேடும் பணியில் கடற்படை சுழியோடிகள், பொலிஸ் உயிர்காப்பு பிரிவு, சிவில் பாதுகாப்பு படையினர், பிரதேச வாசிகள் இணைந்து தேடி வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற அன்னாசி அறுவடை விழா!!

 
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னையப் பயிர்செய்கைக்குள் ஊடு பயிராக அன்னாசிப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் மூலம் 75 அன்னாசிச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு செய்கை மேற்கொள்ள வடமாகாண விவசாய அமைச்சின் மூலம் விவசாய திணைக்களத்தால் மானியங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இன்று அன்னாசி அறுவடை செய்யப்பட்டு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் அறுவடை விழாவில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, செ.மயூரன், ம.ஜெயதிலக, மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய கல்லூரி அதிபர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சின்ன அடம்பனில் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது : பூந்தோட்டம் நலன்புரிநிலைய மக்கள்!!

 
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் மொத்தமாக 150 வீடுகள் அமைக்கபட்டுள்ளன.

இன்று (28.04.2017) அங்கு சென்று குடியேறுவதற்கு இம் மக்களுக்கு திறப்புக்கள் மாவட்ட செயலகத்தினால் கையளிக்கவுள்ளதாக தெரிவித்ததுடன், இப்பகுதியில் சென்று குடியேற முடியாது, தமக்கான அடிப்படை வசதிகள் மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், வைத்தியசாலை இன்றி அப்பகுதியில் சென்று குடியேற முடியாது தாம் கூலி வேலைகளையே நம்பி இருப்பதால் அங்கு சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது? என்று தெரிவித்து இன்று காலை பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்துத 97 குடும்பங்கள் செல்ல மறுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட போது , இம் மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்று குடியேறினால் இவர்களுக்கான மேலதிக வசதிகளையும் எங்களால் வழங்க முடியுமெனத் தெரிவித்தார்.

சமூக விழிப்பணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் பிரதான மேதினம் மாங்குளத்தில்!!

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் வடக்கின் தலைநகர் மாங்குளத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்​,

ஆளும் தேசிய கூட்டரசே பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, அரசியல் கைதிகளை விடுதலை செய், வட மாகாணத்தின் தலைநகரமான மாங்குளத்தில் மாகாணசபையின் அதிகார மையத்தை நிறுவு,
பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் நுண்கடன் கம்பனிகளை உடனே இழுத்து மூடு, மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கு,

போன்ற பிரதான கோசங்களுடன் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பரட்சிகர மேதினமானது வடக்கின் தலைநகர் மங்குளத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக 2.30 மணிக்கு பேரணி தொடங்கப்படுவதுடன் மாங்குளம் மகாவித்தியாலயத்தின் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெறும்.

மே தினத்தை புரட்சிகர எழுச்சி நாளாக கருதி உழைக்கும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் அழைப்பு விடுத்தார்.

நிகழ்வில் சமூக விழப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் செயலாளர் ரி.தேவசாந்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் அயூப்கான், வவுனியா மாவட்ட ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் 64வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64வது நாளாகவும் இன்று (28.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

 
அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா நேரியகுளம் ஜாமிஉல் மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா மஸ்ஜித் திறப்புவிழவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில்..

பள்ளிவாசல் நிர்வாகங்கள் அரசியல்வாதிகளின் அட்டவணைக்கு செயற்படுவதை விடுத்து நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு அரசியல்வாதிகளை செயற்பட வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவுகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் நீதிமன்றம் சென்ற வரலாறுகளையும் எமது சமூகம் உருவாக்கி இருக்கின்றது என்பதில் வேதனையளிக்கிறது.

பள்ளிவாசல்களும் பொது அமைப்புக்களும் இணைந்தே ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவும், அபிவிருத்தியடையச்செய்யவும் முடியும், மாறாக ஒரு சிலரின் சுயநலத்துக்காக நிர்வாகங்ககள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவதானிக்கிறோம் எனவே அவ்வாறான செயற்பாடுகளை இங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகம் செய்யாது என நான் நம்புகின்றேன்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான அல்லாஹ்வின் கோபப்பார்வையே நாளுக்கு நாள் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள காரமாக அமைகின்றது. எனவே இந்த பள்ளிவாசலை இறைவன் விரும்பும் வகையில் பயன்படுத்தி அவனது நெருக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த நிகழ்விற்கு சிங்கள தமிழ் மத்தலைவர்களையும் அழைத்து அவர்களுக்கான உரிய கௌரவத்தை கொடுத்தது போல இனி வரும் காலங்களிலும் எமது அயல் கிராமங்களிலுள்ள சிங்கள தமிழ் மக்களுடன் சக வாழ்வை கட்டியெழுப்பும் வகையிலும் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் குறித்த பள்ளிவாசல் அமைவுக்கு உதவிய அனைத்து தனவந்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

கலாநி பி.பி.அப்துல் ஹமீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயர் அதிகாரிகள் பிரதேச ஜமாத்தார்கள் மற்றும் சகோதர இன மதத்தலைவர்கள், மக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் பல்கலைகழக மாணவர்களால் இரத்ததான நிகழ்வு!!

“உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வாக்கிற்கு இணங்க பலருக்கு உயிர் கொடுக்கும் உதிரத்தை தானம் செய்ய வவுனியா பொது வைத்திய சாலையில் எதிர்வரும் நாளை (29.04.2017) இரத்த தானத்தின் முக்கியத்துவம் கருதி பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து இரத்ததான நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி நிற்பதுடன் இரத்த தானம் செய்ய விரும்புவர்களை அழைத்து நிற்கின்றனர் .

காலம் : 29.04.2017

நேரம் : காலை 8.00 முதல் – மாலை 5.00 வரை

தொடர்புகளுக்கு : 0775281534 , 0767949455

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் 2வது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!

 
வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று (28.04.2017) மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றும் பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், புதிய அதிபராக நித்தியானந்தம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதனால் இவ் அதிபர் நியமனத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பாடசாலைககு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசத்தினைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையிலேயே குறித்த அதிபர் நியமனம் தற்போது இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது பாடசாலை முன்பாக பெற்றோர், பழைய மாணவர்களுடன் இணைந்து பேரராடி வருகின்றனர். தமக்கு பழைய அதிபர் அல்லது வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறும் தற்போது நியமிக்கப்பட்டவர் தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்களை செய்து வருவதால் தமது கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கும் மாணவர்கள் கல்வித் திணைக்களம் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம் : சந்தேகநபர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா குறித்த சந்தேகநபர்களை இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10ஆவது மற்றும் 12ஆவது சந்தேகநபர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்கள் இருவரையும் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலையில் சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த வழக்கு விசாரணைகள் 98 வீதம் முடிவடைந்துள்ளதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட 12 பேரில் 10ஆவது மற்றம் 12ஆவது சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

120 வயது மனித உடலில் வாழும் 21 வயது இளைஞன்!!

 
இந்தியாவில் 21 வயது இளைஞர் விசித்திர நோய் பாதிப்பால் 120 வயது மனிதருக்கு உடைய பலவீனமான உடல் நலத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Rupesh Kumar (21) இவருக்கு எட்டு மில்லியனில் ஒருவருக்கு வரும் Hutchinson-Gilford progeria என்னும் விசித்திர நோய் உள்ளது.

இதன் காரணமாக சாதரண மனிதர்களை விட இவருக்கு எட்டு மடங்கு வயோதிகம் வேகமாக ஏறுகிறது. இதனால், 21 வயதான Rupesh, 120 வயதுடைய மனிதரின் உடலுடன் பலவீனமாக உள்ளார்.

இந்த நோய் வந்து இத்தனை வருடங்கள் உயிருடன் வாழுவது Rupesh மட்டும் தான். இதற்கு முன்னர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 26 வயது வரை வாழ்ந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Leon Botha இறந்து விட்டார்.

இது குறித்து Rupeshன் தந்தை Ramapati Kumar கூறுகையில், இரண்டு வயது இருக்கும் போது ஒரு நாள் தலைவலி என Rupesh கூறினான். அவனுக்கு என்ன நோய் என அப்போது மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னர் அவன் தலை வழக்கத்துக்கு மாறாக பெரிதாக ஆரம்பித்தது. உடல் எடையும் குறைய தொடங்கியது.

பின்னர், முடி கொட்டி, பற்கள் விழுந்து அவன் வயதோதிக நிலையில் தற்போது பலவீனமாக உள்ளான் என சோகத்துடன் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், Rupesh உடல் நிலையை சரி செய்ய உதவி கோரி அவர் பெற்றோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பிழை : பயன்படுத்த வேண்டாம் என தகவல்!!

பிரபல வட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் வட்ஸ் அப்-ல் வரும் செய்திகளை ஐபோனில் உள்ள ’சிரி’ வசதியுடன் வாசிப்பதற்கான மாற்றத்தினை ஏற்படுத்தியது.

தற்போது வட்ஸ் அப் சோதனைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பினை தரவிறக்கம் செய்த பயனாளர்கள் ஊடக செய்திகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் வட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பானது இன்னும் தயாராக இல்லை.

மேலும், சரியாக முடிவுறாத நிலையில் உள்ள இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யவேண்டாம் என வட்ஸ் அப் பீட்டா பதிப்பின் சோதனையாளர் எச்சரித்துள்ளார்.

மற்ற பிழைகளை காட்டிலும் சற்று முக்கியமான பிழை இதுவாகும். எனவே தரவிறக்கம் செய்யும் முன்னர் யோசித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்!!

கனடாவில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena McKay( 19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

செரீனாவும் இவரது நெருங்கிய இரண்டு தோழிகளும் அருகில் உள்ள Sagkeeng Anicinabe என்ற பள்ளியில் ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மூவரும் வெளியே சென்ற பிறகு செரீனா வீடு திரும்பவில்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற பொலிசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், பெற்றோர் மூலம் அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. வீடியோவை பொலிசார் சோதனை செய்தபோது அதில் செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை ஆதாரமாக சேகரித்துக்கொண்ட பொலிசார் தோழிகள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும், செரீனாவை கொலை செய்ததாக கூறி இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செரீனாவின் கொலைக்கு பின்னணி காரணம் என்ன? இதில் வேறு சில நபர்களும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

47 நாளில் 30 கிலோ குறைந்து உயிருக்கு போராடிய இளைஞர்!!

 
நேபாளம் நாட்டில் இமயமலையில் காணாமற்போன ஜோடி 47 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இளைஞரின் தோழி சடலமாகத்தான் மீட்கப்பட்டுள்ளார்.

தைவான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான லியாங் ஷெங் யுயே மற்றும் அவரது 19 வயது தோழி லியு சென் சுன் ஆகிய இருவரும் கடந்த மாத இமயமலையில் மலையேற்ற பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பயணத்தின் போது வீசிய பனிப்புயல் மற்றும் மாறுபட்ட சூழலினால் பனிச்சரிவினுள் சிக்கிக் கொண்ட ஜோடி வழி தெரியாமலும், மற்றவர்களின் உதவி கிடைக்காமலும் பரிதவித்து வந்துள்ளனர்.

இதனால், தாங்கள் கொண்டு வந்திருந்த உப்பை தின்று அருகிலுள்ள நதியிலிருந்து தண்ணிரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளனர்.

ஜோடிகளிடமிருந்து தகவல் வராததை தொடர்ந்து ஆசிய மலையேற்ற அமைப்பினர் ஹெலிகாப்டர் மூலம் தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சிகரத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சியின் அருகில் லியாங் மற்றும் லியு ஆகியோரை கண்டறிந்த மீட்புக் குழுவினர் இருவரையும் மீட்டுள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக லியாங்கின் தோழி லியு சடலமாகத்தான் மீட்கப்பட்டுள்ளார். 30 கிலோ எடை குறைந்த நிலையில், மீட்க்கப்பட்ட லியாங் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் சகோதரியை கொடூரமாக கொன்ற மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் தாய் மற்றும் சகோதரியை படுகொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்

தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள சைதாபேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஹேமலதா. இவருக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை வெகு நேரமாகியும் ஹேமலதா வீடு திறக்காததால் பக்கத்து வீட்டுகாரர்கள் அவர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த பின்னர் ஹேமலதாவின் மகன் தலைமறைவானார். இதனால் பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கேளம்பாக்கம் கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் தான் ஹேமலதாவின் மகன் பாலமுருகன் என்பதும், அவர் தந்தை இறந்தது முதலே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

அடிக்கடி நாமும் தந்தை சென்ற இடத்துக்கே குடும்பத்துடன் சென்றுவிடலாம் என்று அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பாலமுருகன் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பாலமுருகனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் : தண்டவாளத்தில் விழுந்த குழந்தை!!

இந்தியாவில் ஓடும் ரயிலின் கழிவறையில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தனா (26), நிறை மாத கர்ப்பிணியான இவர் தனது கணவருடன் ரயிலில் மும்பையில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது கழிவறைக்குள் சென்ற சந்தனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக பிறந்த குழந்தை கழிவறையின் ஓட்டை வழியாக ஓடும் ரயிலிலிருந்து தண்டவாளத்தில் கீழே விழுந்துள்ளது.

உடனே பதறி போன சந்தனா குழந்தையை காப்பாற்றுங்கள் என கத்தினார். இதை பார்த்த ரயிலிருந்த பயணிகள், உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து ரயில் குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி நின்றது.

பின்னர் ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் தண்டவாளத்தில் சென்று பார்த்த போது சிறு காயங்களுடன் குழந்தை கீழே கிடந்துள்ளது.

பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு சந்தனாவும் அவர் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.