பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளாராம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க உள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
ரஜினி படத்தில் நடிக்குமாறு பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆனால் இன்னும் திகதிகள் எல்லாம் ஒதுக்கவில்லையாம்.
லிங்கா ரஜினியின் லிங்கா படத்தில் வித்யா பாலன் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. கபாலியில் நடிக்க கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் தான் அவர் ரஜினி படத்தில் நடிக்க உள்ளார்.
மனசெல்லாம் மனசெல்லாம் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் வெளியான மனசெல்லாம் படத்தில் வித்யா பாலனை தான் முதலில் ஹீரோயினாக போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.
வித்யாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று அவரை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
கோலிவுட்டில் நடிக்கத் தெரியவில்லை என்று நிராகரிக்கப்பட்ட வித்யா பாலன் பாலிவுட்டில் நடிப்புக்கு பெயர் போனவர். கான்களுக்கு நிகராக பெயர் எடுத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அழுத்தப்பட்ட காற்றினை எரிபொருளாகக் கொண்டு டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள எயார்பொட் (Airpod) வகை கார்கள் வரும் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பெற்றோல், டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் கார்கள் உருவாக்கம் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் நடந்து வருகிறது.
பெற்றோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி கார்களே இதுவரை முன்னிறுத்தப்பட்டு வந்தன.
எயார்பொட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்களின் முதற்கட்ட சோதனைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்தது. இதனால் எயார்பொட் வகை கார்களை வரும் 2020 ஆம் ஆண்டளவில் விற்பனைக்குக் கொண்டுவர டாடா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பாதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையானது இன்று அதிகாலை முதல் வைத்தியசாலையின் முன்பக்க மதிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், “அதில் தகுதியற்ற வைத்தியர்களை உருவாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.. நோயாளர்களின் உயிர் ஆபத்தில்” என எழுதப்பட்டுள்ளது.
இந்த வாசகமானது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 10 ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் குழுவினால் தனியார் மருத்துவக் கல்லூரி சைட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடி கட்டப்பட்டதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து மட்டக்களப்பு மாவட்டம், தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழுகாமத்திலிருந்து தும்பங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வானகமும், தும்பங்கேணிப் பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய அரசரெத்தினம் விஜிதரன் என்பவரே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார்.
முழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையது மின்சாரம் தட்டுப்பாடு ஆகும்.
இவ் இரு பிரச்சினைகளுக்கும் தீர்வாக கழிவுகளைக் கொண்டு மின் உற்பத்தியை உருவாக்கும் ஒரு கருவியை குறித்த மாணவன் கண்டு பிடித்துள்ளார்.
தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் 5ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான்.
இதற்காக குறித்த மாணவனுக்கு அன்றாட சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்திற்கான சான்றிதழை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கி வைத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மே மாதம் இன்டெல் நிறுவனத்தினால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டிக்கு இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் பங்குபற்றி தனது பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ளார் இந்த இளம் விஞ்ஞானி.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு மீண்டும் குற்றம்சுமத்தியுள்ளது. இதுதொடர்பான, ஆதாரத்தை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவுள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் என சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் முன்னாள் முதல்வர் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. இந்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது இந்தச் சட்டம் அரசிதழிலும் வெளிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அலங்கா நல்லூர், அவனியாபுரம் உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
மிருகவதை நடந்துள்ளது அப்போது ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டு மிருகவதை நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது என்ற அவர் மிருகவதை குறித்த ஆதாரங்களை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பல பிரபலங்களின் ஆதரவு பீட்டாவுக்கு உள்ளது என்றும் பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா பூங்கா வீதியில் இன்று(21.02.2017) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மேலும் இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
வவுனியா பூங்கா வீதி புகையிரத கடவை பக்கமிருந்து பூங்கா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர், மன்னார் வீதி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்தநிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நெளுக்குளம் பொதுமயானத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (20.02.2017) இரவு முதல் பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (22.02.2017) இப் பொதுமயானத்தில் நீதவான் முன்னிலையில் நிலத்தினை தோண்டுவதற்கான ஏற்ப்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்ததாக தெரிவித்து கடந்த இரண்டு வாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 24 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று (21.02) குறிந்த 24 பேருக்கு எதிராக இடம்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவானின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த இருவாரங்களில் கணிசமானளவு டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. நகரை அண்டிய பகுதிகளிலே அதிகளவானவர்கள் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். எனவே தங்களது பகுதிகளை சிரமதானம் மூலம் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை அகற்றுமாறும் தொண்டர், சுகாதார பரிசோதகர்கள், மலேரியா தடை இயக்க உத்தியோகத்தர்களின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களைப் பார்வையிட்டு வருவதாகவும் அரச மற்றும் அரசசார்பற்ற திணைக்களங்கள் அரச விடுதிகள் என்பனவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டதாகவும் வவுனியா சுகாதார சேவைகள் பொது சுகதார பரிசோதகர் மேஜெயா மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள 50 வரையான முதியோர்கள் வெளிக்குளம் முதியோர் சங்க உறுப்பினர்கள் மூலம் விசேட ஆன்மீக சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம், வவுனியா லயன்ஸ் கழகத்தின் தலைவர் தமிழ் அழகன் அணுசரனையின் உதவியுடன் வெளிக்குளம் பிரதேச முதியோர்கள் பலரும் தம்பதிகளாக ஆர்வமாக கலந்து கொண்டனர்.
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் பேருந்தின் மூலம் ஏற்பாடு செய்த இந்த சுற்றுலா வெளிக்குளம் முதியோர் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.நடராஜா ஓய்வு பெற்ற கோவில் குளம் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி ந. ஜீவரட்ணம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு மகிழ்வாக நிறைவடைந்தது.
பொற்கோயில் எனப்படும் வவுனியா அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம், தண்ணீரூற்று ஊத்தங்கரைப் பிள்ளையார் கோவில் என்பவற்றிற்கு சென்று ஆத்மீக வழபாடு, பிரார்த்தனை என்பவற்றில் ஈடுபட்டதுடன் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடும் இடம்பெற்றது.
இங்கு நடைபெற்ற வழிபாட்டில் வடமாகாண சமூகசேவைத் திணைக்களப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா.இராஜமனோகரன், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இ.தசரதராஜகுமாரன், ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் குகதாஸன் ஆகியோரும் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தாகள் கி.வசந்தரூபன், அ.தவீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
முதியோரின் மனங்களில் மகிழ்ச்சிப் புன்னகை பூத்ததுடன் இவ்வாறான சுற்றுலாக்களில் தாம் அடிக்கடி ஈடுபடுவது மன ஆறுதலையும் உற்சாகத்தையும் தருவதாகத்தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் இன்று முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
அவருடன் சேர்ந்து காணி மீட்பு போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பீற்றர் இளச்செழியன் மற்றும் லவகுசன், தீபன், யசோதரன் மற்றும் இளைஞர் அணியினர் இணைந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்கள் மீது பகிடிவதைகள், பாலியல் சேட்டைகள், ஆயுதக் கிடங்கு அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு காரணமாக புதுக்குடியிருப்பு மத்தி இராணுவ முகாம் இருப்பதாக கூறி இராணுவ முகாம் முன்னால் பிரதேச செயலகத்தின் வாசலில் கண்டன உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
பிலக்குடியிருப்பு மக்களின் காணி பறிப்புக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் புதுக்குடியிருப்பு இராணுவ முகாமை அகற்ற கோரி விரிவடைந்தது. கேப்பாபுலவு மக்களின் 243 ஏக்கர் காணியை விடுவிப்பதான ஜனாதிபதியின் உத்தரவு இராணுவத்தால் மீறப்பட்டது குறிப்பிடதக்கது.
வவுனியாவிலுள்ள சீட் நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம், விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது. அப்பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு விஷேடதேவையல்லாத சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்பட வைப்பதை இலக்காக கொண்டு செயற்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு விஷேட நிகழ்வாக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு முதல் நிகழ்வாக வீதி ஓட்டம் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட ஓட்டப்போட்டி இன்று (21.02.2017) காலை இடம்பெற்றது.
வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் ஆரம்பமாகி வவுனியா பசார் வீதி வழியாக வைத்தியசாலை வீதி சென்று மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினை சென்றடைந்தது. இதில் 14மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் உள்ளக விளையாட்டு இம்மாதம் 28ம் திகதியும் இறுதி நிகழ்வு மார்ச் மாதம் 11ம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எதிர்வரும் 24ம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (21.02.2017) விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரையும் அழைத்து இடம்பெற்ற கலந்துரையாடலிலே இம் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்பினை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியைடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.
எனினும் கொழும்பில் அரச தரப்பினருடம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித முடிவு எட்டப்படாத நிலையில் வவுனியாவில் தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் ஒருவர் 54 ஆண்டுகளின் பின் சீனாவுக்குத் திரும்புவதற்கு இந்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ எனும் இந்த இராணுவ வீரர், 1963 ஆம் ஆண்டு இந்தோ – சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து, இந்திய இராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்.
அந்தத் தண்டனை முடிந்ததும் தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வாங் க்யூ இருந்தார். ஆனால், தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிரோடி என்னும் கிராமத்தில் இந்திய இராணுவத்தினர் கொண்டு போய்விட்டனர்.
கடவுச்சீட்டு விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் அங்கேயே வாழ ஆரம்பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணியையே திருமணம் செய்துகொண்டார். வாங் க்யூ 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். பின்னர் பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவும் ஆனார்.
தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் உள்ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரை உறங்கவிடாமல் செய்தது. தான் பிறந்த மண்ணையும், தன் இரத்த சொந்தங்களையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்பித்தார்.
1980களில் சீனாவில் உள்ள தன் சொந்தங்களுடன் கடிதப் போக்குவரத்தை ஏற்படுத்திக்கொண்டார். இது, அவரது சொந்தங்களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்டியது. பல மனுக்கள் கொடுத்தும் இந்திய அரசு இந்த சீன வீரரின் கோரிக்கையை ஏற்கவில்லை.
2009இல் வாங் க்யூவின் மைத்துனர் இந்தியாவுக்குச் சென்று அவரைச் சந்தித்துச் சென்றார். 2013 ஆம் ஆண்டில் சீன அரசு, வாங் க்யூவுக்கு கடவுச்சீட்டு வழங்கியது. ஆனால், இந்திய தரப்பில் அவருக்கு விசா வழங்கப்படவில்லை.
தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே என்ற பரிதவிப்புடன் இருந்த வாங் க்யூவை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அடையாளம் கண்டு, அவரின் 54 ஆண்டு கால போராட்டத்தைச் செய்தியாக வெளியிட்டது.
இந்தச் செய்தி, இரண்டு நாடுகளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் வாங் க்யூவுக்கு ஆதரவுக் குரல்கள் கூடின. இதனை உணர்ந்த இந்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி, வாங் க்யூவை, சீனாவுக்கு அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி தன் மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சீனாவுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலையத்தில் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காத்திருந்தனர். அன்றைய தினம் சீனர்களின் முக்கியப் பண்டிகையான விளக்குத் திருவிழா நடைபெற்றது.
விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உறவினர்கள், சகோதரர்கள் கட்டித் தழுவிக்கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய வாங் க்யூ, “இந்த நாள் என் வாழ்வில் சந்தோஷமான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் இராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய் சந்திக்கப் போகிறேன்” என்றார்.
அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.
இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார்.
அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார்.
அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார்.
அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சை, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யோர்க்கராக போட்டு கலங்கடித்தார்.
இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார்.
நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலில் முதலிடம் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
மேலும் அவர், எனது முன்மாதிரி அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சன் ஆவார். ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.