‘உலகில் தமிழ் பழமையான கலாச்சாரம்’ பகிரங்கமாக கூறிய பிரதமர்!!

சிங்களம் மற்றும் தமிழ் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

சமாதானத்தோடு கூடிய நல்லிணக்கம் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். கலாச்சாரங்கள் வளர்ச்சியடைய வேண்டும். அதே போன்று இனவாதம் காணப்படுமாயின் எமக்கு எப்போதும் முன்னேற முடியாது.

சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்களைப்போல் இந்த உலகில் பழமையான கலாச்சாரங்கள் எதுவும் இல்லை என்பதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளத்திலும் முறையற்ற கருத்துகள் கூறப்படுகின்றன. ஓர் இணையத்தளத்தில் ஏன் இந்த நாட்டிற்கு வேற்று மதங்கள் வந்தன என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

மேலும் அப்படி வருவதை விடவும் எமக்கு கற்களும், மரங்களுமே போதும் அந்நிய கலாச்சாரங்கள் எதற்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நல்ல வேளையாக அந்த காலத்தில் இனவாதம் காணப்பட வில்லை, அப்படி இருந்திருந்தால் அப்போதே நாடு அழிந்து போயிருக்கும்.

நல்லிணக்கம் மிக்க சகவாழ்வோடு இலங்கையும் முன்னேற வேண்டுமென்றால் கலாச்சாரங்களின் வளர்ச்சியும் அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சசிகலா முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது : சீமான் பரபரப்புப் பேட்டி!!


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கருத்தும் டெல்லி பாஜகவினரின் கருத்தும் முரணாக உள்ளது.

இன்னும் ஒரு மாதமே ஜல்லிக்கட்டுக்கு உள்ள நிலையில், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் நம்பகத்தன்மை இல்லை. தடை வந்தாலும் தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டை அதை மீறி நடத்துவோம் என கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மருத்துவமனையில் இருந்து கொண்டே பல கோடி மக்களை ஒரு ஓடியோ மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுகவின் அடுத்த பொது செயலர் யார் என்பதை அவர்கள் பொதுகுழு தான் முடிவு செய்ய வேண்டும். அதே போல தற்போது சென்னையின் ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ளது.

அங்கு சசிகலா நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழக முதல்வராக கூட அவருக்கு வாய்ப்புள்ளது. அவர் முதல்வர் ஆவதை அவர் கட்சியினர் விரும்புவதால் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் சீமான் கூறியுள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் ஒரு கிலோ அரிசி 50 ரூபா விலையில்!!

அடுத்த வாரத்திற்குள் 10 ஆயிரம் மெற்றிக் தொன் நாடு மற்றும் சம்பா அரிசிகளை இறக்குமதி செய்து, ஒரு கிலோ அரிசியை 50 ரூபா முதல் 60 ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அரச கஞ்சியங்களில் இரண்டு இலட்சம் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை வைத்து கொண்டு, ஏனைய தொகை படிப்படியாக சந்தைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விவசாய திணைக்களம் வழங்கியுள்ள விபரங்களின்படி கடந்த பெரும் போகத்தில் கிடைத்த அறுவடை நெல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை போதுமானது.

சில நெல் ஆலை உரிமையாளர்களும், வர்த்தகர்களும் அரிசி பற்றாக்குறை நிலவுவதாக காண்பித்து விலையை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்று தொழிலதிபரான இலங்கை பெண்!!

சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையர் ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார்.

36 வயதான நிலுசிக்கா விஜேவர்தன என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வியப்பூட்டும் நபராக மாறியுள்ளார்.

சிங்கப்பூருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக சென்ற நிலுசிக்கா, தீவிர முயற்சியின் காரணமாக இன்று தொழிலதிபராக மாறியுள்ளார்.

இலங்கையில் தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை கொள்வனவு செய்து அவற்றை பெட்டிகளில் அடைத்து சர்வதேச ரீதியில் 500 நுகர்வோர்களுக்கு விற்பனை செய்தே இச்த சாதனையயை எட்டியுள்ளார்.

நிலுசிக்கா, இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்த நிலையில் உறவினர்களுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பணம் சம்பாதிக்குமாறு உறவினர்கள் வற்புறுத்தலுக்கு அமைய குறித்த பெண் பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

குறித்த பெண், வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வோருக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

பணத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை அவர் தெளிவுபடுத்தி வருகிறார்.

மேலும்,அங்கு சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு குறித்த பெண் பல கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண் வசிக்கும் பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி தேவையான அனைத்து உதவிகளையும் குறித்த பெண் மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன் அவர் அண்மையில் சிறந்த ஆலோசனை வழங்கும் பேச்சாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.

குடும்பத்தாருக்கு ஜனாதிபதியின் விஷேட உத்தராவால் முறியடிக்க முடியாத சாதனை!!

இப்போது இணையத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நானே, இதனால் தூக்கத்தை கெடுத்துக் கொண்டவனும் நானே இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் இணையத்தளங்களில் தினமும் அதிகவான அவமதிப்பு மற்று அவதூறுக்கு உள்ளாக்கப்படும் நபராக தான் உள்ளதாகவும், அதன் காரணமாகவே நான் இணைய பாவனையே இப்போது செய்வதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேபோல் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இணைய பாவனை செய்ய வேண்டாம் என நான் உத்தரவிட்டுள்ளேன். விமர்சனங்களுக்கு பின்னால் சென்று எமது நேரத்தை வீணடித்துக்கொள்ளாமல் எமக்குரிய வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன்.

ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக தடுக்கப்பட வேண்டும். அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.

இதேவேளை சிறைச்சாலைக்குள் விஷேட சலுகைகள் வழங்கப்படுகின்றதா? அரசியல் தலைவர்கள் வேறு வகையில் கவனிக்கப்படுகின்றார்களா? என்ற கருத்துகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முக்கியமாக தராதர அடிப்படையில் சிறைச்சாலைகள் செயற்படுகின்றதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்!!

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது.

இதன்போது 09 தலைப்புக்களின் கீழ் பேசப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினால் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் சுமார் 12 இலட்சம் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வதை வரையறுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் வயதெல்லையை 35 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் இந்த சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களத்திற்கு சமர்பிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளினதும் சாரதிகளினதும் பாதுகாப்பு கருதியே இந்த தேசிய கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.

ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் : ஒபாமா எச்சரிக்கை!!

ரஷ்யா மீது இணையத்தள ஊடுருவல் மூலமான போர் தொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ம் திகதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.

இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். எதிர்வரும் ஜனவரி 20-ம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார். ஹிலாரி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அரசு மின்னஞ்சலை பயன்படுத்தாமல் தனிப்பட்ட மின்னஞ்சல் சர்வரை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹிலாரியின் 6.5 லட்சம் மின்னஞ்சல்கள் ஊடகங்களில் வெளியாகின.

ஹிலாரியின் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத் துறை ஊடுருவல் செய்து விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டிருக்கிறது என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அண்மையில் குற்றம் சாட்டியது. இந்த கருத்தை அமெரிக்காவின் எப்.பி.ஐ. பொலிஸாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஹிலாரியை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறுகையில்,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. ஜனநாயக கட்சியின் முக்கிய மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத் துறை திருடியுள்ளது.

இதற்குப் பதிலடியாக ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம். இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் அபாயகரமான நடவடிக்கைகளை குடியரசு கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறை திரைமறைவு செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுவதை புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆரம்பம் முதலே மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய 50ற்கு மேற்பட்டோர் கைது!!

 
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்தகல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட முரளி மரங்களைத்தறித்தறித்து அதன் முரளிப் பழங்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்களை நேற்றும் நேற்று முன்தினமும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் பதவியா, ஹெப்பிட்டிக்கொலாவ, நெடுங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உறக்கத்திலிருந்த கணவனின் சொத்துக்களை திருடிய மனைவி!!

மதுரங்குளி, கடயாமட்டே பிரதேசத்தில் 20 வயதுடைய மனைவி ஒருவர், 45 வயதுடைய கணவனின் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாக முந்தலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குறிய குறித்த பெண் தனது கணவனுடைய 41,70,000 ரூபா பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

கணவன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இவ்வாறு திருடிக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் தங்கச் சங்கிலி அறுப்பில் தொடர்புபட்ட இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது!!

வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் நேற்று(18.12.2016) காலை வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியினை அறுத்துக் கொண்டு பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் ஓடிய இரு இளைஞர்களை குறித்த பெண்கூக்குரலிட்டதையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர்களையும் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வீதி சீரின்மை காரணமாக மோட்டார் சைக்கிலினை கைவிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

மோட்டார் சைக்கிலில் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற இளைஞர் பிறிதொரு குற்றச் செயலுடன் தொடர்புபட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த ஓமந்தைப் பொலிசார் இன்று(19.12.2016) காலை இரு நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட மாற்றாற்றல் உடையோர் தினவிழா!!

 
வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்துடன் சீட், ஓகன், வரோட், உயிரிழை, என்பன இணைந்து நடாத்தும் சிறப்புத்திறனாளிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் மாற்றாற்றல் உடையோர் தினவிழா இன்று (19.12.2016) காலை 8 மணியளவில் வவனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி பேரூந்தகளில் ஆசன ஒதுக்கீட்டு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்று வவுனியா பேரூந்து தரிப்பிடத்திலிருந்து பிரதான கண்டி வீதிவழியாக விசேட தேவையுடையோரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்கள் மீதான சமூக அக்கறையை ஈர்ப்பதற்குமாக விழிப்புணர்வுப் பேரணி வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்து நிகழ்வுகள் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், ஓகன் நிறுவனத் தலைவர் வே.சுப்பிரமணியம், வரோட் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை ஜேண் கிறிஸ்ரி, உயிரிழை நிறுவன தலைவர் வி.ஜெயகாந்தன், பொதுமக்கள், சமயத்தலைவர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாற்றாற்றல் உடையொர்களின் நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிம்புவின் புதிய அவதாரம்!!

சந்தானம் நடிக்கும் ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சிம்பு.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு ‘சக்கப் போடு… போடு ராஜா’ என தலைப்பிட்டிருக்கின்றார்கள்.

விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்ற இரகசியத்தை படக்குழு காத்து வந்தது.

இந்நிலையில், சிம்பு ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார், இதை சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சிம்பு, ” ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்துக்காக முதன்முறையாக இசையமைப்பாளராக பணிபுரிகிறேன், அதற்கான ஒரே காரணம் சந்தானம்தான். ஒரு புதிய பயணம் ஆரம்பமாகிறது. அதற்கு உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் தேவை” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தானம் ட்விட்டரில், ”என்னுடைய காட்ஃபாதர், நல்ல மனிதர் சிம்பு, ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்துக்கு இசையமைக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் மெஸெஞ்சரில் Snapchat போன்ற கெமரா அறிமுகம்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்காக மெஸெஞ்சரில் அப்பில் கெமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமும் 250 கோடி பேர் பயன்படுத்தும் மெஸெஞ்சர் அப்பில் சாட்டிங் செய்யும் போது புகைப்படங்களை பதிவு செய்ய Snapchat போன்ற கெமராவினை அறிமுகம் செய்துள்ளது.

வட்ஸ் அப், டெலிகிராம் போன்ற எந்த சாட்டிங் அப்பிலும் இல்லாத இந்த வசதி பேஸ்புக் மெஸெஞ்சரில் நேற்று முதல் அப்டேட் ஆகி உள்ளது.

ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் எமோஜிக்கள், புகைப்படம், ஸ்டிக்கர் மற்றும் வீடியோக்கள் போன்றவையே வாடிக்கையாளர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் நம் செய்கைகளை எழுத்து வடிவத்தில் அல்லாது கெமரா மூலம் இமேஜாக தெரிவிக்க முடியும்.

மெஸெஞ்சரில் கெமரா வேகமாக இயங்குவதுடன், புகைப்படங்களை எடிட் செய்ய பல்வேறு புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆண்களின் இல்லற வாழ்க்கையை சீரழிக்கும் இணையம்!!

இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருகின்றது. இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு தன்மை செயலின்மை பிரச்சினையின் நிமிர்த்தமாக வைத்தியசாலைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் மற்றும் இதய பிரச்சினைகள் காரணமாக வைத்தியசாலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

இணையவழி மூலம் ஆபாசப் படங்களை பார்க்கக் கூடிய வசதி இப்போது எளிதாகக் கிடைப்பது சில பாலியல் உறவுகளை சேதப்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

இணையத்தின் ஊடாக ஆபாசப் படங்களை பார்வையிடும் இளம் ஆண்களின் மூளைகள் நிஜ பெண்களை மறந்து கணினிகளில் பார்க்கக்கிடைக்கும் படங்களோடு ஒன்றிவிடுவதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தல் நாடகமாடி தந்தையிடம் கப்பம் கோரிய மகன்!!

கல்விப் பொது தரா­தரப் சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாணவன் ஒருவன் தனது இரு நண்­பர்­க­ளுடன் இணைந்து கடத்தல் நாடகம் ஆடி தந்­தை­யிடம் எட்டு கோடி ரூபா கப்பம் கோரிய சம்­ப­வ­மொன்று தங்­கொட்­டுவ பொலிஸ் பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.

தங்­கொட்­டுவ கோண­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டமே இவ்­வாறு அவ­ரது மகன் கப்பம் கோரி­ய­தாக தங்­கொட்­டுவ பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மோரக்­குளி மற்றும் தங்­கெட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­டைய இரு நண்­பர்­களே குறித்த மாண­வ­னுடன் இணைந்து இவ்­வாறு கடத்தல் நாடகம் ஆடி­யுள்­ளனர்.

கடந்த 13 ஆம் திகதி மாலை­வே­ளையில் வேன் ஒன்றில் வந்­த­வர்கள் குறித்த மாண­வனை கடத்தி சென்­ற­தா­கவும் அவரை விடு­விப்­ப­தாயின் எட்டு கோடி ரூபாவை கப்­ப­மாக வழங்­கு­மாறும் கடத்­தப்­பட்ட மாண­வனின் தந்­தைக்கு தொலை­பே­சி­யூ­டாக அழைப்பு விடுத்து மிரட்­டப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த தங்­கொட்­டுவ பொலிஸார் கடத்­தப்­பட்­டாக கூறப்­படும் மாண­வனை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட எண்ணெய் ஆலை­யொன்­றி­லி­ருந்து மீட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து துரி­த­மாக செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட ஏனைய இரு மாணவர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

வவுனியாவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிய இரு இளைஞர்கள்!!

வவுனியா பாலமோட்டை நவ்வி கிராமத்தில் நேற்று (18.12.2016) காலை தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடிய இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றபோது தமது மோட்டார் சைக்கிலை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படுட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

நேற்று காலை பாலமோட்டை நவ்வி கிராமத்தில் தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுண் சங்கிலியுடன் தனது தாலியை இணைத்து போட்டுள்ளார்.

வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் எதிரே பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் சென்ற இரு இளைஞர்கள் அப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அப் பெண்ணின் கூச்சல் காரணமாக அப்பகுதியில் ஒன்றினைந்த பொதுமக்கள் திருடர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கில் செல்ல முடியாத காரணத்தினால் திருடர்கள் செலுத்தி வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிலை வீதியில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மோட்டார் சைக்கிலைக் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிலில் பின்னால் அமர்ந்து சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த இளைஞன் ஏற்கனவே பிறிதொரு குற்றச் செயலுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.