1 இலட்சம் முட்டைகளை கீழே வீசி அழித்த விவசாயிகள்..!

vavuniyaபிரான்ஸ் நாட்டு பிரிட்டனி பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கான பராமரிப்பு செலவுகளும் இவர்களுக்கு அதிகரித்துள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் கோழிப் பண்ணைகளில், முட்டையிடும் கோழிகளை இடவசதி மிகுந்த தரம் உயர்ந்த கூண்டுகளில் வைத்துப் பராமரித்தல் வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் உற்பத்தி விலையே ஒரு கிலோவிற்கு 95 யூரோ சென்ட் வரும் போது, அரசு இவர்களுக்கு அதற்கு 75 சென்ட் அளிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, பிரிட்டனி பகுதியில் முட்டை உற்பத்தியை 5 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் நடைபெற்றது. அலுவலகத்தின் முன் விவசாயிகள் 1 இலட்சம் முட்டைகளை கீழே வீசி அழித்தனர்.

இது, பிரிட்டனியில் நடைபெறும் 5 சதவிகித முட்டை உற்பத்திக்கு ஈடாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தினமும் இதுபோல் செய்யப்போவதாகவும்,அதனால் முட்டைகளின் தேவை அதிகரித்து விலை உயரக்கூடும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை : விராத் கோலி..!!

kohli

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைப் பெறுபேறுகள் தொடர்பாக விராத் கோலி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அண்மையில் சிம்பாவேயில் இடம்பெற்ற தொடரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாகச் செயற்பட்டதோடு ஒருநாள் சர்வதேசப் போட்டி பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார். அத்தொடரில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய விராத் கோலி இதற்காக ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை எனக் குறிப்பிட்ட விராத் கோலி சர்வதேசப் போட்டிகளில் ஜடேஜா சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஒன்று இரண்டு வருடங்களில் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த விராத் கோலி அத்தோடு தேவையான நேரங்களில் துடுப்பாட்டத்திலும் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

உலகின் முதற்தர வீரராக ரவீந்திர ஜடேஜா தரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த விராத் கோலி அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 49 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது..!

arrest1சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

நாகை-வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை அகதிகள் 49 பேர் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் நாகை குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள், தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை : விசித்திர தீர்ப்பு..!

vavuniyaகணவருடன் தூங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று மனைவி ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியது ஆகும். அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இருக்கிறார்.

அவருக்கு இந்தியாவில் பஞ்சாபில் மணப்பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர்.

கடந்த 2009-ம் ஆண்டு, திருமணத்துக்காக, அந்த வாலிபர், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை.

தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் இயல்பான மனிதர் அல்ல என்று அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார்.

திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, பாலியல் உறவுக்கு சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் இரத்து செய்யப்படும்.

எனவே, இவர்களது திருமணத்தை இரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விஷேட நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு முறையிட்டது. அந்த வாலிபரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், தங்கள் திருமணத்தை இரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார்.

அந்த வாலிபர், பாலியல் உறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி கூறினார்.

அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை இரத்து செய்ய மறுத்து விட்டார். தனது துயரமான நிலைமையை மனவலிமை மற்றும் கண்ணியத்துடன் அப்பெண் தாங்கி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

‘கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை’ என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பு அளிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது..!

vavuniyaஹுங்கம – கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் பயணிக்கவிருந்த படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் இருந்து அரசி, எரிவாயு சிலின்டர், பால்மா, மரக்கறி போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை கைது செய்யப்பட்ட சந்தேகநகர்கள் மாலை அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது 2,50,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதையல் தேடிய ஆசிரியர், தொல்பொருள் அதிகாரிகள் உள்ளிட்ட எழுவர் கைது..!

arrest1மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் அகழ முற்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று காலை தாந்தாமலை பிரசேத்துக்குட்பட்ட கொல்லர்மலை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும் ஏனையவர்களில் நால்வர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தாயின் தாயார் புதைத்து வைத்த தங்க நகைகளை மீட்கவே தாங்கள் இப்பகுதிக்கு வந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணையின்போது தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இதில் சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை..!!

missingperson

வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன.

வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பூ.சதீஸ் என்ற சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இச்சிறுவன் தினமும் ஆலயம் ஒன்றிற்கு பூசையினை மேற்கொள்ள சென்று வரும் நிலையிலேயே கடந்த 5ம் திகதி சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை.

இதேவேளை 13 வயதான சு.தில்சான், 9 வயதான நா.டிலக்சன் முதலாக மூன்று சிறுவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இச்சிறுவர்களை இராணுவத்தினரும் காவல்துறையினரும் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தேடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அண்மைய காலங்களில் வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதுடன் இந்த ஆண்டு மார்ச் மாதமும் மூன்று சிறுவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டிருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 20 படங்கள் நடிக்கப்போகும் வடிவேலு..!!

Vadivelu

“கெப்பே விடாம 20 படம் நடிக்கப் போறேண்ணே பார்த்துக்கிட்டே இருங்க” என்று தனது நட்பு வட்டாரத்திடம் படு நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளாராம் வடிவேலு.

வாயால் கெட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் வடிவேலு. திமுகவுக்காக பிரசாரம் செய்யப் போய் வசதியாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அவர் பிரசாரம் செய்த கட்சி படுதோல்வி அடைய அவர் யாரை எதிர்த்து கடுமையாக வசை பாடினாரோ அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகி விட சத்தம் போடாமல் திரையுலகினர் வடிவேலுவை ஒதுக்கி விட்டனர்.

இதனால் கடந்த பல மாதங்களாக ஒரு புதுப் படத்திலும் நடிக்காமல் நல்ல ஓய்வில் இருந்து வந்தார் வடிவேலு. இந்த நிலையில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்படி தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலு, இதில் நிறையவே கஷ்டப்பட்டு தனது பாணி நடிப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாராம். எப்படியும் இந்த தீபாவளிக்குப் படத்தை திரைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் அவர்.

இந்தப் படம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலாகித்துப் பேசி வருகிறாராம். இந்தப் படம் இத்தனை நாள் பட்டினியைப் போக்கும் வகையில் சிறப்பாக, அலப்பறையாக இருக்கும் என்று சொல்லி வருகிறாராம்.

மேலும் தனது நடிப்புக்கு மாற்றாக இதுவரை எதுவும் வரவில்லை என்று கூறும் வடிவேலு தனது நகைச்சுவை பஞ்சம் இனிமேல் அகன்று விடும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்

அத்தோடு நில்லாமல், இனிமேல் “தொடர்ச்சியாக நடிக்கப் போகிறேன். ஒரு படம் அல்ல 2 படம் அல்ல 20 படத்துல நடிக்கப் போறேண்ணே. கேப்பே விடாம தொடர்ச்சியா நடிப்பேன். ராவும் பகலுமா நடிக்கப் போறேன்” என்றும் தெம்பாக கூறி வருகிறாராம்.

தலைவா அரசியல் படமல்ல : நடிகர் விஜய்..!!

Thalaiva1

தலைவா படம் 9ம் திகதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..

தலைவா படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் காதல். சண்டை, காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

இது போல் இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி : ஸ்டீவ் வோ பாராட்டு!!

Steve-Waugh

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் தலைவர் கங்குலியை விமர்சித்து இருந்தார். தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் வோ கூறியதாவது,

கொல்கத்தா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்குலி தான். அவர் ஒரு சிறந்த தலைவர். இந்திய அணியை பலமான அணியாக உருவாக்கியவர் ஆவார். கங்குலியும், டோனியும் வித்தியாசமான தலைவர்கள். ஆனால் இருவருமே சிறந்தவர்கள்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடியது. இளம் வீரர்களை கொண்ட அவுஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைய சில காலம் ஆகும். 0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும். அவுஸ்திரேலிய அணி இனிவரும் 2 டெஸ்டில் வென்று 2–2 என்ற சமநிலையை அடைவது மிகவும் கடினம்.

20 ஓவர் போட்டியின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டி அழிந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியவில்லை. டெஸ்ட் போட்டி உறுதியாகவே இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை அதிகமான ரசிகர்கள் ரசித்தனர்.

20 ஓவர் போட்டி இளம் வீரர்களுக்கானது. வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் டெஸ்ட் போட்டியின் புகழ் மங்கி விடவில்லை.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெண்டுல்கர் 200வது டெஸ்டில் விளையாட உள்ளார். அதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதை யாராலும் முறியடிப்பது கடினமே என ஸ்டீவ் வோ மேலும் தெரிவித்தார்.

அடிக்கடி தீப்பிடித்து எரியும் குழந்தை ..பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை!!

fire_baby

தமிழ்நாடு திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர்.

குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டி.பரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன்(வயது 26). இவர் கடந்த 2010ம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்த போது அங்கு வேலை பார்த்த மயிலம் அருகே நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கர்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் 2 பேரும் டி.பரங்கிணியில் வசித்து வந்தனர். ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்த உடன் அவர்களது திருமணத்தை ராஜேஸ்வரியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

அழகான ஆண்குழந்தை இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்ற ராஜேஸ்வரி பிரசவத்துக்காக நெடிமோழியனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் வைத்தனர்.

தீயில் எரிந்த குழந்தை குழந்தை பிறந்த 8வது நாளில் நடுவீட்டில் குழந்தை ராகுல் தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் உடலை ராஜேஸ்வரி துணி போட்டு மூடியிருந்தார். சிறிதுநேரத்தில் அந்த துணி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அந்த துணியை அகற்றிவிட்டு கைக்குழந்தையுடன் வெளியே ஓடிவந்தார்.

சிறிது நேரத்தில் அந்த குழந்தை படுத்திருந்த குடிசை வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி தீ விபத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நெடிமோழியனூர் கிராமத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதற்கான காரணம் தெரியாமல் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையொட்டிதொடர்ந்து 2 மாதங்கள் தீயணைப்பு படையினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அத்தகைய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நெடிமோழியனூரில் ராஜேஸ்வரியின் கைக்குழந்தையின் உடல் திடீரென தீப்பற்றி எரிந்து காயமேற்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு குணமடைந்தவுடன் ராஜேஸ்வரி தனது குழந்தையை கணவர் ஊரான டி.பரங்கிணி கிராமத்திற்கு கொண்டு சென்றார்.

அன்று மாலை 4 மணிக்கு அந்த குழந்தை அணிந்திருந்த சட்டை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனை தொடர்ந்து அந்த குழந்தையின் தலையும் தீப்பிடித்து எரிந்தது. இது பில்லி சூனியத்தின் வேலையாக இருக்குமோ என கருதி ராஜேஸ்வரி தனது கைக்குழந்தையை புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்கள், மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கொண்டு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர் அபிஷேகபாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த சில மணி நேரத்தில் மீண்டும் அந்த குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியே எடுத்து வந்தவுடன், வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் டி.பரங்கிணியில் உள்ள மாமியார் துளசி வீட்டிற்கு ராஜேஸ்வரி கைக்குழந்தையுடன் சென்றார். அங்கேயும் குழந்தையின் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் பக்கத்து வீடுகளிலும் தீப்பற்றியது.

எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த குழந்தையை இங்கேயே வைத்திருந்தால் நெடிமோழியனூரில் வீடுகள் தீப்பிடித்து எரிந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதை போல, டி.பரங்கிணியிலும் வீடுகள் தீப்பிடித்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனவே குழந்தையை வேறு எங்காவது கொண்டு சென்றுவிடுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கைக்குழந்தையான ராகுலும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். மருத்துவ பரிசோதனை குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். குழந்தையின் உடல் எரிவதற்கு என்ன காரணம் என கண்டறியாமல், குழந்தையையும், அதன் தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2மாத கைக்குழந்தையின் உடலில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியவதற்கான காரணம் என்ன அந்த கைக்குழந்தையை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

உயிருக்கு ஆபத்து என்ற போதும் மீசையை வெட்டாது அடம்பிடிக்கும் அதிசய நபர்!!

afridi

பாகிஸ்தானில் வாழும் ஒரு நபர் உயிருக்கு ஆபத்து வந்த வேளையிலும் தனது மீசையை வெட்டாமல் அதனை தொடர்ந்து வளர்த்து வருகிறார்.
பெஷாவரில் வசித்து வருபவர் முகமது கான் அப்ரிடி 48 வயதான இவர் உணவை விட முக்கியமானதாக கருதுவது அவரது மீசையை.

தினமும் அவரது மீசையை பராமரிக்க சுமார் அரை மணி நேரம் செலவழிக்கும் அப்ரிடி தனது உயிருக்கு ஆபத்து வந்த வேளையில் கூட இந்த மீசையை வெட்ட மறுத்துவிட்டார்.

சுமார் 30 இன்ச் நீளம் (76 செ.மீ) இருக்கும் அப்ரிடியின் மீசையினால் அவரின் உயிருக்கு 2009 ஆம் ஆண்டு ஆபத்து வந்தது. அப்ரிடியின் மீசையை வெட்ட சொன்ன ஒரு தீவிரவாத இயக்கத்தினர், அவர் மறுத்ததை அடுத்து அப்ரிடியை கடத்தி சென்று ஒரு மாதக்காலம் ஒரு குகையில் அடைத்து வைத்துள்ளனர்.

பிறகு மீசையை வெட்டிவிடுவதாக அப்ரிடி வாக்களித்ததை அடுத்து அவர்கள் அவரை விடுவித்தனர், அவர்களிடமிருந்து தப்பித்த அப்ரிடி தொடர்ந்து மீசையை வளர்த்து வருகிறார். தனது மீசையை குறித்து பேசிய அப்ரிடி, எனது மீசையை நான் என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். இந்த மீசையால் என்னை நிறைய பேர் மதிக்கிறார்கள்.

இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் உணவு சாப்பிடாமல் கூட இருக்க முடியும் ஆனால் எனது மீசை இல்லாமல் இருக்க முடியாது எனக் கூறினார். அப்ரிடி அவரது மீசையை பராமரிப்பதற்கு மாதம் தோறும் அவருக்கு 150 டொலர் செலவாகிறதாம்.

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்..!

arrest1முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

அயல் வீட்டில் வசித்து வரும் சந்தேக நபர், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி வயிறு பெருத்திருப்பதை அவதானித்த தாய், சிறுமியிடம் காரணத்தை கேட்ட போது, அயல் வீட்டை சேர்ந்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் தாய் முறைப்பாடு செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 08 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் வீடொன்றில் கொள்ளையிட்ட இருவருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை..!

vavuniyaமுல்லைத்தீவு தேராங்கண்டல் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 16 ஆம் திகதி குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை என்ற கணக்கில் ஆறு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களை முறைப்பாட்டாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சண்டையை நிறுத்த வேண்டும்..!

vavuniyaபுனித ரமலான் மாத நிறைவையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விடுமுறை கால சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அதன்பின்னர் அதிபர் ஹமீது கர்சாய் பேசியதாவது:-

தலிபான் இயக்கத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு அமைதியான வழியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அப்பாவி பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில், தியாகம் செய்த ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தின்போது சாலையோர குண்டுவெடிப்புகளில் ஏராளமான ஆப்கான் மக்கள் தங்கய் உயிரை இழந்துள்ளனர். இந்த வன்முறை முடிவுக்கு வரவேண்டும். தலிபான்கள், கத்தாரில் அலுவலகம் திறந்ததற்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் ஒரு அலுவலகம் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற நிலையில், தலிபான்கள் மீண்டும் தங்கள் பிராந்தியத்தை பிடிக்க சண்டையை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி மறுப்பு – ஏமாற்றத்துடன் விஜய், சந்திரசேகர்..!

vavuniyaவிஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் திகதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புதன்கிழமை மாலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக அரசிடம் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். விஜய்யும், சந்திரசேகரும் பேசி நல்ல முடிவை தரும் பட்சத்தில், அரசு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுத் தரும் பட்சத்தில் படத்தை வெளியிட எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை’’என்று அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளிக்கவும் அவரது ஆதரவைக் கேட்கவும் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகருடன் சென்றதாகத் தெரிகிறது.

கொடநாட்டில் தங்கியுள்ள ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது.