யாழில் நண்பர்களுடன் கொழும்பு சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்..!

கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் அச்சுவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக அச்சுவெலிப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன் ரிசாந்தன் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளதாக தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தனது மகன் கடந்த 19ஆம் திகதி நண்பர்களுடன் கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச் சிறுவனைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் யாழ்.தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட வாக்காளர் பதிவு இன்று முதல்..!

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெயர்ந்த எந்தவொரு பிரஜைக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இடம்பெயர்வின் முன்னர் பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே வாக்களிக்க முடியும் என கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்கள் தற்போது வசிக்கும் கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட பத்திரத்துடன் இடம்பெயர்வுக்கு முன்னர் வசித்து வந்த பிரதேசங்களில் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை வாக்காளர்கள் இரு பரதேசங்களில் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட வாக்காளர் பதிவுக்காக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இக்காலத்தில் வாக்காளர்கள் தமது பதிவுகளை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பதுரலிய – கலவான வீதியில் விபத்து: ஒருவர் பலி, 13 பேர் காயம்..!

பதுரலிய – கலவான வீதியில் மொரபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (23) இரவு 9 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுரலியவிலிருந்து அத்வெல்கொட நோக்கி பயணித்த பஸ் வண்டி மொரபிட்டிய சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி தானசாலை ஒன்றுடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 9 பேர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் நால்வர் நாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி பதுரலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியா செல்ல விசா பிணை?

குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானாவும் உள்ளடங்குகின்றன. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் தெரேசா மே பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதியைப் பெற காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார்.

கடந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கை, பங்களாதேஷில் இருந்து தலா 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.

ஹட்டன் நகரில் மண்சரிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை சீர்செய்வதற்கு ஹட்டன் – டிக்கோயா நகரசபை இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் பத்தனை – திம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தை மேற்பிரிவு தோட்டத்தில் 6ஆம் இலக்க தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்புக் காரணமாக இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 14 குடும்பங்கள் பாதுகாப்பான இடமொன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

மலையகத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழக்கைப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.

பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டுவதோடு தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதிலும் ஆர்வமின்றியுள்ளனர்.

மேலும் தொடர் மழையினால் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழையினால் விவசாய நிலங்கள், பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகளும் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் காய்கறிகளின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.

Nuwaraeliya-Scholl

சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

india

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது.

பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் கடைசி அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகளிகள் பலப்பரீட்சை நடத்தின.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய இப்போட்டி 20-20 போட்டியாக நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பினைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இநதியாவின் ஆரம்ப வீரர்களாக தவான் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி 19 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து தவானுடன் இணைந்து கொண்டார் கோலி. இவர்கள் இருவரும் இணைந்து விரைவாக ஓட்டங்களைக் குவித்து 50 ஓட்டங்களை இந்தியா பெற்றபோது தவான் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்கள், ரெய்னா 1 ஓட்டம் மற்றும் தோணி 0 என அடுத்தடுத்த விரைவாக ஆட்டமிழக்க இந்தியா தடுமாறியது. பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த கோலியும் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி நேரத்தில் 7ஆவதாக களமிறங்கிய ஜடேஜா 25 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை ஒரு வலுவான இலக்கினை நோக்கி கொண்டு சென்றார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் போபரா 3 விக்கெட்டுக்களையும் அண்டர்சென், ட்ரெட்வெல் மற்றும் ப்ரோட் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

தொடர்ந்து 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. 2 ஓட்டங்களுடன் அணித் தலைவர் குக் வெளியேறினார். பின்னர் ட்ரொட் 20 ஒட்டங்களுடனும், ரூட் 7 ஒட்டங்களுடனும், பெல் 13 ஒட்டங்களுடனும் சிறிய இடைவெளியில் வெளியேற இங்கிலாந்து ஆட்டம் கண்டது.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் போபரா இங்கிலாந்து நம்பிக்கை ஊட்டினர். ஒரு கட்டத்தில் 2.3 ஓவர்களுக்கு 20 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை இங்கிலாந்து அடைந்த நிலையில் இசாந்த் சர்மா அடுத்தடுத்த பந்தில் மோர்கன் மற்றும் போபரா ஆகியோரை வெளியேற்ற போட்டி இந்தியா வசமாக மாற ஆரம்பித்தது.

இதனையடுத்து ஜடேஜாவின் 19ஆவது ஓவர் போட்டியை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றது. இதில் பட்லர் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இநதியா 5 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் சம்பியனாகியது. இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் ஏமாற்றமடைந்தது. பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் 6ஆவதும் இறுதியுமான அத்தியாயத்தில் இந்தியா சம்பியனான போது ஐ.சி.சியின் அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய தலைவராக தோணி மாறினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவானார். இந்த தொடரின் நாயகனாக அதீர திறமையை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

புதிய சாதனை படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி..!

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் அணி, நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான தஹிதியை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே மிரட்டிய ஸ்பெயின் அணி 10–0 என்ற கோல் கணக்கில் தஹிதி அணியை எளிதில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அணியில் பெர்னாண்டோ டோரெஸ் 4 கோலும், டேவிட் வில்லா 3 கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்தது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்திய (FIFA) சர்வதேச போட்டியில் 10 கோல் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு அங்கேரி அணி தென் கொரியாவுக்கு எதிராக 9–0 என்ற கோல் கணக்கிலும் (1954 உலக கோப்பை போட்டி), எல் சால்வடோர் அணிக்கு எதிராக 10–1 என்ற கோல் கணக்கிலும் (1982 உலக கோப்பை போட்டி), யூகோசுலாவியா, சாய்ரே அணிக்கு எதிராக 9–0 என்ற கோல் கணக்கிலும் (1974 உலக கோப்பை போட்டி) வென்றதே சாதனையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனை உலக படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி…

வன்னி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு..!

வன்னி பிரதேசத்தில் தொண்டராசிரியர்களாக கடந்த பல வருடங்களாக பணியாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78 பேருக்கும், மடு வலயத்தில் 43 பேருக்கும், வவுனியா வடக்கு வலயத்தில் 24 பேருக்குமாக 231 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கல்வி வலயங்ளை சேர்ந்த 283 தொண்டராசிரியர்களுக்கும்; கிளிநொச்சியில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மு.சந்திரகுமார், வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியியன் இணைப்பாளர்களான ச.கனகரத்தினம், பிரேமரத்தின சுமதிபால, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண ஆளுனரின் இணைப்பாளர் முகைதீன், வட மாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

vavuniya Vavuniya1

பறக்கும் மோட்டார் சைக்கிள் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய முயற்சி..!

Flying Motoer bike

 

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளது.

அதில் 2 முன்புறமும் 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன.95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது.

இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது. அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது.

எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு..!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்க ளின் கருப்பு பணம் ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.9000 கோடியாக குறைந்தது. கருப்பு பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் நாட்டு வங்கிகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், பல்வேறு நாட்டினரும் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர். பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக செயல்படும் சுவிஸ் நேஷனல் பாங்க் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இதன்படி, கடந்த 2006ம் ஆண்டில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் ரூ.41,000 கோடியாக (6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்) இருந்தது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சுவிஸ் அரசுக்கு கருப்பு பண முதலை கள் பற்றி தகவல் தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட் டது. இதையடுத்து, கருப்பு பணம் பதுக்கல் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் கருப்பு பணம் வெறும் ரூ.14,000 கோடியாக குறைந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஜுரிச்சில் சுவிஸ் நேஷனல் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.9000 கோடியாக(1.42 பில்லியன் சுவிஸ் பிராங்க்) குறைந்துள்ளது.

இதில் 1.34 பில்லியன் பிராங் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் நேரடியாக செய்துள்ள முதலீடு. மீதி 77 மில்லியன் பிராங், மறைமுகமாக வேறு நிறுவன பெயரில் செய்யப்பட்ட முதலீடு. அதே போல், உலகம் முழுவதிலும் இருந்து செய்யப்பட்டுள்ள முதலீடும் 1.4 டிரில்லியன் பிராங்க் ஆக குறைந்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ரி.எம் சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு!

tms

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் நினைவு நிகழ்வு சுத்தானந்தஇந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி அகளங்கன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினராக கலந்த நெடுங்கேணி பிரதேச செயலாளர் பரந்தாமன் உரையாற்றியதோடு இனிமையாக பாடலையும் பாடியிருந்தார்.

கலாபூசணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி மற்றும் கந்தப்பு ஜெயந்தன், என பலர் பாடல்களை பாடியிருந்தனர்.

 

இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – கருணாதிலக்க அமுனுகம..!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு எதிராக மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இதனை தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சுலோகங்கள் காட்டப்பட்ட அதேநேரம் ஆட்டம் முடிந்த பின்னர் இலங்கை அணியினர் பயணம் செய்த பஸ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமான நிலையிலேயே இந்த அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

கனடாவின் CALGARY பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்..!

Calgary, Alta என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.

சுமார் 75,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Calgary, நகரில் ஓடும் இரண்டு ஆறுகளும் கடந்த 2005ல் ஏற்பட்ட வெள்ள அளவைவிட ஐந்து மடங்கு அதிகமான தண்ணீர் ஓடியதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு, சுகாதாரமான குடிநீர் முதலியவை உள்ளூர் நிர்வாகம் மூலம் தொடர்ந்து அளிக்கபப்ட்டு வருகிறது.

மின்சார நிலைமை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து வருகிறது.

தற்போது வெள்ள நிலைமை சிறிது சீரானதால், ஒரு சில பகுதி மக்களை அவர்களுடைய வீடுகளுக்கு செல்ல அரசு அனுமதித்துள்ளது.

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் Mayor Naheed Nenshi,ஆகியோர் வெள்ள நிலைமையை ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

canada1

canada2

canada3

மட்டக்களப்பில் 35 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடை லேக் வீதியில் இயற்கை அழகுடைய வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான “ஈஸ்ட் லகூன்” என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று 35 கோடி ரூபா செலவில் கட்டப்பட்டு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியின் பயனாக ஈஸ்ட் லகூன் என்ற இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அகமட், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியினை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு செல்வராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

bati1

bati2

bati3

பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் சமந்தாவுக்கு பயமாம்..!

கொலிவுட்டில் பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் நடித்தவர் சமந்தா.
சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா, பவன் கல்யான் படப்பிடிப்பில் பங்கேற்க நள்ளிரவில் விமானத்தில் சுவிட்சர்லாந்து செல்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஐதராபாத்தில் ‘ராமய்யா வஸ்தாவய்யா’ படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆருடன் பங்கேற்கிறேன்.

அதிக வேலை பளு காரணமாக அடிக்கடி பயணம் செய்வது எனக்கு பயத்தை தருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதால் தான் இவ்வளவு பிரச்னைகள். அடுத்து விஜய்யுடன் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவுள்ளேன்.

இதன் பின்பு சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பேன். இதன்மூலம் அதிக பணிச்சுமை, அலைச்சல் குறைவதோடு, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

புத்தளத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்கள் மற்றும் யாழ்ப்பாணம் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற் தொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.