வவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : மாத்தறை நோக்கி பயணத்தினை தொடர்ந்தது ரஜட்ட ரஜனி!!

சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள்

இரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றையதினம் (08.10.2019) வவுனியா புகையிரத நிலையத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதனையடுத்து 25ம் திகதி தொடக்கம் வவுனியாவில் தரித்து நின்ற ரஜட்ட ரஜனி புகையிரதம் அதிகாலை 3.35 மணியளவில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.

அதிகாலையிலேயே ரயில்வே உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததுடன் பணிப்புறக்கணிப்பு காலப்பகுதியில் ஆசன முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் அவர்களது முற்பதிவுகளுக்கான பதிவுகளை இரத்து செய்ய சமூகமளித்திருத்தமையினையும் காணக்கூடியதாகவிருந்தது.

எனினும் இதுவரை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து எவ்வித புகையிரதங்களும் வவுனியாவிற்கு வருகை தரவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே ரயில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம் பாடசாலை மாணவர்களின் சாதனை!!

செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம்

கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலை மாணவர்கள் நால்வர் மாவட்ட வெட்டுப்புள்ளியான 152 க்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

வாரித் அப்ரித் 179, முஹாஜிரீன் ஆயிஷா நதா 169, ஸஹ்ரான் சஹான் 167, உபைதுல்லா நுஹாத் 155 புள்ளிகளை பெற்று சித்திபெற்றுள்ளனர்.

மாணவர்களின் இவ்வெற்றியின் மூலம் செட்டிகுளம் கோட்டமட்ட பாடசாலைகளிடையேயும், வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளிடையேயும் எமது பாடசாலை முதல் நிலை பாடசாலையாக மிளிர்வற்கு அயராது உழைத்த அதிபர், ஆசிரியை திருமதி நஜ்முன்னிசாஜமீன் மற்றும் ஆசிரியர் திரு.நாகூர்கனி றயிஸ் ஆகியோருக்கும், பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குள கோட்டமட்ட ரீதியில் தமது பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அபிவிருத்தி சங்க செய்தியாளர் உவைஸ் முகம்மட்.பாரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!!

சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

‘புதிய இலங்கைக்கு சஜித்’ எனும் பெயரில் குறிப்பிட்டு பரவலாக வவுனியா நகர், மன்னார் வீதி, குருமன்காட்டு சந்தி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

இச்சுவரொட்டிகளை இன்று (07.10.2019) மாலை வவுனியா பொலிஸார் நடமாடும் பொலிஸாரின் வாகனத்தில் சென்று கிழித்தெறிந்தனர். இவ்விடயம் தொடர்பாக சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாரிடம் வினவிய போது ,

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!

வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும். இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் சிவகுமார் ஜிபிகா -179 புள்ளிகளையும் சிறிஸ்கந்தராசா சாம்பவி -168 புள்ளிகளையும் தர்மகுலசிங்கம் டிலக்சிகா 165 புள்ளிகளையும் விமலதாஸ் திவ்யா – 159 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் ஏனைய மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பேறுபெற்றினை பெற்றுள்ளனர்.

இச் சாதனையினை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவிருந்த பாடசாலை அதிபர் சி.சிவராசா மற்றும் ஆசிரியர்களான கிரிசாந்தினி சந்திரன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் தரம் 5 மாணவர்களின் சித்தி வீதம் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 30 வீதமாக காணப்பட்ட சித்தி வீகிதமானது 38 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருட அனுபவத்தினை கொண்டு நாங்கள் சில திட்டமிட்ட ரீதியான செயற்பாடுகளை எங்களுடைய ஆசிரியர் குழாம் அற்பணிப்புடன் ஆற்றியதன் விளைவாக இந்த வெற்றிக்கனியானது எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த வகையில் எமது மாணவ செல்வங்களை பாராட்டுகின்றேன். அவர்கள் ஆசிரியர்களோடு ஒத்துழைத்து அவர்களினால் கற்பிக்கப்படும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் கற்கு இந்த வெற்றிக்கனியினை பறித்துள்ளனர்.

அதற்காக அந்த மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டி நிற்கின்றேன். அந்த வகையில் 2019ம் ஆண்டு எங்களுடைய பாடசாலையில் 195 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70க்கும் வெட்டுப்புள்ளிக்கும் இடையில் 110 மாணவர்களும் , 70க்கு கீழ் 10 மாணவர்களும் பெறுபெற்றினை பெற்றுள்ளனர்.

எங்களுடைய பாடசாலை மாணவர்கள் மிக திறமையானவர்கள். பல்வேறு வகையான திறமைகளை கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களான பா.லெக்ஸ் , கி.உதயராஜன், வி.தவராஜன், ம.திலீபன், கோ.ஸ்ரீதரன் மற்றும் பகுதி தலைவர் ஜெ.அருள்செல்வம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் த ற்கொ லை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் க ழுத்தை அ றுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளார். இன்று (07.10.2019) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட த கராறு காரணமாக மனைவி தீ யில் எ ரிந்த நிலையிலும், கணவன் த லையில் ப லமாக தா க்கப்பட்ட நிலையிலும் பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த இருவருக்கும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன்,

கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட இந்நிலையில் சிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உ டைத்து அதன் ஊடாக நிலத்தில் கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய க த்தியால் க ழுத்தையும் அ றுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று கு திக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர்.

க ழுத்தில் கா யமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் சுமார் அரை மணிநேரம் ப ரபரப்பான நிலை காணப்பட்டதுடன் இந் நிலையில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணும், 27 வயது ஆணுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருவறையில் இருக்கும்போதே செல்வீச்சில் தந்தையை இழந்து, புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த முல்லை மாணவன்!!

இ ராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று மாணவன் கோபிநாத் கோபிதன் சாதனை படைத்துள்ளார்.

இராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போ ரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.

2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யு த்தத்தின்போது இராணுவத்தினரின் செல் வீச்சு தா க்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சிறப்பாக கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் கோபிநாத் கோபிதன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மேற்கு பகுதியில் வசித்து வருகின்ற கோபிநாத் கோபிதன் கடந்த 2009ஆம் ஆண்டு தாயின் கருவறையில் இருந்த வேளையிலேயே மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார்.

இந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்து விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி நேற்று வெளியாகியாகிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் இரண்டாம் நிலையில் சித்தியடைந்த மாணவனாக சாதித்திருக்கிறார்

தனது கணவனை 2009ல் பறிகொடுத்த கோபிநாத் கோபிதன் அவர்களுடைய தாயாரான கோபிநாத் சாரதா அவர்கள் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவனை பறிகொடுத்த நிலையில் குறித்த மகனை பிரசவித்து சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் கூலித்தொழில் செய்து தனது மகனை கற்பித்த நிலையில் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையினை இட்டு மனமகிழ்வு அடைவதோடு அவனது எதிர்கால இலட்சியம் நிறைவேற தனது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

அதேபோன்று குறித்த மாணவன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போ ரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.

முச்சக்கரவண்டி – பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று மாணவிகள் படுகாயம்!!

விபத்து

லிந்துலை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உள்ளிட்ட சாரதி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை, நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதில் சாரதி மட்டும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்து சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 3ம் இடத்தினை பெற்ற மாணவி சுவேதா சிவஐங்கரன் : வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்!!

சுவேதா சிவஐங்கரன்

வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி சுவேதா சிவஐங்கரன் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது பெற்றமை தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளேன்.

நான் இந்த வெற்றியினை பெற்றமைக்கு உறுதுணையானவிருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எனது எதிர்கால இலட்சியம் வைத்தியராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே எனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 169 மாணவர்களில் 81 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 101 – 151 க்கு இடைப்பட்ட புள்ளிகளை 76 மாணவர்களும் , 71 -100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 10 மாணவர்களும் 00 -70 க்கு இடைப்பட்ட புள்ளிகளை 02 மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தெரிவித்தார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் இரண்டாம் நிலை!!

வவுனியா விபுலானந்தா கல்லூரி

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில் விஜயசங்கர் நிருத்தனன், கஜேந்திரன் ஜஸ்விந் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும், கடந்தகாலங்களை விட இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. இதனை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.

வ/பாவற்குளம் படிவம்-3 இலக்கம்-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில்04 மாணவர்கள் சித்தி!

கடந்த ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று 06.10.2019   வெளியாகியுள்ள நிலையில்  வ/பாவற்குளம் படிவம்-3 இலக்கம்-9 கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் (அரசடிக்குளம்) வெட்டு புள்ளிகளுக்கு மேல் 04 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ந.மதுசன் -164

சி.அஸ்வினி-163

சி.லிசானி-161

ச.கிசானா-159

செட்டிகுள கோட்டத்தில்  கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது .

வவுனியாவில் தனியார் கல்வி நிலையம் செல்லாமல் முதலிடம் பெற்று சாதித்த மாணவி!!

விவேகானந்தராசா தரணியா

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் வவுனியா, கிடாச்சூரியில் வசிக்கிறேன். நான் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி கூறுக்கின்றேன்.

நான் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாது, பாடசாலை கல்வியை மட்டும் நம்பியே படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் மாவட்டத்தில் சிறந்த வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆயிலடி அ.த.க.பாடசாலை வரலாற்று சாதனை!!

கடந்த ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று 06.10.2019   வெளியாகியுள்ள நிலையில் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட   நெடுங்கேணி ஆயிலடி அ.த.க.பாடசாலை மாணவி.எழுபரிதி திலகேஸ்வரன் 178  புள்ளிகளைப் பெற்று பாடசாலையில்  வரலாற்று சாதனையொன்றை பதிவு செய்துள்ளார்.

1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட ஆயிலடி அ.த.க.பாடசாலையில் இம்முறைதான் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் முதன் முறையாக  மாணவியொருவர் சித்தியடைந்து  பாடசாலையின் வரலாற்றிலே புதிய சாதனையொன்று நிகழ்த்தப்பட்டிருப்பதாக பாடசாலையின் அதிபர்  ச.சௌந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.மேற்படி பாலசாலையில் ஒரேயொரு மாணவி பரீட்சைக்கு  தோற்றி சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை !!

கடந்த ஆகஸ்ட் 04ஆம்   திகதி  நடைபெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள்  நேற்று 06.10.2019  வெளியாகியுள்ள  நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த  மாணவன்  செல்வன் .கஜேந்திரன்  யஸ்வித்  191 புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் இரண்டாம்  நிலையைப் பெற்றுள்ளதுடன்  பாடசாலை மட்டத்தில்  முதலிடத்தையும்  பெற்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்  .

புலமை பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த  அனைத்து மாணவர்களுக்கும்  வவுனியா நெற்  தனது   வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றது.

 

 

 

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில்

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பாலத்தில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அவல நிலை தோன்றியுள்ள நிலையில், தற்பொழுது போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது குறித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தவறியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாலத்தினூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாலம் கடந்த சில தினங்களாக உடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஒரு பக்கம் ஊடாகவே வாகனங்கள் தமது பயணத்தினை மேற்கொள்ளவேண்டியுள்ளது. பாலத்தில் போடப்பட்டுள்ள தகரம் உடைந்த நிலையில் காணப்படுவதுடன், பாரஊர்த்திகள் பல பயணம் மேற்கொள்ளும் இப்பாலத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இல்லை.

எனவே சாரதிகள் இப்பாலத்தில் அபயாகரமான போக்குவரத்தினையே மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வினவுவதற்காக வவுனியா மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது அழைப்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க நகைகள் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் இந்துக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் கிழமைகளில் புத்தாடைகள் மற்றும் தங்க நகைகளின் கொள்வனவுகள் அதிகளவில் இடம்பெறும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலை மட்டுப்படுத்தப்பட்டளவில் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1500 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி உலக சந்தையில் தங்கத்தின் விலையில் கடுமையாக அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த 6 வருடங்களில் இதுவே தங்கத்தின் உச்சகட்ட விலை அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் தங்க விற்பனை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.