மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் : ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

mathu

இந்திய அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும் மாணவர் விஜயகுமாரும் சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜோன் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.

புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு..!

thayaஇலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) பதவியேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது.

புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவரான தயா ரத்னாயக்க, ரக்பி மற்றும் தடகள விளையாட்டுகளில் திறமை காட்டியவராவார்.

இதேவேளை, நேற்றையதினம் பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்புப் படைகளின் தளபதியாகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

Srilanka

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 5வதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 43.5 ஓவர்களில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அத்துடன் சஜித்திர சேனாநாயக்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷானும் தொடரின் நாயகனாக சங்ககராவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இப்படியும் பயமுறுத்த முடியுமா? (வீடியோ)

மற்றவர்களை பயமுறுத்தி இன்பம் காண்பதில் சிலருக்கு அலாதிப்பிரியம். அதற்காக தமது மூளையைப் பிழிந்து பல்வேறு வழிகளை கையாளுவார்கள். அதே போலவே இங்கு மற்றவர்களை எப்படியெல்லாம் பயமுறுத்துகின்றார்கள் என்று பாருங்கள்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அபார துடுப்பெடுத்தாட்டம்!!

Tillakaratne Dilshan, Lahiru Thirimanne

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களை பெற்று துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும் லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 75 ஓட்டங்களையும் விலாசியுள்ளனர்.

இதன்படி 308 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்டு தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்கருக்கு 40 லட்சம் டொலர்!!

us

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு 40 லட்சம் டொலர்களுக்கும் அதிக பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதி அமலாக்கத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் போலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள் முழுமையாக மறந்துபோன நிலையில் கைவிட்டிருந்தனர்.

இதனால் நான்கு நாட்களாக தண்ணீரும் உணவுமில்லாமல் தவித்த இளைஞன் தனது சிறுநீரையே குடிக்க நேர்ந்துள்ளது.போதைப்பொருள் தேடலின்போதே இந்த இளைஞனையும் போலிஸார் பிடித்துச் சென்றிருந்தனர்.

ஆனால் அவர் கைது செய்யப்படவும் இல்லை. குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர்மீது பதிவு செய்யப்படவும் இல்லை. ஆனால் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை எவருமே கவனிக்கவில்லை.

தான் சுவரில் உதைத்து கத்தி கூக்குரலிட்டதாக அந்த இளைஞன் கூறுகிறார். 4 நாட்களாக சிறைக்கூடத்தில் நீரின்றி தவித்த இளைஞன் பின்னர் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதில் 3 நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவிலும் இருந்துதான் அவர் மீண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு போலிசார் கூறியுள்ளனர்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்!!

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் வவுனியா நகரசபைப் பதில் தலைவருமாகிய எம்.எம் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் எங்கும் பரவலாக நேற்றும் இன்றும் இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட இத் துண்டுப் பிரசுரத்தில் ரதனின் தெரிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

vav1

இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!

seenivasan

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர் அடிபட்டு அவரை மும்பை போலீஸார் தேடத் தொடங்கியதும் சீனிவாசனுக்கு சிக்கல் வந்தது.

அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆரம்பத்தில் முடியாது என்று கூறி வந்தார் சீனிவாசன். ஆனால் நெருக்கடி அதிகரிக்கவே, விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அந்த கமிஷனின் விசாரணை முடியும் வரை தான் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகவும், அதுவரை ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை வாரியத்திடம் ஒப்படைத்தது. அதில் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நல்லவர்கள், தவறு செய்யவில்லை, அப்பாவிகள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மீண்டும் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார் சீனிவாசன். விசாரணைக் கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் பதவியேற்கப் போவதாக வாரிய உறுப்பினர்களுக்கு அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் நிரபராதிகள், தவறு செய்யாதவர்கள் என்று எப்படி பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் கூறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ம் திகதி வாரியத்தின் செயற் கூட்டம் கூடுகிறது. அப்போது மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பிரச்சினை எழுப்ப நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

கண்ணுக்குள் இருந்த ஒன்றரை அடி நீள புழு!!

worm

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவரின் கண்ணில் உயிரோடு இருந்த ஒன்றரை அடி நீளமுள்ள புழுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர்.

உடுமலைப் பேட்டையை அடுத்த கோமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கண் வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே வலி அதிகரித்ததையடுத்து பழனிசாமி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அப்போது அவரது கண்ணிற்குள் ஒன்றரை அடி நீளப் புழு ஒன்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக்கேட்டு பழனிசாமியும் அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பழனிசாமியின் கண்ணிற்குள் இருந்த புழுவை வெற்றிகரமாக அகற்றினர்.

இதேபோல் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குதிரையின் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து குதிரைக்கு மருத்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்தக் குதிரையின் கண்ணிற்குள் நீண்ட புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர் ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், குதிரைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டு, குதிரை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!

mobile

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களிடமும், பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது. கையடக்கத் தொலைபேசியில் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த், சவானின் பிணையை இரத்து செய்ய கோரி மனு!!

IPL-Sreesanth

6வது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் டெல்லி பொலிசார் நேற்று குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். 6 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக குற்றப்பத்திரிகை இருந்தது.

நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகீல், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் உள்பட 39 பேரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் அஜீத் சண்டிலா உள்பட 9 பேர் இன்னும் சிறையில் தான் உள்ளனர். ஸ்ரீசாந்த், அங்கீட் சவான் உள்பட 21 பேர் பிணையில் விடுதலையாகி உள்ளனர்.

10 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மராட்டிய அமைப்பு ரீதியிலான குற்றதடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் அந்த அணியை சேர்ந்த திரிவேதி, ஹர்மித் சிங் ஆகிய 3 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்பட 21 பேரது பிணையை இரத்து செய்யக்கோரி டெல்லி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி வைத்தியாசலையில் அனுமதி!!

sridevi

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

வலது கால் மூட்டிலும் பலத்த அடிப்பட்டது. வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து பயணத்தை இரத்து செய்து விட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. சில நாட்கள் வைத்தியசாலையிலேயே இருப்பார் என தெரிகிறது. ஸ்ரீதேவியின் 50வது பிறந்த நாளை அடுத்த மாதம் 13ம் திகதி மும்பையில் பிரமாண்டமாக கொண்டாட போனிகபூர் திட்டமிட்டு இருந்தார்.

ஸ்ரீதேவி வைத்தியசாலையில் இருப்பதால் விழாவை இரத்து செய்யலமா என்று யோசிக்கிறாராம்.

2 தலை, 2 முதுகெலும்பு, ஒரு இதயத்துடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு!!

baby

இந்தியாவின் ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இக்குழந்தை பிறந்தப்போது, அதனை காப்பாற்ற முடியுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24ம் திகதி அர்சி என்னும் 24 வயது இளம்பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய ஒரு ஆண் குழந்தை பிறந்தது. உடலில் இரண்டு தலை, இரண்டு முதுகெலும்பு மற்றும் இரண்டு நரம்பு மண்டலங்கள் இருந்த இக்குழந்தைக்கு ஓரேயொரு இதயம், தோள்பட்டை இருந்தது.

இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே சரியாக மூச்சு விடமுடியாமல் தவித்தது. எனவே, குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இக்குழந்தை எளிதாக மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை உயிரிழந்தது. பொதுவாக இது போன்று பிறக்கும் குழந்தை உயிர் வாழ்வது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அக்குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் அதிக முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.

மதுபானங்களின் விலை திடீர் உயர்வு..

சாராயarrackம் மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பியர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய வரி விதிப்பால் சாராயம் 25 – 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிகரெட்களின் விலையையும் நிதி அமைச்சு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?

ashesஇங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. விமர்சனத்துக்கு உள்ளான கிளார்க் தலைமையிலான ஆஸி. அணி தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது..!

arrest1சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர்கள் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த போது கடற்படையினர் இவர்களை கைது செய்து திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இதனோடு தொடர்புபட்ட மூன்று வான் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.