வளைகுடா நாடுகளுக்கும் ஒருங்கிணைந்த விசா!!

Flagsஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும் உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது செங்கன் விசா என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும். இதனால் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளுக்கு சென்றுவர இது எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது.

இதே போன்றதொரு பொதுவான விசா நடைமுறையை வளைகுடா நாடுகளுக்கும் கொண்டுவர வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் 2014ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படும் இந்தத் திட்டத்தால் பயணிகளின் பயண விதிமுறைகள் எளிதாக்கப்படும் என்று கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுறவு கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தப் புதிய விதிமுறை மூலம் ஒற்றை நுழைவு விசா பெறும் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான அனுமதியும் பன்மடங்கு நுழைவு விசா பெறுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆயினும், இந்த விசாவினைப் பெறுவதற்கு போதுமான நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அறிவித்துள்ளது. எதிர்நோக்கப்படுகின்ற சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டபின் வரும் 2014ம் ஆண்டின் மத்தியில் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படலாம் என்று கூட்டுறவு கவுன்சில் கருதுகின்றது.

இதனால் தற்போதைய நடைமுறையான ஒரு நாட்டிற்கான விசா அனுமதி தடை செய்யப்பட மாட்டாது என்றும் வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

70 வயது கணவரை தேநீர் கோப்பையால் அடித்துக் கொன்ற மனைவி!

MURDER

70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை தேநீர் கோப்பையால் அடித்தே கொன்று விட்டார். ஜப்பானில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே.

அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார்.

பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில் அடித்ததால் படுகாயமடைந்த யசுவோ, உயிரிழந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலீஸார் எமிகோவைக் கைது செய்தனர்.

இரண்டு மகள்களை எரித்துக் கொன்ற தந்தை!!

fire

சுவிஸ்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு குழந்தைகள் காருக்குள் எரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் தந்தை சிறிது கிலோ மீட்டர் இடைவெளியில் ஆபத்தான நிலையில் எரிந்து கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் இவர் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் தனது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டதாக இவரது மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், இவரே தனது குழந்தைகளை வைத்து காரினை எரித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

திருடச்சென்ற வீட்டில் அசந்த தூக்கிய திருடன்!!

theif

எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் திருடச் சென்ற வீட்டில் அசதி காரணமாக தூங்கிய திருடனை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன்.

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். ஒரு வாரம் கழித்த பின்னரே திரும்புவோம் என பக்கத்து வீட்டினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் விஸ்வம்பரனின் வீட்டில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பக்கத்து வீட்டினர் கவனித்தனர்.

சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அவரை தட்டி எழுப்பினர். திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து,அப்பகுதியினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

இதில், அந்த நபர் ஐயம்புழா பகுதியை சேர்ந்த கிரீஷ் (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் திருடியதால் எனக்கு அலுப்பாக இருந்தது. விஸ்வம்பரனின் வீட்டில் ஆள் இல்லை என தெரிந்துதான் உள்ளே வந்தேன். பல நாட்கள் தூங்காமல் கண் விழித்த அசதி காரணமாக தூங்கிவிட்டேன் என்றார்.

இதையடுத்து, அவரை அங்கமாலி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அங்கமாலி பகுதியில் கடந்த பல மாதங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கிரீஷ் திருடியது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!

google car

ஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.

இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இத்தாலி ஆசிரியரை காதலித்த இலங்கைச் சிறுமி மர்மமான முறையில் தற்கொலை?

Piyumi

இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.

19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.

சடலம் தற்போது மெஸ்ஸினா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரண பரிசோதனையை தொடர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சிறுமியின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து இத்தாலி சென்றவர்கள்.

இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் இத்தாலி சென்று இருந்தார்.

கண்டியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பொலிஸார்(படங்கள்)

கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவில் உள்ள 8 ஜோடி மோப்ப நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டதாக அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டதுடன் 2000 இற்கு மேற்பட்ட பொலிஸார் கலந்து கொண்டனர். இத்திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பாற்சோறு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

பேராதெனிய கால்நடை மருத்துவ பீட பேராசிரியர்களும் மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரும் கலந்து சிறப்பித்தனர்.
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட மோப்பநாய்களில் மூன்று ஜோடி நாய்கள் தேனிலவுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சேவைக்காக 100 மோப்பநாய்கள் வெளிநாடுகளிலிருந்து அஸ்கிரியவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மோப்ப நாய்களின் ஊடாக அந்த இனத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் திருமண நடத்திப்பட்டதாக அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.

dog_marriage_001

dog_marriage_002

மைதானத்தில் சிறுநீர் கழித்து கிரிக்கெட்டை அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்!!

england win

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றது. ஆனால் ஒரு போட்டியில் கூட அவுஸ்திரேலியா வெற்றிபெறவில்லை. இதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களும் வீரர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

ஏற்கனவே ஒரு போட்டி டிரா ஆகியிருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது போட்டியும் நேற்று டிராவில் முடிந்தது. இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

இந்த வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் தலை கால் புரியாமல் கொண்டாடியுள்ளனர். அதாவது மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சில் போய் சிறுநீர் கழித்து விளையாடியுள்ளனர்.

இப்படி பிட்ச்சில் சிறுநீர் கழித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே அதன் வீரர்கள் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது வரலாறு காணாத செயல் என்று வர்ணிக்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படித்தான் இங்கிலாந்து வீரர் மொன்டி பனேசர் கூட கிளப் ஒன்றில் சிறுநீர் கழித்து கேவலமாக நடந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த சம்பவம் நடந்தது ஓவல் மைதானத்தில். பிரபலமான இந்த ஓவல் மைதான பிட்ச்சில் இப்படி இங்கிலாந்து வீரர்கள் சிறுநீர் கழித்த செயல் ஓவல் மைதானத்திற்குப் பெரும் அவமானமாகியுள்ளது.

கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர்தான் சிறுநீர் கழித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடன் மேலும் சில வீரர்களும் சம்பவ இடத்தின்போது இருந்துள்ளனர்.

மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் : யுவராஜ் சிங்!!

yuvaraj

இந்திய அணியில் தொடர்ந்து ஓரங்கப்படும் நிலையிலும் மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் கடந்த 2011ம் ஆண்டில் நடந்த உலக கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருதினை வென்றார்.

இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டவர் 2012 T-20 உலக கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது போம் இல்லாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் கூறுகையில் கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம் கிடைக்காதது கடினமாக இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன்.

உலக கிண்ண(2011) தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டது மீண்டும் அணியில் இடம் பிடித்தது தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவிப்பது என எல்லாமே சோதனை தான்.

இருப்பினும் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் தான் மீண்டும் அணியில் இடம் பிடிக்க தூண்டியது. இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

அடுத்த மாதம் நடக்கவுள்ள சலஞ்சர் கிண்ணத் தொடரில் பங்கேற்க உள்ளேன். அதற்கு முன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன்.

அதன்பின் ஒக்டோபரில் துலீப் கிண்ண தொடரில் பங்கேற்க உள்ளேன், வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன். அதன்பின் ரஞ்சி கிண்ண தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிப்பரா ஜக் கலிஸ்??

kallis

தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரரான ஜக் கலிஸ் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆட ஆரம்பித்தால் பின்னர் அவரை ஆட்டமிழக்க செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இது பள்ளி நாட்களிலிருந்தே அவருடைய இயல்பாக இருந்தது என்று அவருடைய சிறிய வயது பயிற்சியாளரும் வழிகாட்டியுமான கீத் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

விரோதம் பாராட்டும் அவுஸ்திரேலியர்கள் கூட கலிஸ் விளையாட ஆரம்பித்தால் தனி உலகத்தில் இருப்பார் என்று ஒரு முறை தெரிவித்துள்ளார்கள்.

கலிஸ் இதுவரை 162 டெஸ்ட் (274 இன்னிங்ஸ்) போட்டிகளில் ஆடி 13,128 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரது சராசரி ரன் விகிதம் 56.10 ஆக உள்ளது. சச்சின் டெண்டுல்கர் 198 போட்டிகளில் (327 இன்னிங்ஸ்) ஆடி 15,837 ரன்கள் எடுத்துள்ளார்.

இவரது ரன் விகித சராசரி 53.86ஆக உள்ளது. எனவே கலிஸ் தொடர்ந்து 327 இன்னிங்ஸ் விளையாடினால் தற்போது அவருக்கு உள்ள ஓட்ட விகிதத்தில் நிச்சயம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று கூறப்படுகின்றது.

சச்சினை விட இரண்டரை வயது சிறியவரும், ஆட்டத்திறன் கொண்டவருமான கலிஸ் கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் 46 ஓட்ட சராசரியில் 1181 ஓட்டங்களை எடுத்துள்ளார். சச்சின் 31 ரன் சராசரியில் 872 ஓட்டங்களை எடுத்துள்ளார்.இதனைக் கணக்கிடும்போது கலிஸின் பயிற்சியாளரான கீத் ரிச்சர்ட்சன். அவர் சச்சினின் சாதனையை முறியடிக்காமல் ஒய்வு பெறமாட்டார் என்று உறுதிபடக் கூறுகின்றார்.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து!!

eng

ஆஷஸ் தொடரை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாமிடத்திருந்த இந்திய அணி 116 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடர் தொடங்கும்போது இங்கிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருந்தது. இத்தொடரின் 4வது போட்டிக்குப் பின் இங்கிலாந்து 3-0 என்ற நிலையில் இருந்தது. இதனால் கடைசி டெஸ்டில் சமநிலை அல்லது வெற்றி பெற்றால் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேற முடியும் என்ற நிலை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது.

அதைப் போலவே கடைசி டெஸ்ட் டிராவில் முடிய தரவரிசையில் இங்கிலாந்து அணி முன்னேற்றம் கண்டது. 135 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது.

ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் தோற்றதால் அவுஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி 4வது இடத்தில் இருந்து 101 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

5வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் 102 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் (99 புள்ளிகள்) 6வது இடத்திலும், இலங்கை (88 புள்ளிகள்) 7வது இடத்திலும், நியூசிலாந்து (79 புள்ளிகள்) 8வது இடத்திலும், வங்காளதேசம் 9வது இடத்திலும் உள்ளன.

எங்களை தோற்கடிப்பது கடினம் : குக் எச்சரிக்கை!!

Alastair Cook

ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இதன்மூலம், எங்களை தோற்கடிப்பது கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

இந்தப் போட்டியின் ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. எனினும் கடைசி நாளில் 4 ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலையில் இங்கிலாந்து இருந்தது. ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டுக்கான ஆஷஸ் கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த வெற்றி குறித்து குக் கூறியது:

ஆஷஸ் தொடர் தொடங்கும் முன், இங்கிலாந்து அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சொந்த நாட்டில் நடக்கும் போட்டி என்பதால் இங்கிலாந்து அணிக்கே நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், எங்கள் அணி போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றது.

வேண்டியபோது ஓட்டங்களையும், விக்கெட்டையும் எங்கள் வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம் தன்னைத் தோற்கடிப்பது கடினம் என்ற நிலையை எங்கள் அணி எட்டியுள்ளது. அடுத்த ஆஷஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அணியினர் பலம் வாய்ந்தவர்களாக இருப்பர். ஆனால், அதனை சமாளிக்கும் வகையில் எங்கள் அணி உள்ளது என்று தெரிவித்தார். கடைசியாக அவுஸ்திரேலிய அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 7இல் தோல்வியைத் தழுவியுள்ளது. 2 போட்டிகளை சமநிலை செய்துள்ளது.

டெஸ்டில் ஜாம்பவானாக விளங்கிய அவுஸ்திரேலிய அணி தற்போது தடுமாறி வருகிறது. ஆஷஸ் தொடரை இழந்து விட்டபோதும், எங்கள் அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், மழையினால் அது மாறிப்போனது. 5வது டெஸ்டில் ஷேன் வட்சன், ஸ்டீவன் ஸ்மித், கிறிஸ் ரோஜர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் போர்முக்குத் திரும்பினர்.

ஆஷஸ் தொடரின் கடைசி 3 போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

சீன பேருந்தில் பயணிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து : 4 பேர் பலி!!

knife-and-blood

சீனாவின் சிசூவான் மாகாண செங்குடு நகரில் நேற்றிரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 30 பேர் பயணித்த அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது.

அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் கண்மூடித்தனமாக பேருந்தில் இருந்தோர்களை வெட்டியும், குத்தியும் தாக்கினான்.

இதில் 10 வயது சிறுமி உள்பட 4 பயணிகள் கொல்லப்பட்டனர். மற்ற 11 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. உடனடியாக ஓட்டுனர் பயணிகள் தப்பித்து செல்லும் நோக்கில் பேருந்தை நிறுத்திவிட்டு கதவை திறந்துவிட்டார்.

ஆனால், கீழே இறங்கிய அவன் கையில் இருந்த கத்தியை சுழற்றி வீசினான். பின்னர் ஓட்டுனரும் அங்கிருந்த மக்களும் அவனை நெருங்கினர். உடனே செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார், காலில் துப்பாக்கியால் சுட்டு அவனை பிடித்தனர். படுகாயமடைந்த 11 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

41 வயதான லீ என்ற அந்த தாக்குதல் குற்றவாளி வீட்டில் பணம் பிரச்சினை காரணமாக பெற்றோர்களுடன் சண்டை போட்டுவிட்டு வந்தான் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தும் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை.

இதுபோன்று ஹெனான் மாகாணத்தில் இந்த மாத தொடக்கத்தில் பேருந்தில் ஒருவன் கத்தியால் தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்!!

Sri-Lankan-Tami20987

புழல் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இதில் அடைக்கப்பட்டிருந்த சந்திரகுமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய 3 இலங்கை தமிழ் அகதிகள் அங்கே தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்த 3 பேரும் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை பொலிஸார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி ஜூடிசியல் நீதவான் வேல்ராஜ், முன்பு 3 பேரையும் ஆஜர்படுத்தினார்கள்.

அவர்களை காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இதையடுத்து 3 அகதிகளும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையிலும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். நேற்று காலை முதல் அங்கே சந்திர குமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் மூவரும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக தமிழகத்துக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இவர்கள் என்பாதும் அதனால் பொலிசாரால் பிடிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்.(படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் வீ.ஆனந்தசங்கரி தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு குருமண்காடு சந்தியிலிருந்து கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட ஒன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் வீ.ஆனந்தசங்கரி தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் யோகேஸ்வரன் அரியநேந்திரன் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது வவுனியாவிலுள்ள உள்ளுர் இளைஞர்களாலேயே இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுகளில் உள்ளுராட்சி சபை தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9

வவுனியா வீரபுரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறந்து வைப்பு!!

138

வவுனியா வீரபுரம் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

செட்டிகுளம்- நெளுக்குளம் பிரதான வீதியில் உள்ள வீரபுரம் கிராமத்திலேயே இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அலுவலகத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்தார்.

இதேவேளை, அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேசசபைச் சேர்ந்த கதிர்காமு பரமேஸ்வரன், செட்டிகுள பிரதேசசபைத்தலைவர், நெடுங்கேணி பிரதேசசபைத் தலைவர், செட்டிகுள பிரதேசசபையைச் சேர்ந்த சந்திரன், சிவம் ஆகியோரும் வேட்பாளர்களான தியாகராஜா, இந்திரராஜா, நடராஜா, சத்தியலிங்கம், மயூரன், ரவி, ரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.