தண்ணீருக்காக கஞ்சா கருப்பை தேடிவரும் மனுக்கள்!!

kancha karuppu

கொலிவுட்டில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து வரும் கொமடி நடிகர் கஞ்சா கருப்பிற்கு மனுக்கள் குவிந்து வருகிறதாம்.
அங்காடி தெரு மகேஷ் நாயகனாகவும் ஆருஷி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லொரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தண்ணீர் இல்லாத ஊர்களுக்கு லொரியைக் கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம்.
இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கும் கஞ்சா கருப்பிற்கு மேலும் போர்வெல் போடச் சொல்லி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்து வருகிறதாம்.

 

உயரமான பெண்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!!

Tall-Women-1

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயோர்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் அல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

மாத விலக்கு நிறைவு பெற்ற 20,928 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக உயரமுள்ள பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மற்றும் தோல் புற்று நோய் போன்றவை இருந்தன.

பொதுவாக புற்று நோய்கள் ஹோமோன்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனுடன் மனிதர்களின் உயரமும் சேர்ந்து புற்றுநோய் ஏற்பட வழி வகுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உயரமான ஆண்களை விட பெண்களையே புற்று நோய் அதிக அளவில் தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அதிக உயரமுள்ளவர்களின் உடல் பாகங்களும் பெரியதாக உள்ளன. எனவே அதில் உள்ள அதிக அளவிலான செல்களில் புற்று நோய் மிக விரைவில் பரவுவதாக கூறுகின்றனர்.

திருமணத்திற்கு தயாராகும் பரத்!!

barath

கொலிவுட்டில் 555 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் பரத், விரைவில் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
சசி இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் இப்படத்தில் பரத் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் 6 பேக் உடற்கட்டுடன் தோன்றும் இவர் ஜக்பாட் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இந்தி படத்தில் பரத்துடன், நசிருதீன்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நசிருதீன்ஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து பரத் கூறுகையில், சிறந்த நடிகர்களில் ஒருவரான நசிருதீன்ஷாவுடன் நடிப்பது, பெருமையாக இருக்கிறது. நடிப்பை பொருத்தவரை அவருடைய பாணி வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

தற்போது நடித்து முடித்திருக்கும் 555 படம் வெளியான பின்பே புதிய படங்களை ஒப்புக்கொள்வேன். எனது வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மிக விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறந்த பொலிவுட் நடிகராக அமிதாப் பச்சன் தெரிவு!!

bachan

பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் மிகச் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வெளிவரும் ஆசிய வாரப் பத்திரிகை, இந்தியாவின் சிறந்த 100 பாலிவுட் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் இக்கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இதில் அமிதாப்பச்சன் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலக சக கலைஞர்கள் போன்ற ஏராளமானவர்களின் வாக்குகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார். முதுபெரும் நடிகர் திலிப் குமாருக்கு இரண்டாவது இடமும், ஷாருக்கான் மூன்றாவது இடத்தையும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் இதில் சல்மான் கான்-11, அமீர்கான்-14, தர்மேந்திரா- 15, ஹேமா மாலினி -18, மதுபாலா -24, கஜோல் -30, ஹிரித்திக் ரோஷன் -32, ராணி முகர்ஜி -38, கரீனா கபூர் -43, பிரியங்கா சோப்ரா -86, கேத்ரீனா கைப் – 93 இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படமாகும் கர்நாடக இசைமேதை கதை: புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி?

rajani

கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் புரந்தர தாசர். கர்நாடக இசையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார். புரந்தரதாசர் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்னுடைய நண்பர் ராவ்பகதூரை அனுப்பி வைத்தார்.

விழாக்குழுவினர் புரந்தரதாசர் உருவத்தில் ரஜினியை ஓவியமாக வரைந்து ராவ்பகதூரிடம் வழங்கினர். பெங்களூரை சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர் இந்த படத்தை வரைந்து இருந்தார். ரஜினி நிஜமாகவே புரந்தரர் தோற்றத்தில் இருப்பதாக ஓவியத்தை பார்த்தவர்கள் பாராட்டினர்.

புரந்தரதாசர் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்றும் அப்படத்தில் புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்றும் விழாவில் வற்புறுத்தப்பட்டது. ரஜினி ஏற்கனவே ஸ்ரீராகவேந்திரர் வேடத்தில் நடித்துள்ளார். எனவே புரந்தரதாசர் வேடத்திலும் அவர் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ரஜினி சார்பில் விழாவில் பங்கேற்ற அவரது நண்பர் ராவ்பகதூர் பேசும்போது விழாக்குழுவினர் அளித்த ஓவியத்தை ரஜினியிடம் ஒப்படைப்பேன். அத்துடன் புரந்தரதாசர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் வலியுறுத்துவேன் என்றார்.

எடை அதிகமானவர்கள் நியூசிலாந்தில் வாழ உரிமை இல்லையாம்..!

nz

அதிக எடை கொண்ட வெளிநாட்டவர்களை அங்கு தங்க முடியாது என்று கூறி நாடு கடத்தும் நடவடிக்கையில் நியூசிலாந்து நாடு இறங்கியுள்ளது. இந்த உத்தரவால் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 130 கிலோ எடை கொண்ட அல்பட் பியூட்டன்ஹீஸ் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறவும் அவர் பணிக்கப்பட்டுளார்.

6 வருடத்திற்கு முன்பு நியூசிலாந்தில் தொழிலுக்காக வந்து குடியேறினார் அல்பட். ஆனால் வந்த பிறகு அவருக்கு உடல் எடை கூடி விட்டது. இதையடுத்து மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து 30 கிலோ வரை எடையைக் குறைத்தார்.

தற்போது அவரது எடை 130 கிலோவாக உள்ளது. இது அதிக எடை உங்களால் நியூசிலாந்தில் தங்க முடியாது என்றும் உங்களது தொழில் விசாவைப் புதுப்பிக்க முடியாது என்றும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்துள்ளது நியூசிலாந்து குடியேற்றத் துறை.

இதுகுறித்து நியூசிலாந்து குடியேற்றத்துறையினர் கூறுகையில் ஏற்றுக் கொள்ளும்படியான சுகாதாரத்துடன் அல்பட் இல்லை என்று வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து இங்கு தங்க முடியாது என்று கூறியுள்ளது.

நியூசிலாந்து குடியேற்றத் துறையின் இந்தப் புதிய உத்தரவால் அல்பட்டும் அவரது மனைவியும் கடும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்தில் உள்ளனர்.

இது பற்றி அவரது மனைவி கூறுகையில் அல்பட் இங்கு வந்தபோது 160 கிலோ எடையுடன் இருந்தார். ஆனால் வந்த பின்னர் கடுமையாக போராடி 30 கிலோ வரை குறைத்தார். அப்போது விட்டு விட்டு எடை குறைந்த பின்னர் வெளியேறச் சொல்வது என்ன நியாயம் என்றார்.

இன்று 30வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்..!

danush

தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தந்தை கஸ்தூரி ராஜாவின் படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் கொலிவுட்டுக்கு வந்தவர் தனுஷ்.

அதன் பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன் ஹிட்டானது. பின்னர் திருடா திருடி படத்தில் சாயா சிங்குடன் சேர்ந்து அவர் ஆடிய மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பல நாட்கள் ஒலித்தது. இப்படி படிப்படியாக முன்னேறி வந்தவர் தனுஷ்.

தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். தனுஷ், ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.

ராஞ்ஹனா படம் மூலம் கொலிவுட்டில் இருந்து பொலிவுட் சென்றார். அவர் நடித்த முதல் இந்தி படமே 100 கோடி வசூல் செய்துள்ளது. தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை லண்டனில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.

தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு!!

soft

தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது.இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும் வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன.

அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம் மந்தடையும் சாத்தியமும் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால் அவ்வாறான மென்பொருட்களை தேடி முற்றுமுழுதாக கணனியிலிருந்து நீக்கிவிடுவது அவசியமாகும்.

எனினும் சாதாரண முறையில் மென்பொருட்களை நீக்கும்போது சில கோப்புக்கள் கணனியிலிருந்து நீங்காது. இதனால் கணினியின் வேகம் குறைவடைவதுடன், தேவையற்ற எச்சரிக்கை செய்திகளை தோற்றுவித்த வண்ணம் இருக்கும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக Soft Organizer எனும் மென்பொருள் காணப்படுகின்றது.இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களினை விடவும் இலகுவான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன் விரைவான செயற்பாட்டினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் கணனியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

தரவிறக்க இங்கே அழுத்துக

படவாய்ப்பு பறிப்பு: சுருதிஹாசனுடன் தமன்னா மோதல்?

sruthi

தமன்னாவுக்கும் சுருதிஹாசனுக்கும் மோதல் மூண்டுள்ளதாக இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நெருக்கமானவர்களிடம் கடுமையாக தாக்கி பேசுகிறார்களாம். தமன்னாவுக்கு சென்ற பட வாய்ப்பை சுருதிஹாசன் தட்டி பறித்ததே இந்த தகராறுக்கு காரணம் என்கின்றனர்.

தமன்னா ஏற்கனவே ஹிம்மத்வாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மேலும் இரு இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயகாந்த் நடித்து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜயகாந்த் வேடத்தில் அக்சய் குமார் நடிக்கிறார்.

கதாநாயகியாக நடிக்க தமன்னாவை தேர்வு செய்தனர். இதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தார்.ஆனால் திடீரென தமன்னாவை நீக்கிவிட்டு சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்து விட்டனர்.

சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீசான டிடே, ராமையா வஸ்தாவையா ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடின. இதையடுத்து அக்சய்குமார் ஜோடியாகும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார். இந்த படம் மூலம் இந்தி பட உலகில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி!!

Soth-Africa-vs-Sri-Lanka

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான பரபரப்பான 4வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பள்ளேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியும் மூன்றாவது போட்டியில் தென்னிபிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 2-1 என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அணியும் தொடரை சமன் செய்யும் நோக்கில் தென்னாபிரிக்க அணியும் களமிறங்குகின்றன. இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கிய போட்டியாக மாறியுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்ற போதும் 3வது போட்டியில் வெற்றி பெற்று 20 வருடங்களின் பின் இலங்கை மண்ணில் இலங்கை அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகின்றது தென்னாபிரிக்க அணி. மழை குறுக்கிடாத பட்சத்தில் ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டி ஒன்றை கண்டுகளிக்க முடியும்.

சிம்பாவே தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

india

இந்தியா– சிம்பாவே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்திய அணி ஹட்ரிக் வெற்றி பெறுமா? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிம்பாவே அணி ஒரு ஆட்டத்திலேனும் வெற்றி பெரும் நோக்கில் உள்ளது.

சிம்பாவே அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 58 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இதேவேளை இந்தியா- சிம்பாவே அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் திகதி நடைபெற இருந்தது. ஆனால் பொதுதேர்தல் காரணமாக ஆட்டம் ஓகஸ்ட் 1ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த 100 கடற்கரைகளில் 79வது இடம்பிடித்த இலங்கை கடற்கரை..!

uda

உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள “உனவடுன’ கடற்கரை 79வது இடத்தினை பெற்றுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கையின் உனவடுன கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பல்வேறு பட்ட நிலப்பகுதிகளை தரப்படுத்தலுக்குட்படுத்தி அதில் சிறந்த நிலப்பகுதிகளை தெரிவு செய்யும் அச்செய்தி நிறுவனம் இம்முறை உலகிலுள்ள கடற்கரைகளை தரப்படுத்தலுக்குட்படுத்தி அதில் சிறந்த 100 கடற்கரைகளைத் தெரிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து நாடுகளும் குறித்த தரப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டதுடன் அதில் சிறந்த நூறு கடற்கரைகள் அறிவிக்கப்பட்டது. உலக நாடுகளில் காணப்படும் சிறந்த கடற்கரைகளுள் முதலாவது இடத்தினை சீசெல்ஸ், டிக்யூ தீவில் அமைந்துள்ள கிரேன்டி அன்சே கடற்கரை பெற்றுள்ளது.

இதில் இலங்கையின் கடற்கரையான உனவடுன 79வது இடத்தினை பெற்றுள்ளது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட உனவடுன கடற்கரைப்பகுதி இன்று சிறந்த 100 கடற்கரைகளுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் கடலலைச் சறுக்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த 100 கடற்கரைகளுள் 46வது இடத்தினை அறுகம்பே கடற்கரை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பலாத்கார வழக்கு: சிறுவன் வழங்கிய பரபரப்பு சாட்சியம்!!

delhi

டெல்லியில் கடந்தாண்டு டிசம்பரில் ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றில் நடக்கிறது.

நேற்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் 15 வயது சிறுவன் சாட்சியாக ஆஜர் படுத்தப்பட்டான். அந்த சிறுவன், பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்றிரவு குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய், பவன் ஆகியோர் அந்த பஸ்சில் இல்லை.

சம்பவம் நடந்தாக கூறப்படும் அதே நேரத்தில் அவர்கள் இருவரும் தெற்கு டில்லியில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த இசைக் கச்சேரியை பார்த்து கொண்டிருந்தனர் என சாட்சியம் அளித்தான்.

இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரத்தையும் அந்த சிறுவன் நீதிமன்றில் தாக்கல் செய்தான். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயான் கிருஷ்ணன் இதை மறுத்தார். அவர் வாதிடுகையில், சம்பவத்தன்று தெற்கு டில்லி பூங்காவில் எந்த இசைக் கச்சேரியும் நடக்கவில்லை. இந்த சிறுவனின் குடும்பத்தினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள்.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக, பொய் சாட்சி கூறப்படுகிறது என மறுத்தார். சிறுவனின் சாட்சியத்தால் நிதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது.

மானத்தைக் காப்பாற்ற ஓடும் ரயிலிருந்து குதித்த பெண்!!

rain

கொல்கத்தாவில் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை ஆசாமி ஒருவர் மானபங்கம் செய்துள்ளார். இந்த ஆசாமி உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் என்பது தெரிய வந்துள்ளது.

இவர் ரயிலில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கியதுடன் அவரை கற்பழிக்க முயற்சி் செய்துள்ளார்.
இதனால் உதவிக்கு ஆள் இல்லாத நிலையில் தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், சென்று கொண்டிருந்த ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்த அந்த பெண்ணை உள்ளூர் மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அந்த பெண்ணின் சிகிச்சை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசாமியை ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்!!

simbu

சிம்புவும் ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் வாலு படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார்.

சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் இந்த ஊடல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.

இருவருக்குள்ளும் காதல் துளிர்த்துள்ளதை உணர்ந்து வெளிப்படுத்தினர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் முதலில் சம்மதிக்கவில்லை. சிம்புவுக்கு வேலூர் அருகே உள்ள பெண்ணை குடும்பத்தினர் பார்த்து விட்டு வந்தனர். அப்பெண்ணுக்கே திருமணம் செய்து வைக்கவும் தயாரானார்கள்.

ஹன்சிகாவின் தாய் மோனா மொத்வானியும் காதலை முறிக்கும்படி நிர்ப்பந்தித்தார். ஹன்சிகா இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்–2 படங்கள் ஹிட்டானதால் மார்க்கெட் எகிறியுள்ளது. சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

கைவசமும் நிறைய படங்கள் குவிந்துள்ளன. எனவே சினிமாவில் கவனம் செலுத்தும்படியும் காதல், கல்யாணம் என்று போனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோனா மொத்வானி அறிவுறுத்தினார். சிம்புவும் ஹன்சிகாவும் பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர்.

இன்னொருபுறம் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இருவரும் காதலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினார்கள்.
இதையடுத்து காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். உடனடியாக திருமணத்தை நடத்த சிம்பு விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஹன்சிகா ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாராம். இப்போது இருவரும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்கள்.

ஐ.பி.எல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்த தாவூத் இப்ராகீம்!!

Dawood

நடந்து முடிந்த ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி பொலிசார் கைது செய்தனர்.

இதில் சண்டிலாவை தவிர மற்ற இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் பணியில் டெல்லி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இதில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகில் உட்பட 29 பேரது பெயர்கள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சட்ட விரோத ஐ.பி.எல் சூதாட்டத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகீம் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் சூதாட்ட தரகர்களை தனது ஆட்கள் மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது அவர்கள் மூலம் வீரர்களை குறிவைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது மற்றும் கட்டண விவரத்தை தாவூத் இப்ராகீமே தனிப்பட்ட முறையில் நிர்ணயித்ததும் தெரியவந்துள்ளது.

இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.பி.எல் சூதாட்ட கட்டண விகிதத்தை தாவூத் இப்ராகீமே நிர்ணயித்து உள்ளான்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளான் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் உட்பட தாவூத் இப்ராகீம் சூதாட்ட தரகர்களுடன் போனில் பேசிய பதிவுகளும் ஆதாரமாக சமர்பிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.