வவுனியாவில் 156வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

பொலிஸ் வீரர்கள் தினம்..

வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே நேற்று (03.09.2022) காலை 7.40 மணிக்கு உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 156வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி எதிரிசிங்க,

பொறுப்பதிகாரிகள், பொலிஸார், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், மாவட்ட பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்திமையுடன் தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்பட்டதுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே உரையாற்றினார்.

அத்துடன் இறுதியில் உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

பழகிவிட்டு ஏமாற்றிய பூசாரி… கையில் தாலியுடன் திருநங்கை செய்த செயல்!!

சோழவந்தானில்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி (33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலுக்கு வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (33) என்பவருக்கும் கோவில் பூசாரியான திருநங்கை ஸ்ரீநதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து திருநங்கை ஸ்ரீநிதியுடன் சேர்ந்து தங்கதுரையும் கோவிலில் பூசாரியாக இருந்துவந்துள்ளார். இதனையடுத்து கோவில் அருகே வீட்டில் திருமணம் ஆகாத நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் உறவு தங்கதுரை குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தங்கதுரை மற்றும் திருநங்கை ஸ்ரீநதியுன் நட்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கதுரைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

அப்போது தங்கதுரை பெற்றோரின் அழுத்தத்திற்காக திருமணம் செய்துகொள்வதாகவும் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்த ஒரு மாதத்தில் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், இதற்கு திருநங்கை ஸ்ரீநதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தங்கதுரைக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருநங்கை ஸ்ரீநதி தங்கதுரையை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.

தொடர்ந்து பல முறை பேச முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஒரு மாதம் கடந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக்கூறி கையில் தாலியுடன் வந்து தங்கதுரை வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் திருநங்கை ஸ்ரீநதி.

இதனையடுத்து பாலமேடு காவல்நிலையத்தில் திருநங்கை ஸ்ரீநதி அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை தேடிவருகின்றனர்.

ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர் : அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள் : பின்னர் நடந்த சம்பவம்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55) என்ற நபருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 7 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர்.

மணமகனுக்கு இது ஐந்தாவது திருமணம் என்று தெரிவித்த அவர்கள், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும் மணமகளின் தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியது. மாப்பிள்ளை ஷாபிக்கு சரமாரியாக அடி விழுந்தது.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் தனது மனைவியிடம் இருந்து சில காலம் விலகி இருந்த ஷாபி அகமது, கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.

அப்போது தான் அவர் ஐந்தாவது திருமணம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் மணமகனின் பிள்ளைகள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், ஷாபி அகமது கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கெஞ்சிய பெற்றோர்… கண்டுகொள்ளாத மருத்துவமனை: 7 வயது சிறுமிக்கு நடந்த பரிதாபம்!!

பெர்த்தில்..

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களின் மெத்தனத்தால் 7 வயது இந்திய சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் சனிக்கிழமை அன்று பெர்த்தில் அமைந்துள்ள சிறார்களுக்கான மருத்துவமனையில் இக்கட்டான சூழலில் 7 வயதான சிறுமி ஐஸ்வர்யா அஸ்வத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் காத்திருக்கும் அறையில் சுமார் 90 நிமிடங்கள் வரையில் அந்த குடும்பம் அவஸ்தைப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் எவரும் இவர்கள் கெஞ்சுவதை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை சாட்சிகள் மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதில், தொடர்புடைய மருத்துவமனையானது சிறுமி ஐஸ்வர்யாவை காப்பாற்றும் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஊழியர்கள் சிறுமி ஐஸ்வர்யா தொடர்பில் கவனம் செலுத்திய நேரம், அவர் மிக ஆபத்தான கட்டத்திற்கு சென்றிருந்தார் என்றே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், சிறுமி ஐஸ்வர்யா உரிய நேரத்தில் கவனிக்கப்படாமல் போனார் என கூறுகின்றனர். சிறுமி அஐஸ்வர்யாவுக்கு செப்சிஸ் இருந்துள்ளதை அங்குள்ள நர்ஸ் கருத்தில் கொள்ளவில்லை எனவும், மாறாக அவருக்கு இதயத்துடிப்பு அதிகரிப்பதை மட்டுமே அந்த நர்ஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

பொறுப்புள்ள பெற்றோராக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி, சுகாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர அவர்களின் மகள் ஏன் இறக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தங்கள் மகள் வாழ்க்கையில் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தாள் எனவும், எப்போதும் ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள் எனவும் கண்கலங்கியுள்ளனர்.மட்டுமின்றி, தங்கள் மகளின் நினைவை மதிக்கவும், இந்த விவகாரத்தில் சுகாதார அமைப்பை பொறுப்பேற்கவும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவத்தன்று மருத்துவமனை ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், தங்கள் கவலைகளை அவர்கள் நிராகரித்ததாகவும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி கூறியுள்ளனர். விதிகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு உயிரை துச்சமாக மதித்ததுடன், காப்பாற்றும் வாய்ப்புகள் இருந்தும் தவறவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உடைந்திருந்த பற்கள்… கல்லூரி மாணவி பரிதாப மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

வேப்பேரியில்..

சென்னை, வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் கல்லூரியில், பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரியில், மூன்றாம் ஆண்டுக்கான வகுப்பு துவங்கியது. காலை 8மணிக்கு ரோஷினி சர்மா கல்லூரி சென்றார். அப்போது, நான்காவது மாடிக்கு சென்ற ரோஷினி சர்மா மீண்டும் வகுப்புக்கு வரவில்லை.

இதன் பிறகு அந்த வழியாக பெண் பேராசிரியர் ஒருவர் சென்றபோது அங்கு ரோஷினி சர்மா ரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். கல்லூரி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஓடி வந்தனர். தகவல் கிடைத்து, வேப்பேரி போலீசாரும் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் , ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சோதனை செய்தபோது, ரோஷினி சர்மாவின் பற்கள் உடைந்திருந்தன.

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா என தெரியவில்லை.. ஆனால், பலத்த காயமடைந்த அவர் 20 நிமிடம் அங்கேயே உயிருக்கு போராடியிருந்துள்ளார். முன்கூட்டியே அவரை பார்த்திருந்தால், காப்பாற்றி இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், போலீசார், ரோஷினி சர்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல் நாளில், மாணவி ஒருவர் இறந்தது வேப்பேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மனைவியை ஊசியால் குத்தி குத்தி சித்ரவதை செய்த சைக்கோ கணவன்.. மனைவியின் விபரீத முடிவு!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

மதுபோதைக்கு அடிமையான அரவிந்த் அதனை மறைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அரவிந்த்தின் உண்மையான முகம் மனோன்மணிக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், மனோன்மணியை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் தொல்லை தாங்கமுடியாமல் மனமுடைந்து போன மனோன்மணி, ஜனவரி மாதம் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது வாழ்க்கையை எண்ணி மன உளைச்சலில் இருந்த மனோன்மணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அதிகப்படியான தீக் காயங்களால் சிகிச்சை பலனின்றி மனோன்மணி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்த போது, மனோன்மணி தனது வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், தனது கணவர் அரவிந்த் இரவு நேரங்களில் தனது ஆடைகளை கிழித்து ஊசியால் குத்தி சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து அரவிந்த்தின் பெற்றோரிடம் கூறியும் கூட, அவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும் மனோன்மணி அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனோன்மணியின் மரண வாக்குமூலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மனோன்மணியை சித்ரவதை செய்த அவரது கணவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான (NVQ Level 3,4) கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக கீழ்வரும் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

NVQ -3 வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துனர் , NVQ -4 கள உதவியாளர் படநெறி ஆகியவற்றிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாடநெறிக்கான விண்ணப்பத்தினை 17வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுடன் குறித்த கற்கை நெறிகள் 6 மாதம் முழுநேரமாக இடம்பெறும்

விண்ணப்ப படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக தொடர்புகளுக்கு அதிபர் , தொழில்நுட்பக்கல்லூரி , மன்னார் வீதி , நெளுக்குளம் ,வவுனியா என்ற முகவரி இடத்திற்கு நேரில் சென்று அல்லது 024 2223664 , 024 2226720 , 024 2050177 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யும் முன் பெண்ணை அச்சுறுத்தி வந்த சந்தேகநபர் : விசாரணையில் வெளியான தகவல்!!

கேகாலை..

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை அமைப்பாளர் அலுவலகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யுவதி, திருமணம் செய்யவிருந்த நிலையில் திருமணம் செய்யாமல் இருக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட யுவதியும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளரும் மாத்திரமே தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் அலுவலகத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா அமைப்பில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் இருவரையும் தவிர வெளியாட்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன், கைதுப்பாக்கியின் உரிமையாளரை அடையாளம் காணவும் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “உன்னை திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன்” என்று கூறி இந்த யுவதியை மிரட்டிய சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சந்தேகநபருக்கும் இந்த யுவதிக்கும் இடையே வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகள் நடந்து வருகின்றன. எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்ட பெண் சந்தேக நபருடன் சுமார் 16 வருடங்களாக வேலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஒரே நாளில் உயிரிழந்த தம்பதி :பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

உயிரிழந்த தம்பதி..

திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் வாழ்ந்த தம்பதியினர் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), மற்றும் அவரது மனைவி ஏ.ஜி.பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

ரணசிங்க கடந்த 30.08.2022 காலையில் உயிரிழந்த நிலையில் , கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியியும் ஒரிரு மணிநேரத்துக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

உயிரிழந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளதாக கூறப்படும் நிலையில் , ஒரே நாளில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இ.தமிழழகன் நியமனம்!!

இ.தமிழழகன்..

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் பதவி வெற்றிடத்திற்கு புதிய அதிபராக இ.தமிழழகன் நேற்று (02.09.2022) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

1ஏபி தரத்தினை சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு (எஸ்.எல்.பி.எஸ் 1) இணை சேர்ந்த இ.தமிழழகன் அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னார் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகாராஜா வித்தியாலத்தில் இவர் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் அப்பாடசாலையில் மிகச்சிறப்பான வளர்ச்சியினை கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

வவுனியா பம்மைமடுவில் திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம்!!

திண்மக் கழிவுகளை..

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் அமைந்துள்ள திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம் ஐ.நா சபையின் இணை நிறுவனம் யுனொப்ஸ் (unops) மூலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக திட்டமிடல் மேற்கொள்வது தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்கு பம்பைமடு திண்மக் கழிவுகள் அமைந்துள்ள பிரதேசத்தை நேரில் சென்று யுனொப்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதன் போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா, வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு ரதீஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம் , நகரசபை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வவுனியாவில் இரு கண் பார்வையையும் இழந்த குடும்பத்திற்கு சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால் வீடு : அடிக்கல் நாட்டி வைப்பு!!

சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால்..

இலங்கை சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிலுள்ள இராசேந்திரன்குளம் கிராமத்தில் வசித்து வருகின்ற விசேட தேவைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இரு கண் பார்வையையும் இழந்த செல்வக்குமரன் சஞ்சீவன் என்பவருக்கு இவ்வீடு நிர்மாணக்கப்பட்டு வளங்கப்பட உள்ளது. இவருடைய மனைவியும் கண் பார்வை குறைபாடு உடையவராக உள்ளார்.

ஒரு வயது குழந்தை பிள்ளையும் இவர்களுக்கு உள்ளார். கைக்குழந்தையுடன் வசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட இவர்களுக்கு இது மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், இலங்கை சத்திய சாய் நிறுவனங்களின் வடமத்திய பிராந்தியத்திற்கான இணைப்புக் குழுவின் தலைவர் அ.தவீசன், வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தின் தலைவர் வி.ஜெயசோதி , சேவை இணைப்பாளர் கே.சிவகுமார்,

வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜிவன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ந.பாலகுமாரன் , இராசேந்திரன்குள கிராமசேவகர் ப.பிரதீப் , சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கௌசல்யா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறப்பு விழா!!

சரஸ்வதி சிலை திறப்பு..

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கல்வி தெய்வத்தின் சிலை திறப்பு விழா பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இத் திருவுருவச்சிலை அமரர் கிருஸ்ணபிள்ளை இலட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினரினால் அமைக்கப்பட்டது.

சிலை திரைநீக்கம் செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் இணைந்திருந்தனர்.

கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன் : கண் கலங்க வைக்கும் அவலம்!!

மத்திய பிரதேசத்தில்…

மத்திய பிரதேச மாநிலம் , தாமோ மாவட்டத்திற்குட்பட்ட ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வார். கர்ப்பிணியான இவரது மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று முதலில் புரியாமல் இருந்துள்ளார். பின்னர் கைலாஷ் அஹிர்வார் கிராமத்திலிருந்த தள்ளுவண்டியில் மனைவியைப் படுக்கவைத்து அதைத் தள்ளிக் கொண்டு அருகே இருந்த சுகாதார மையத்திற்கு வந்துள்ளார்.

ஆனால், அங்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வேறு மருத்துவமனையில் மனைவியைச் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கும் சரியான சிகிச்சை அளிக்காததால் அவர் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்து கணவன் தள்ளிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் கடந்த வாரம் இதேபோன்று ஒரு சம்பவத்தை வெளியிட்ட 3 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞன் : பிணையில் வெளி வந்தவுடன் காதலியுடன் திருமணம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.

அழகுராஜா ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிவந்துள்ளார். இந்தநிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜை அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது.

தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் ரம்யா புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அழகுராஜா கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவுடன் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். இவர் வெளிநாடு சென்றதால் கொட்டாம்பட்டி காவல்துறையினரால் லுக்அவுட் நோட்டீஸ் அப்போது வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த அழகுராஜா லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக போலீசார் பிடித்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலூரிலுள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.மீண்டும் இன்று இந்த வழக்கில் ஜாமீனில் வெளியேவந்த அழகுராஜா, காதலித்து ஏமாற்றிய ரம்யாவை சிறையைவிட்டு வெளியே வந்தவுடன்,

அடுத்த நிமிடமே சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ரம்யாவின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

விசாரிக்க வந்த காவலரை கடித்த பெண்… பரபரப்பூட்டும் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில்..

திருவொற்றியூர் பகுதியில் காதலன் வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட பெண்ணை விசாரிக்க சென்ற போலீசாரின் கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, திருவொற்றியூர், எஸ்பி கோயில், முதலாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன்.

இவரது மனைவி ரேணுகா (53). இவர்களின் மகன் ரேவேந்திரகுமார் (35) என்பவரும் பூண்டிதங்கம்மாள் தெரு, டி பிளாக்கை சேர்ந்த செல்லப்பன் மகள் செல்வியும் (31) கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

இருவரது பெற்றோர்களும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 2021ம் ஆண்டு, ஜனவரி மாதம் 17ம் தேதி அன்று நிச்சயம் செய்து முடித்தனர். அப்போது, செல்வி, புது விதமாக, மாப்பிள்ளை வீட்டாரிடம் 5 சவரனில் தாலி சரடு, பைக், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை குடும்பம் ” மருமகளாய் வருவதற்கு நீதான் வரதட்சணை கொடுக்க வேண்டும், என் மகன் எப்படி தருவான்? என கேட்டு தாய் ரேணுகா திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதனால், ஆத்திரம் வரும்போதெல்லாம், செல்வி, ரேவந்திர குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபடுவாராம். இந்த நிலையில், நேற்றும், ரேவேந்திரகுமார் வீட்டிற்கு சென்ற செல்வி, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக, கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால், அவர்கள், போலீசுக்கு தகவல் தந்தனர்.

இதனை அடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் சரவணன் (45) மற்றும் போலீசார் அங்கு சென்றனர். செல்வியிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்வி ரகளையில் ஈடுபட்டு, போலீசாரை , தன் செல்போனில் வீடியோ எடுத்தார். அதை பிடுங்க முயற்சித்த போது, சரவணனின் இடது கையை செல்வி கடித்து, அவரின் சீருடையை கிழித்தார்.

இதையடுத்து, செல்வியை கைது செய்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், வழக்கு பதிவு செய்து, செல்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரிக்க வந்த காவலரை கடித்து சீருடையை கிழித்த பெண்ணின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கவுன்சிலிங் வழங்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.