பெண்ணின் புகைப்படத்தை தவறாக காட்டிய பாகிஸ்தான் : புகைப்படக்காரர் வேதனை!!

ஜெருசலேமினைச் சேர்ந்த ஹெய்தி லெவின், தற்போது அமெரிக்காவில் தங்கி செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறார்.

சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸாவில், இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை அவர் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதில் அங்கு குண்டு தாக்குதலுக்கு பலியான ரவ்யா அபு ஜோம் என்ற பெண்ணின் புகைப்படமும் இருந்தது. ஏனெனில் இத்தாக்குதல் எப்படிப்பட்ட தாக்குதல் என்பதை காட்டுவதற்கு இருந்தது.
இந்நிலையில் ஐநா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் உலகுக்கு தீவிரவாதத்தினை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குவதாக குற்றம் சாட்டினார்

பின்னர் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் மலீஹா லோதி, காஷ்மீரில் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் ஜனநாயகம் இதுதான் என்று கூறி, காஷ்மீர் தாக்குதலில் பலியான பெண் என்று ஒருவரின் புகைப்படத்தினை காட்டினார்.

மறுநாள் இதற்கு பதில் அளித்துப் பேசிய இந்தியா, மலீஹா காட்டிய படம் போலி என்றும், அது உண்மையில் ஹெய்தி லெவினால் எடுக்கப்பட்ட ரவ்யா அபு ஜோமின் புகைப்படமாகும்.
இது குறித்து லெவின் கூறுகையில், எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் இத்தகைய செயல்களை கண்டு மனம் வலிக்கிறது.

புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவ்யா அபு ஜோமின் கெளரவத்தினை சீர்குலைக்கும் செயலாகவும் இது அமைந்திருப்பதால் பாகிஸ்தான் கண்டிப்பாக அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்தார்.

தினசரி 20,000 தென் கொரிய மக்கள் கொல்லப்பட வாய்ப்பு : அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

டிரம்ப் அரசாங்கம் வடகொரியா மீது போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் தினசரி 20,000 அப்பாவி மக்கள் தென் கொரியாவில் கொல்லப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை தலைமை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் எனில் தென் கொரியாவில் உள்ள 20,000 அப்பாவி மக்கள் தினசரி கொல்லப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது அணுஆயுதம் பயன்படுத்தினால் பலமடங்கு அதிகரிக்கும் எனவும் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதனிடையே தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தனித்தனியே அமெரிக்காவிடம் போர் குறித்து விவாதித்ததாகவும், தற்போதைய சூழலில் போர் தீர்வல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கிம் ஜோங் வுன் மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனை மற்றும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனில், அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்கா தங்கள் மீது போர் அறிவித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா, “போரை முதலில் அறிவித்தது அமெரிக்காதான் என்று வடகொரியா கூறியுள்ளது அபத்தமானது. அமெரிக்கா அமைதியைத்தான் விரும்புகிறது. அமெரிக்காவை தூண்டும் நடவடிக்கையை வடகொரியா நிறுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.

தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் அறிவித்துள்ளதாக வடகொரியா கூறியுள்ளதை அபத்தம் என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

மேலும் அதிரடி பொருளாதார தடைகளை அமுல் படுத்துவதால் மட்டுமே வடகொரியா கட்டுக்குல் வரும் என்ற நிலைப்பாட்டில் சீனாவும் தற்போது களமிறங்கியுள்ளது.

முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள் தங்களை எதுவும் கட்டுப்படுத்தாது என வடகொரியா பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மகளை தீவைத்து எரித்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த மகளை அவரது தந்தையே தீயிட்டு எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஷீமா(18) என்ற பெண்ணுக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லையென ஷீமா தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சித்துள்ளனர்.

ஷீமா விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த தந்தை, அவரை தீயிட்டு எரித்துள்ளார், இதில் ஷீமாவின் உடல் முழுவதும் தீயால் கருகியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் ஷீமாவின் தந்தையை கைது செய்துள்ளனர்.

98 வயது முதியவர் செய்துள்ள சாதனை!!

ராஜ்குமார் என்ற 98 வயது முதியவர் பொருளாதார பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (98). இவர் கடந்த 1938ல் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நாலந்தா திறந்த நிலை பல்கலைகழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் ராஜ்குமார் சேர்ந்தார்.

தற்போது முதுநிலை பட்டப்படிப்பை தனது 98 வயதில் முடித்துள்ளார்.

இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ராஜ்குமாரின் வெற்றி அவர் குடும்பத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்குமார் கூறுகையில், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் கனவு பற்றி குடும்பத்தினரிடம் நான் சொன்னபோது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

இது ஒரு சவாலாக இருந்த நிலையில், அதை ஏற்றுகொண்டு எனது நீண்டநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

இலங்கை மக்களை வியக்க வைத்துள்ள பாரிய முட்டை!!

 
அண்மையில் காலியில் பாரியதொரு கோழி முட்டை ஒன்று மீட்கப்பட்டிருந்தது. காலி, திக்கும்புர அந்துகொட பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலிருந்து இந்த முட்டை மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த முட்டை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

52 வயதான கருணாரத்ன என்பவர் கடந்த 15 வருடங்களாக கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த கோழி பண்ணையில் முட்டையிடும் 500க்கும் அதிகமான கோழிகள் உள்ளதாக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தினமும் காலை எழுந்தவுடன் முட்டை சேகரிக்கும் அவருக்கும் ஏனைய நாட்களை விடவும் மிகப் பெரியளவிலான கோழி முட்டை ஒன்று கிடைத்துள்ளது. குறித்த முட்டை சுமார் 200 கிராம் நிறையுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண முட்டையை விடவும் இரண்டு மடங்கு பெரியதாக இந்த முட்டை காணப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்று 4 அங்குலம் நீளம் மற்றும் 6 அடி சுற்றுவட்டத்தை கொண்டிருக்கும் எனினும் இந்த முட்டை 5.5 அங்குலம் நீளமும் 9 அடி சுற்றுவட்டத்தையும் கொண்டுள்ளது.

சாதாரண முட்டை ஒன்றின் நிறை 85 – 95 கிராமில் காணப்படும். எனினும் இது 200 கிராம் ஆக காணப்படுகிறது. இவ்வாறானதொரு பாரிய முட்டையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என அந்தப் பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.

இளமையாக தோற்றமளித்த பெண்ணுக்கு விமானநிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

41 வயதில் இளமையாக தோற்றமளித்த பெண்ணை சந்தேகம் அடிப்படையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்டாலியா டெசன்கு என்ற பெண் துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம் சென்றுள்ளார்.

அங்கு கடவுச்சீட்டு கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் கூறிய காரணம் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர்கள் கூறியதாவது..

நீங்கள் கொண்டு வந்த பாஸ்போர்ட்டில் 41 வயது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை விட 20 வயது இளமையாக உள்ளீர்கள். இதனால் நீங்கள் வேறொருவருடைய பாஸ்போர்ட்டில் பயணிக்க முயற்சி செய்கிறீர்கள் என்ற சந்தேகத்தினால் தடுத்தோம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து நட்டாலியா தெரிவித்தபோது, என்னுடைய இந்த இளமை தோற்றத்தால் பலரும் என்னை புகழ்ந்துள்ளனர். ஆனால் அந்த தோற்றமே எனக்கு ஆபத்தாய் அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

நட்டாலியா தனது இளைமை தோற்றத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இருந்தும் இந்த சம்பவம் அவரது வாழக்கையில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.

மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய வைரம் ஏலம்!!

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது, கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 கரட்டாகும்.

இந்த வைரம் 3,106.75 கரட் குல்லியன் அளவு கொண்டது, இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு கரட்டிற்கு 47,777 டொலர்கள் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது.

இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுத்தனர்.

இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிட்டிருந்தனர்.

இதுகுறித்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் கூறுகையில், பழமையான இந்த வைரமானது மிகவும் பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டைத்தீட்டப்படும் என கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவர் பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான பென் ஸ்டொக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைதாகியுள்ளார்.

பென் ஸ்டொக்ஸூம் அவருடன் இருந்த இங்கிலாந்து அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்று (27) இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ஆஷஸ் கிண்ணத் தொடருக்கான குழாமை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்து பெயரிடவுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இருவர் உயிரிழப்பு : ஐவர் காயம்!!

திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும்  பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை தம்புளை குருநாகலை வீதியின் கலேவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குருநாகலவிலிருந்து கலேவல நோக்கி பயணித்த கெப் ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

புகைப்படப் பிடிப்பின்போது ஏரிக்குள் பாய்ந்த மாப்பிள்ளை : நடந்தது என்ன?

திருமணக் கோலத்தில் இருந்த மாப்பிள்ளை, திடீரென ஏரிக்குள் பாய்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரி அருகே திருமணத் தம்பதியரின் புகைப்படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கிளேடன் என்ற மணமகனும், ப்ரிட்னி குக் என்ற மணமகளும் புகைப்படக் கலைஞரின் கட்டளைகளுக்கு ஏற்ப இப்படியும் அப்படியுமாக மாறி மாறி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரெனக் கலவரமான மணமகன் ஓடிச் சென்று ஏரியில் பாய்ந்தார், அதுவும் அவரது திருமண ஆடையுடனேயே! அப்போதுதான், அந்த ஏரியில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்து மூழ்கிக் கொண்டிருந்ததை மற்றவர்கள் கண்டனர்.

நீருக்குள் பாய்ந்த வேகத்தில் சிறுவனைப் பிடித்து இழுத்துக் கரைசேர்த்தார் மணமகன். பின்னர், முற்றாக நனைந்த திருமண ஆடையுடன் அவரும் கரையேறினார்.

இந்த நிகழ்வைக் கச்சிதமாகப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர், அதை சமூக வலைதளத்தில் பதிவேற்ற, இப்போது அந்த மணமகனுக்கு ஏகப்பட்ட வரவேற்பும், பாராட்டும்!

சீனாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை!!

சீனா முழுவதும் கடந்த சில மாதங்களாக பலமுறை வட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது வட்ஸ்அப் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பேஸ்புக் செயலி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பேஸ்புக் போன்றே colorful baloons என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வட்ஸ்அப் செயலிக்கு சீனா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பலமுறை வட்ஸ்அப் பயன்பாட்டில் தடை ஏற்பட்டு வந்தது. வட்ஸ்அப் பயனர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் சீனாவில் வட்ஸ்அப் சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

வட்ஸ்அப் போன்று பல செயலிகள் சீனாவில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் கிரேட் பயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வட்ஸ்அப் இடையூறை ஏற்படுத்தியதை தொடர்ந்து முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச சிம் காட்டுகளை பயன்படுத்தும் வட்ஸப் பயனர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையுடனான காலநிலை : மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த மாவட்டத்தின் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அவதான பகுதிகளில் வாழும் மக்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சூழலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்!!

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை நேற்று (26.09) நியமித்துள்ளது.

இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் ரஜரட்டை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை மேற்கொண்டவராவார்.

இதேவேளை, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய W.A.சூலானந்த பெரேரா, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நீதிமன்றத்தை ஏமாற்றிய பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு சிறை!!

நீதிமன்றுக்கு அபராதமாகவும், பிணைத் தொகையாகவும் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றத்தின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் தலைமைப் பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு 22 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்றரை வருட காலத்தினுள், குறித்த பதிவாளரும் மேலும் ஐந்து பேரும் நீதிமன்றில் செலுத்தப்பட்ட பிணைத் தொகைகள் மற்றும் அபராதத் தொகைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்து வந்துள்ளனர்.

இது குறித்த விசாரணையின்போது, குறித்த பெண் பதிவாளர் தாம் தவறிழைத்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தின் பேரிலேயே தாம் அவ்வாறு மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் இழைத்த குற்றத்திற்கு மற்றொரு தண்டனையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காரணிகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுவாரச்சி, 22 மாத சிறைத் தண்டனையை அந்தப் பதிவாளர் பத்து வருடங்களுக்குள் அனுபவிக்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

சுமார் பத்தொன்பது மில்லியன் ரூபாவை மோசடி செய்த முன்னாள் தலைமைப் பதிவாளருக்கு, சிறைத் தண்டனையுடன் 13,500 ரூபாவை அபராதமாகவும் அரசுக்கு நட்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் : வடகொரியா!!

தாக்குதல் நடத்தும் முனைப்புடன் நாட்டுக்குள் நுழையும் அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நியூயோர்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, தங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்கா தான் அறிவித்ததாக குற்றம் சாட்டினார். எனவே அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வடகொரியா தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவின் வான் எல்லையில் மட்டுமல்ல, எல்லைக்கு வெளியே பறக்கும் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரி யோங் ஹோ தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விசானா சேன்டஸ், வடகொரியாவின் மீது போர் தொடுக்கும் அறிவிப்பு எதுவும் அமெரிக்கா வெளியிடவில்லை என்றார்.

ஒரு நாட்டின் வான் எல்லையில் இருக்கும் விமானங்களை மற்றொரு நாடு சுட்டு வீழ்த்துவோம் என்று கூறுவது சர்வதேச நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் சாரா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இலக்கில் மாற்றமில்லை என்ற அவர், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதையே அமெரிக்கா விரும்புவதாக கூறியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் இவைதான்!!

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியாகவுள்ளன.

இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28ம் திகதி வௌியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.