திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி : மயிரிலையில் ஆஸி தோல்வி!!

நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.

இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் புரூம் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த போல்க்னர், ஸ்டொனிஸ் 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.

போல்க்னர் ஆட்டமிழக்க நிலைத்து நின்று ஆடிய ஸ்டொனிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதி விக்கட்டில் 19 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை மாத்திரம் பெறவேண்டிய நிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணி ஹஷல்வூட்டின் கவனயீனம் காரணமாக 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டொனிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

மும்பை விமான நிலையத்தில் இரு இலங்கையர் கைது!!

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இவரும் குறித்த பணத் தொகையை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மும்பை விமானநிலைய சுங்க பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

ரயிலில் மோதுண்டு நபரொருவர் பலி!!

கொழும்பு கோட்டையில் இருந்து காலி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்துதுறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராமசேவையாளர் கைது!!

வவுனியாவில் நேற்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்கும் தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு பின்புறமாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டடப் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அவர்களின் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் சில பொருட்களை நெளுக்குளம் கிராமசேவையாளர் அதிகாலை வேளை களவாடியுள்ளதாக குறித்த நீர் தாங்கி அமைக்கும் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலுள்ள ஊழியர் அங்கு பணிபுரியும் தொழிநுட்பவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கிராம சேவையாளரின் காரியலாயத்திற்குள் வெளியிலிருந்து உள்ளே பார்வையிட்டபோது குறித்த நிறுவனத்திற்குரிய பொருட்கள் கட்டட நிர்மாணப்பணிக்குப்பயன்படுத்தும் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் கிராமசேவையாரை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவருகின்றது.

வவுனியா மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழா!!

 
செட்டிக்குளம் மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் வி.தர்மகுலசிங்கம் தலைமையில் நேற்று (29.01.2017) மதியம் 1 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடம் பாடசாலையின் அதிபர்.வி.தர்மகுலசிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தற்போது 25000 ஆக காணப்படுகின்ற பல்கலைக்கழக அனுமதி 50000 ஆக மாற்றப்படவுள்ளது. ஆகவே தமிழ் மாணவர்கள் இந்த மாவட்டத்திலிருந்தும் வடமாகாணத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் அதிகளவான மாணவர்கள் பல்கலைக உயர்கல்விக்கு செல்ல வேண்டும் . இந்த கல்வியுடாக தான் எதிர்காலத்திலுள்ள எமது சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணமுடியும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ந.சிவசக்தி ஆனந்தன் ( வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) , சிறப்பு விருந்தினராக த.தியாகராஜா ( வடமாகாணசபை உறுப்பினர்) , கௌரவ விருந்தினராக எஸ்.யேசுதாசன் ( கோட்டக்கல்வி பணிப்பாளர்- செட்டிக்குளம்), பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கையெழுத்து வேட்டை!!

 
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன.

இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்திட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் (28.01.2017) வவுனியா காலை 10.00 மணிக்கு புட்சிட்டிக்கு அருகே இவ்வாறான பிரச்சாரமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

கடந்த 18ம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையேழுத்து வேட்டை 03ம் திகதி தலைமன்னாரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாங்குளம் பகுதியில் பேரூந்து விபத்து : 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!!

 
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து மாங்குளத்தில் நேற்று (29.01.2017) இரவு 9.15 மணியளவில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.

யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவ நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வீதியில் நின்ற எருமை மாட்டு கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன.

வீதியில் நின்ற மாட்டுக் கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் சிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் பலியான மற்றும் காயமடைந்த மாடுகளின் பெறுமதி 15 லட்சத்துக்கும் மேலானதாகும். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதோடு அதிகளவான கால்நடைகளும் அழிந்து வருகின்றன.

கால்நடைகளால் பயனை அடையும் உரிமையாளர்கள் அவற்றை உரியவகையில் கட்டி வளர்த்து பராமரித்தால் இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு பெருமளவில் வருமானத்தை ஈட்டித்தரும் கால்நடைகள் அநியாயமாக அழிந்து போவதை தடுக்கலாம் என்பதோடு அநேகமான விபத்துக்களையும் மனித உயிரிழப்புக்களை தவிர்க்கமுடியுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னையும் கைது செய்யுங்கள் : நடிகர் சிம்பு பரபரப்பு ப் பேட்டி!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதாக கூறி பொலிசார் சிலரை கைது செய்துள்ளனர்.

போராட்டக்களத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கலவரத்தில் ஈடுப்படவில்லை என்றும், போராட்டத்தை திசை திருப்பவே இவ்வாறு தகவல்கள் பரப்பப்பட்டு கைது நடந்ததாக சிம்பு குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு அடைக்கலம் அளித்த மீனவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதும், கைது நடவடிக்கை மேற்கொண்டதும் கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்திற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், இப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற தன்னையும் பொலிசார் கைது செய்ய வேண்டும் என சிம்பு கூறியுள்ளார்.

மேலும், போராட்டக்களத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை கொச்சைப்படுத்தும் விதத்தில் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

தற்போது வரை சிலரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கான காரணம் மர்மமாக இருப்பதாக சிம்பு காவல் துறை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தான் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவேன் என நடிகர் சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி : ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு!!

மக்கள் விரும்பினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெ.தீபா கூறியதாவது, மக்கள் விரும்பினால் நிச்சயமாக அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். ஆனால், அதற்கு முன்னரே எங்களுடைய முடிவுகளும் அறிவிப்புகளும் அறிவிக்கப்படும்.

தொண்டர்களின் முடிவுகளை பரிசீலித்து வருகிறோம். இப்பொழுது, பெரும்பாலான கருத்துகள் என்னவென்று தெரியவந்துள்ளது.

என்னை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுவது நான் அரசியலுக்கு வருவதை பலர் விரும்பவில்லை என்பதை வெளிகாட்டுகிறது.

பிரபல பத்திரிக்கைகளில் கூட தவறான செய்தி வெளியிட்டு வருகின்றன. இது வருந்ததக்கது. இனைஞர்கள் புதிய தலைமுறையினர் அரசியலுக்கு வருவதை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

அதனால், இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பதாக கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம் : பின்னணி என்ன?

இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலிலே பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களுக்கு அளித்த பயிற்சி குறித்து அவர் இன்று அறிக்கை தெரிவிக்க வேண்டியிருந்துள்ளது.

ஆனால், நேரம் கடந்தும் ராஜேஷ் சாவந்த் வராததால். அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சாவந்த் இந்தியா வருவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

சாவந்த் யுவராஜ், தோனி அடங்கிய இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராஜேஷ் திகழ்ந்தார். அதுமட்டுமின்றி ராகுல் டிராவிட் உடன் இணக்கமான பயிற்சியாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களுக்குமேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுங்கள்!!

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு அபாயம் காணப்படுவதனால், சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இந்த வருடத்தில் தற்போது வரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 508 பேர் டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் மேல் மாகாணத்தில் 43 வீதமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுகொள்ளுமாறும், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடிக்கச் சென்ற தந்தை, மகன் சடலமாக மீட்பு!!

 
மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்றிரவு ‘குள்ளா’ என அழைக்கப்படும் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் உயிரிழந்தவாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

மன்னார் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான ஜெஸ்மன் (வயது-49) என்பவர் தனது இளைய மகனான ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தேடுதல் பணிகளை குடும்பத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

படகு கடலில் மூழ்கியமையினாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சென்னை வன்முறை தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்கள்!!

சென்னையில் கடந்த 23ம் திகதி அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது எவ்வாறு? என்பது தொடர்பாக கூடுதல் ஆணையாளர் சங்கர் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு செவ்வியளித்தார். அப்போது அவர் வன்முறை சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்து விளக்கினார்.

குறிப்பாக அவர் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடந்த 23ம் திகதியன்று அமைதியான முறையில் கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். பொலிஸார் லத்தி இல்லாமல் வெறும் கையுடன் தான் இருந்தனர்.

ஆனால் பொலிஸாஸார் தடியடி நடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பிவிட்டார்கள். இந்த நிலையில் மாணவர்கள் போர்வையில் விஷமிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.

பின்னர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்களை கூடுதல் ஆணையாளர் சங்கர் பத்திரிகையாளர்களுக்கு திரையில் போட்டு காண்பித்தார்.

அதில், ஐஸ் அவுஸ் பொலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது, எழும்பூர் நாயர் பாலத்தில் இணை ஆணையாளர் சந்தோஷ்குமார் கார் கலவரக்காரர்களால் தாக்கப்படுவது, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் சூறையாடப்படுவது உள்பட பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக மெரினாவை ஒட்டியுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதற்காக பெண்கள் வீட்டு வாசலில், மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து பாக்கெட்டில் அடைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பரபரப்பு காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருவதாக கூடுதல் ஆணையாளர் சங்கர் தெரிவித்தார்.

பேட்டியின் போது கூடுதல் ஆணையாளர் சேஷசாயி உடனிருந்தார். அவரிடம் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோவுக்கு தீ வைத்த போலீசார் மீது மட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சேஷசாயி பதில் அளித்து கூறும்போது, ‘2 பொலிஸாரை மட்டும் வைத்து ஒட்டுமொத்த போலீசாரையும் மதிப்பிடக் கூடாது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை (நாளை) தெரிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது பின்லேடன் படத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக வாசங்களை ஏந்தி நின்ற நபர்கள் ஆகியோருடைய படங்களை கூடுதல் கமிஷனர் சேஷசாயி வெளியிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுமையான வறுமையிலும் 60 வருட வரலாற்றை மாற்றிய மாணவி!!

மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் வணிக பிரிவில் கல்வி கற்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மொனராகலை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்தின் மிகவும் வறுமையான பிரதேசமான கொட்டியாகல முகலங்யாய 10ஆம் மையில் கல் பிரதேசத்தை சேர்ந்த ரொஷானி ஜயமாலி என்ற மாணவியே திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மொனராகல நகரத்தில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சிறிய வயது முதல் கல்வி மீது அதிக திறமை கொண்டவராக காணப்பட்டுள்ளார்

தனது வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஷானி,

நான் முதலாவது கல்வியை கொடியாகல ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தேன். 2007ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் 152 புள்ளிகளை பெற்றுக் கொண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்து, மொனராகல மஹாநாம தேசிய பாடசலையில் இணைந்தேன்.

அங்கு கல்வியை சிறப்பாக மேற்கொண்டு சாதாரண தரத்தில் 7 ஏ சித்திகள் மற்றும் 2 சீ சித்திகளை பெற்றுக் கொண்டேன்.

உயர்தர கல்வியை சிறப்பாக மேற்கொண்டமையினால் 3 ஏ சித்திகளை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. பாடசாலையில் எனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் என்னை சரியான பாதையில் செல்ல வழி நடத்தினர்.

கொடியாகல வித்தியாலயத்தின் 60 வருட வரலாற்றில் சிறப்பான சித்தியை பெற்ற முதல் மாணவி இவராகும். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ள நிலையில் அவர் மாத்திரமே உயர்தரத்தில் சிறப்பான சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

சமூர்த்தி உதவி பெற்று வாழும் குடும்பமாக ரொஷானியின் குடும்பம் தற்போது மண் வீடு ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறார். வறுமை அவரது கல்வி பயணத்தின் வெற்றிக் தடையாக காணப்படவில்லை.

விவசாய நடவடிக்கையில் வாழும் அவரது பெற்றோர் முடிந்தளவு அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளனர். அதற்கமைய அவர் சிறப்பான சித்தியை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முகநூல் தொடர்பால் யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த தொடர்புகளால் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குருணாகல் – சந்தலங்காவ என்ற பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுடன் முகநூலூடாக நண்பர்களாகி பின்னர் காதல் வயப்பட்டுள்ளனர்.

முகநூலில் அறிமுகமான இவர்கள் இருவரும் பல முறை சந்தித்துள்ளனர்.

இதேவேளை இளைஞனினால் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.

மேலும் இளைஞனிடமிருந்து ஒதுங்கி செல்ல நினைத்த யுவதிக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளதுடன், தன்னுடன் வறுமாறும் அழைத்துள்ளார்.

இவ்விடயம் யுவதியின் வீட்டாருக்கு தெரியவரவே குறித்த இளைஞனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன் எற்கனவே திருமணமானவர் எனவும் கூறப்படுகின்றது.

நன்மையான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டிய முகப்புத்தகத்தினை இன்றைய இளம் சமுதாயத்தினர் அதிகமாக தீமையான விடயங்களுக்கே பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் பெண்கள் எடுக்கும் தவறான நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடுகின்றது.

எனவே இனிவரும் நாட்களில் பெண்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோசமான காலநிலை : யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் மூன்று உயிர்பலி!!

நாட்டின் நிலவி வரும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன. நீரில் மூழ்குதல் மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்று வரையில் மூன்று மரணங்கள் சம்பவத்துள்ளன.

மட்டக்களப்பு மன்முனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஒன்பது மாகாணங்களில் சுமார் எழுபத்து ஒரு லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மேல், தென், வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்கள் அதிகளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான காற்றினால் நான்கு வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன், 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பில் நேற்றுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில் 236 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. 236 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.

நட்டை அண்டிய கடற்பரப்பிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடி மின்னல் தாக்குதல் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக நாட்டில் கடுமையான வரட்சி நிலைமை நீடித்து வந்ததுடன் மழை வேண்டி பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.